பாலனின் வாடாத "மல்லி"

நாஞ்சில்
May 07, 2013 04:46 பிப

“மல்..ல்..லி..ஈ..’

... .... ...

யெடீ.. மல்லி..!

“ஓ....... என்ன.. ... ஐயா இப்படி சவுண்டு உடுரீக..? “

ஈர கையை முந்தானை தலைப்பில் துடைத்து கொண்டே பாலனின் மனைவி மல்லிகா தன் குடிசைவீட்டின் பின்பக்கத்தில் இருந்து வருகிறாள்.

“என் ராசாக்கு என்னாச்சு.. குளிக்காம வயகாட்டுமண்னோட வந்து இருக்கு.... குளத்துலே தண்ணீ வத்தி போச்சாக்கும்..?”

பாலன் கோபமாக பேசும்போது மல்லிகா இப்படிதான் சிணுங்கி பேசி அடக்கி விடுவாள்.

“இல்ல புள்ளே... ஒரு வார வேலசெய்த கூலி கிடைச்சிது... குளிச்சிட்டு வரலானு குளத்தாண்ட போனேன். குளக்கரைலே பரசு (பரசுராமன்) குளிச்சிட்டு இருக்கான். காசை கண்டால் கடன் கேப்பான். அதான் புள்ளே வந்துட்டேன். இந்தா.. பணத்தை புடி, நான் போயி குளிச்சிட்டு வரேன்”

பாலன் பணத்தை மனைவியின் கையில் கொடுத்துவிட்டு மண்வெட்டியை தோளில் பிடித்து கொண்டு குளத்தை நோக்கி நடையை கட்டுகிறான்.

“என்ன குழம்பு வச்சு இருக்கே மல்லி..?”

குளிச்சு முடிச்சு வீட்டுக்கு வந்த பாலன் ஈர தலையை விரல்களால் கோதி கேட்டு கொண்டே வீட்டுக்குள் நுழைகிறான்.

“வராலு மீனு வறுவலா வச்சு இருக்கேன்.. வாய்க்கு ருசியா நெறைய சாப்பிடு..”

மல்லிகா சிரித்து கொண்டே அவனுக்கு பரிமாறுகிறாள்.

“நீயும் கூடயிரு மல்லி.. தட்டு எடு.. ஒண்ணா சாப்பிடுவோம் “

பாலனின் அழைப்புக்கு ஏங்கியவள் போல அவசரமாய் தட்டு எடுத்து அவளும் அமர்ந்தாள்.

“ஆமா வராலு மீனு ஏது மல்லி..?”

“வேல முடிஞ்சி வரம்போ மஞ்சாடி குளத்துலே வல போட்டு மீனு புடிச்சிட்டு இருந்தானுவோ. பாத்தப்போ விராலு மீனு..! உனக்கு புடிச்ச மீனாச்சேனு வாங்கியாந்தேன்..”

“ம்ம்ம்ம்...கூலி காசு பாக்க தொடங்கிட்டே.... ராணியை இனி கையில் புடிக்க முடியாதாக்கும்....”

மீனை ருசித்து சாப்பிட்டு கொண்டே இட கண்ணால் மல்லியை பார்த்து நமுட்டு சிரிப்போடு சொன்னான் பாலன்.

“ஏன் புடிக்க முடியாதாம்..? இந்த ராணியும் காசும் என் ராசாவுக்குதான் சொந்தம்..”

மல்லிகா சொன்னதும் பாலன் தலையை உயர்த்தி அவளை ஓரமாக பார்கிறான்...

“ம்ம்ம் பார்வ இப்படி போவுது..? இப்பதான் முதல்லே பாக்குறத போல பாக்குற...?”

மல்லிகா சொன்னதும்.. “கொஞ்சம் சோறுவை புள்ளேன்னு” சமாளித்து சாப்பிட்டு விட்டு இருவரும் எழும்பினார்கள்.

“என்ன மல்லி..! அங்கெ என்ன செய்திட்டு இருக்கே..?” தரையில் பாயை விரித்து படுத்து பதினைந்து நிமிடம் வரை காத்து இருந்துவிட்டு பாலன் குரல் கொடுக்கிறான்.

“இதா முடிஞ்சாச்சு..” சாப்பிட்ட பாத்திரங்கள் கழுவி வைத்து, மீதி சோறையும் கறியையும் பத்திர படுத்திவிட்டு மல்லி பாலனின் அருகே வந்து அமருகிறாள்.

“என்னே ராசாவுக்கு மூடு வந்துட்டுதாக்கும்..?”

“அது இல்ல புள்ளே.. சாப்பிடும்போ நீ சொன்னால்லே.. முதல்லே பாக்கிறத போலன்னு... அத நினச்சு பாத்தேன்.... .... உனக்கு நெனவு இருக்கா மல்லி...?”

பாலன் பாயை விட்டு எழும்பி தலையணையை முதுகுக்கு கொடுத்து சுவரோடு சாய்ந்து கொண்டு மல்லியை அணைத்தவாறு கேட்டான்.

“என்னெ இப்புடி கேட்கிற..? அதெப்படி மறக்குறது..?” மல்லியும் பாலனோடு சேர்ந்து பழைய நினைவுக்கு போனார்கள்.

நான்கு வருடங்கள் முன்பு...

மல்லிகாவுக்கு மாப்பிளை தேடி கொண்டு இருந்தார்கள்.

பண்ணையாரின் தென்னை தோப்பையும் வயல்களையும் மேற்பார்வை செய்து பாதுகாத்து கொண்டு இருந்த மல்லிகாவின் அப்பா குமாரசாமியிடம் ஒருநாள்...

“கோரசாமி...!” பண்ணையார் அழைக்கிறார்.

“என்னங்க மோலாளி...!” கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து பக்கத்தில் நிற்கும் மல்லிகாவின் அப்பாவிடம்

“பொண்ணுக்கு மாப்புள்ளே பாக்குறியோ”

“ஆமா ஐய்யா”

“ஏதாவது வாச்சுதா”

“பாக்க சொல்லி ஒரு வாரம்தான் ஆச்சு ஐய்யா”

“சரி பொண்ணுக்கு என்ன போட போற”

“புள்ள பெரியமனுசி ஆனப்போ அய்யா தந்த பணத்துக்கு வாங்குன கம்மலு, அப்புறம் சேத்து வச்சது எல்லாம் கூட்டி மூணு பவுனு தேறுமுங்க. அதுக்க கூட நான் இருக்கிற குடிசையும் அவளுக்கு கொடுக்கலாமுன்னு இருக்கேன்.”

“ம்ம்... இருக்கிற குடிசையை கொடுத்துட்டு நீ எங்க போவே”

... ... ...

அமைதியாய் நிற்கும் கோரசாமியின் மூளை இதுவரை அப்படி ஒரு எண்ணம் வந்து அதை நினைத்து பார்க்கவில்லை.

“சரி.. உன் குடிசையை மகளுக்கே கொடுத்துட்டு... நீ அந்த சப்பாத்தி தோப்பில் ஓரமா உனக்கு குடிசை போட்டுக்கோ..”

ஒரு பக்கம் வேலியாக சப்பாத்தி முட்புதர் நிற்பதால் “சப்பாத்தி தோப்புன்னு” பேரு அவ்வளவுதான்.

“சரிங்க ஐயா..”

“வேற என்ன..?”

“ஐயா.. அது... இப்போ இருக்கிற குடிசைலே கூரை வேஞ்சு நாளாச்சு. மழை ஒழுக்குக்கு பனை ஓலை நிறைய சொருகியும் ஒழுவுது.... ....”

“எத்தனை மட்டை ஓலை வேணும்.? சரி.. உனக்கு வேணும்கிறத அம்மாட்ட சொல்லிட்டு கொட்டையில் இருந்து எடுத்துக்கோ..!”

பண்ணையார் சொன்னதும் குமாரசாமிக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை.

“சரிங்க ஐயா... சரிங்க அய்யானு... “ கையெடுத்து கும்பிட்டுவிட்டு பண்ணையாரிடம் அனுமதி பெற்று வீட்டுக்கு ஓடுகிறார்.

குமாரசாமியின் நேர்மையான உழைப்பை தெரிந்து வைத்து இருக்கும் பண்ணையார் அவ்வப்போது இது போன்ற உதவிகளை செய்வதுண்டு.

“கேட்டியாடி..மல்லி.. பண்ணையார் கூரை மேய ஓலை மட்டை எடுத்துக்க சொல்லியாச்சி. நாளைக்கே “கதிர” (கதிரேசனின் சுருக்கு) வரசொல்லி கூடநின்னு கூரையை மேஞ்சிடனும் நீயும் எங்காட்டும் போயி தொலைஞ்சிடாதே .

” மறுநாள்.. கூரை போட்டு முடித்துவிட்டு குளிப்பதற்கு குளக்கரை நோக்கி கதிரேசனும் குமாரசாமியும் நடக்கிறார்கள்.

“மவளுக்கு மாப்பிள்ளை ஏதாவது ஒத்துகிச்சா ..”

“இல்லே கதிரு.. காசு பவுனு நெறைய கேக்குறாக.. நமக்கு தோதா வரணுமில்லே..!”

“எனக்கு தெரிஞ்ச ஒரு ஆளு இருக்கான். கொஞ்சம் சொந்தமுனும் வச்சுக்கோ.. பாலன்னு பேரு. தினகூலி வேலை எடுப்பான்.. வயகாட்டு வேலை அத்துபடி.. பொன்னு பணமுனு ஏதும் வாங்காம கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லி பொண்ணு தேடுறான். அவனுக்கு உம்பொண்ண கொடுக்கிறியா..?”

“உனக்கு தோதா படுதுனா நீயே மாப்பிள்ளையை கூட்டி வந்து முதல்லே காமி.” குமாரசாமி ஒரு தவிப்போடு சொன்னார்.

அந்த வாரமே கதிரேசன் பாலனோடு குமாரசாமியின் வீட்டுக்கு வருகிறார்.

“கோரசாமி.. ... ...”

கதிரேசன் கூப்பிட்ட குரலுக்கு எந்த பதிலும் இல்லை. சுற்றும் பார்த்துவிட்டு

“பாலா நீ இந்தாண்ட நில்லு நான் அந்தாண்ட போய் கையோட கூட்டிட்டு வாரேன்..”

கதிரேசன் பாலனிடம் சொல்லிவிட்டு பண்ணையார் வீடு நோக்கி செல்கிறார். கதிரேசனின் தலை மறைந்ததும் பாலன் சுற்றும் முற்றும் பார்கிறான். எங்காவது இருபதற்கு இடம் கிடைக்குமா என்று....

“யாரு..?”

நம்ம மல்லிகாவின் குரல்.

பாலன் குரல் கேட்டு திரும்பி.. திரும்பி பார்கிறான்.

“யாரு நீ....? என்ன வேணும்..?”

திரும்பவும் குரல்....

“கதிரேசன்..” கூட்டி வந்தவரின் பேரை சொல்கிறான்.

“கதிரேசனு யாரும் இங்கே இல்லே....” மல்லிகாவின் பதில்.

“அது இல்லே.. நான் கதிரேசன் கூட வந்தேன்.. அவருதான் என்ன நிக்க வச்சுட்டு இந்தாண்ட போனாரு..“

பதில் சொல்லி கொண்டே இவள்தான் பெண் என்று யூகித்து கொண்டு ஒரு பார்வை பார்த்து இவள் போதும் என்று சட்டென மனதுக்குள் முடிவு செய்கிறான்.

“கதிரேசன் மாமாயா..! அவுக எங்கே..?” மல்லிகாவின் கேள்வி.

“என்ன இங்க நிக்க சொல்லிபுட்டு கோரசாமியை கூப்பிட போயிருக்காரு..!”

“கோரசாமி எதுக்கு?” மல்லிகாவின் குறுக்கு விசாரணை.

“அவருக்க பொண்ண பாத்துட்டு போலாமுன்னு வந்து இருக்கேன்”

இதை பாலன் சொல்லி முடிப்பதும் மல்லிகா வீட்டுக்குள் மறைந்ததும் சரியாக இருந்தது.

“இந்தாங்க.. இதவிரித்து திண்ணையில் உக்காரு..!

வீட்டுக்குள்ளே நின்றவாறு வாசல் வழி ஒரு கோரை பாயை வெளியே நீட்டினாள் மல்லிகா.

“உன் பேரு ..?”

“மல்லிகா..!”

“உங்க பேரு..?”

“பாலன்..!” கோபாலன் என்ற தன் பெயரை கோவாலு.. கோவாலுனு கூப்பிட்டதை பிடிக்காமல் பாலன் என்று விவரம் வந்ததும் சுருக்கி வைத்து கொண்டான்.

முதல் பார்வை பதிவுகளை மீண்டும் ஓட விட்டு அப்படியே கட்டி அணைத்து தூங்குகிறார்கள் மல்லியும்.. பாலனும்..!

மல்லிகாவுக்கு இப்போதெல்லாம் இது போன்ற இரவுகள் அமைவது அத்தி பூத்தது போல எப்போதாவது நிகழும் அதிசயம். அப்படி அமையும் நாளே அவளுக்கு தீபாவளி, பொங்கல் எல்லாமே...! காரணம் இருக்கு... ...

குமாரசாமிக்கு வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுகிற பாலனை எப்படி பிடிக்காமல் இருக்கும்..! நிச்சயிச்சபடி பண்ணையார் தலைமையில் கல்யாணம் நடந்து முடிந்தது. முதல் ரண்டு வருடம் மல்லியை கண் கலங்காமல் தினமும் கூலிவேலை செய்து அவள் கேட்டது எல்லாம் வாங்கி கொடுத்து ஏழைகளுக்கான சந்தோசத்தோடு வாழ்க்கை சென்றது. இந்த நாட்களில் ஆண்மைக்கே சொந்தமான தனக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்ற கனவு பலிக்காமல் இனி பிறக்காதோ என்ற ஏக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அடி மனதில் பாலனுக்கு உருவாகி இனி நமக்கு குழந்தை பிறக்காது என்ற மனநிலைக்கு தள்ளபட்டான்.விளைவு.. ...

குடி பழகத்துக்குள் குடி புகுந்தான் பாலன். ஆரம்பத்தில் குடித்துவிட்டு அமைதியாக இருக்கும் பாலனை கண்டுக்காமல் விட்ட மல்லியும் நாட்கள் செல்ல செல்ல அவனது குடி அளவு கூடி தினமும் அவனது அடியையும் பேச்சையும் தவிர்க்க முடியாமல் தாங்க தொடங்கினாள்..!

அடிகடி கூலி வேலைக்கு போகாமல் வீட்டில் முடங்கி கிடக்கவும் தொடங்கினான் பாலன். சாப்பாட்டுக்கு இலவசமாக கிடைக்கும் பொருளோடு இவனது கூலியையும் வைத்து வறுமை கோட்டுக்கு கீழே என்றாலும் பசி கோட்டை தொடாமல் வாழ்ந்து கொண்டு இருந்தவளுக்கு அந்த கோட்டையும் அடிகடி தொடும் நிலைமை வந்தது. ஒருவருடம் இப்படி தள்ளாடி கழிந்தது. அப்பாவிடம் சொல்லி பலனில்லை. ஒருநாள் வேறு வழியில்லாமல் பண்ணையாரை போய் சந்திக்கிறாள் மல்லிகா.

“மல்லி வந்து நிக்குது..!” வேலையாள் வீட்டினுள் இருக்கும் பண்ணையாரிடம் சொல்ல அவர் வெளியில் வந்து.. ..

“யாரு மல்லியா.. என்ன..?” வாய் நிறைய வெற்றிலை பாக்கு போட்டு இடக்கையால் துடைத்து கேட்டவாறே சாய்வு நாற்காலியில் அமருகிறார்.

“அது.. வந்து.. அவருக்கு உடம்புக்கு முடியல்லே... வேலைக்கு போயி நாளாச்சு. எனக்கு ஏதாவது வேலை இருந்தால் போட்டு கொடுங்க அய்யா...”

அளவுக்கு மீறிய குடியினால் வேலை செய்ய தெம்பு இல்லாமல் பாலன் வீட்டில் முடங்கி கிடப்பதை மறைத்து தனக்கு வேலை கேட்டாள் மல்லிகா.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த பண்ணையார் வெற்றிலை சாறை துப்பியவாறு வாய் திறந்தார்..

“நீ போயி நம்ம பஞ்சாயத்து தலைவரை பாரு. ஏதோ இந்திராகாந்தி திட்டமுன்னு பெண்களுக்கு வேலை போட்டு கொடுப்பதா சொன்னாங்க.. நான் அனுப்பிச்சதா அவரிட்ட சொல்லு... போ..” சொல்லிவிட்டு பண்ணையார் எழும்பி உள்ளே போக பண்ணையார் மனைவி மல்லிகாவை அழைக்கிறாள்.

“மல்லி.. பொறபக்கம் வந்துட்டு போ..!”

கட்டளை ஏற்று பின்பக்கம் சென்று பண்ணையார் மனைவி கொடுத்த அரிசியையும் தேங்காய் மூடியையும் மரவள்ளி கிழங்கையும் சேர்த்து அணைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து சேருகிறாள்.

மறுநாள் காலையில் பண்ணையார் சொன்னபடி பஞ்சாயத்து தலைவரை போய் பார்க்கிறாள் மல்லி.

“ஐயா.. பண்ணையாரு சொல்லி வந்தேன்யா..”

“எதுக்கம்மா.. என்ன வேணும்..?”

“எனக்கு வேலை கேட்டு பண்ணையார் வீட்டுக்கு போனேனுங்க.. அவுக ஐயாவை வந்து பாக்க சொல்லிச்சு..”

“உன் பேரு என்னம்மா ?”

“எம்பேரு மல்லிகாங்க”

“எத்ராம் வகுப்பு படிச்சிருக்கே?

“நாலாம் வகுப்பு” பள்ளிகூடத்தில் இலவச சத்துணவு போட்டதுனாலே சாப்பிட போனதை பாவம்.. தலைவருட்ட தனது படிப்பு தகுதியா சொல்கிறாள்.

“சரிம்மா... இந்திராகாந்தி வேலைவாய்ப்பு திட்டதுலே பெண்கள் வேலை செய்றாங்க. அவங்க கூட சேர்த்து விடுறேன். கூட சேர்ந்து ஒத்தாசையா வேலை செய்யணும். போயிட்டு நாளைலேருந்து வேலைக்கு வா.. ஒரு கிழமைசேர்த்து கூலிய வாங்கிக்கோ. மறக்காம நாள வரம்போ குடும்ப அட்டையை கையில் எடுதுக்கோ...”

வேலைக்கு வர சொன்ன சந்தோசத்தோடு தன் குடிசைக்கு வருகிறாள்.

“எங்கடி போயிருந்தே..?”

“பஞ்சாயத்து தலைவர பாத்திட்டு வரேன்..”

“இலவசமா புதுசா என்ன போட்டாங்க..?

“எப்போ பாரு இலவசத்தையே நினச்சிட்டு இருக்கியே.. நான் போனது பண்ணையாரு சொல்லி.. எனக்கு ஒரு வேலை போட்டு கொடுதிருகாங்க. கிழமையானா கூலி கிட்டும். நாளைலேர்ந்து வரேன்னு சொல்லிபுட்டு வந்தேன்...”

பண்ணையார் பேரு வந்ததால் பாலன் வாய் திறக்க வில்லை.

மறுநாள் முதல் வேலைக்கு போக தொடங்கினாள் மல்லிகா.

அவள் கொண்டுவரும் கூலி பாலனுக்கு அடிகடி குடிப்பதற்கும் உதவியது. பாலனும் வீட்டில் தனியாக இருக்க மனமில்லாமல் தோணும்போது வயகாட்டுக்கு வேலைக்கு போய் வந்தான். ஆனால் வரும்போது கிடைக்கிற கூலிக்கு குடித்துவிட்டு வர மட்டும் தவறமாட்டான். போதை அதிகமானால் மல்லிகாவை கும்மி அடிக்கவும் மறக்கமாட்டான். சென்ற ஒரு வருடமாக இது தொடர்கிறது. வழக்கம்போல் இந்தகிழமை மல்லிகா வேலை முடித்து கூலி கிடைத்த நாளில்தான் விரால் மீன் வாங்கி வந்து குழம்பு வைத்து முதன்முதலா பார்த்த கதை பேசிவிட்டு அணைத்தபடி தூங்குகிறார்கள். அதுவும் குளக்கரையில் பரசுவை கண்டதால் பாலன் சாராய கடைக்கு செல்ல முடியாமல் குடிசைக்கு வந்ததன் விளைவு..! மல்லிகாவுக்கு தீபாவளியும் பொங்கலும் அன்று அமைந்தது.

பொழுது புலர்ந்தது..

மல்லிகா குளித்துவிட்டு வேலைக்கு புறபட்டாள்..!

போகும் முன் நேற்று மீதமிருந்த சாதமும் கறியையும் பாலன் சாப்பிட வேண்டி பரிமாறி மூடி வைத்து விட்டு சென்றுவிட்டாள்.

குடிக்காத அசதியில் சோம்பல் முறித்து எழும்பினான் பாலன். ஏதோ குச்சியாலே பல்லை தேய்த்து விட்டு அவள் பணத்தை வைத்த இடத்தில இருந்து எடுத்து கொண்டு சாராய கடையை நோக்கி நடந்தான்..! குடித்துவிட்டு கையில் ஒரு குப்பி சாராயம் வாங்கி கொண்டு மழையில் நனைந்தபடி திரும்பி குடிசைக்கு வந்து சேர்ந்தான். மல்லிகாவும் மழை பெய்ய தொடங்கியதால் வேலைக்கு போகாமல் பாதி வழியில் திரும்பி குடிசைக்கு வந்து விடுகிறாள்.

“ம்ம் எங்கே வந்தே..?” பாலனின் போதை பேச்சு..

“மழை பெய்யிறது கண்ணுக்கு தெரியல்லே..!”

“அது கண்ணுக்கு தெரியுது.. நீ எதுக்குடி திரும்பி வந்தேன்னு சொல்லு?”

“வேலைக்கு போவ முடியல்லே திரும்பி வந்தேன்.. தள்ளு..” மழையில் நனைந்த புடவையோடு குடிசைக்குள்ளே போகிறாள் மல்லி.

“எனக்கு உன் முடிவு தெரிஞ்சுக்கணும்..” பாலன்

“தெரிஞ்சுக்கோ...” மல்லி

“நீ வேலைக்கு போறியா.. இல்லே நான் வேலைக்கு போணுமா..?” பாலன்

“நீ வேலைக்கு போனா நா எதுக்கு வேலைக்கு போறேன்..?” மல்லி

“புருஷன் வேலைக்கு போயி பொண்டாட்டி சாப்பிடனும்.. பொண்டாட்டி வேலைக்கு போயி புருஷன் சாப்பிட கூடாது... அது தப்பு..!” நாளைலேர்ந்து நீ வேலைக்கு போப்புடாது..!”

“சரி.. போகல்லே சாமி..!”

ஈர புடைவையை மாற்றி வேறு புடவைக்கு மாறிவிட்டு அடுப்பை பற்றவைத்து ஏதோ சமைக்கிறாள்..

மறுநாள் வழக்கம்போல மல்லிகா வேலைக்கு செல்கிறாள். பாலன் நேற்று போதையில் சொன்னதை நினைக்க வேண்டாம்.. அது குடிகாரன் பேச்சு.. ... தெரிந்த கதைதானே..!

பாலன் வேலைக்கு செல்வதும்.. குடிப்பதும்..மல்லியை அடிப்பதுமாக நாட்கள் சென்றது..!

இன்று.. தீபாவளி-பொங்கல் கொண்டாடிய இரவு (விரால் மீனு வறுவல் சாப்பிட்ட) சென்று இரண்டு மாதம் ஆகிவிட்டது. மல்லி உடம்புக்கு முடியாமல் எழும்பாமல் படுக்கையில் கிடக்கிறாள்.

“என்னடி இன்னைக்கி வேலைக்கு போவல்லே..?” பாலன் குடிக்க போகவா இல்லை கூலிக்கு போகவானு முடிவுபண்ணாமலேயே கேட்கிறான்.

“உடம்புக்கு முடியல்லே. என்ன வைதியருட்டே கூட்டிட்டு போவிய.. இல்லேனா நான் தனியாதான் போவணும் மழையும் வேற கொட்டுது..."

“சரி.. புடவை மாத்திட்டு இரு.. நான் கடைக்கு (சாராய) போயிட்டு வாரேன்...!”

என்று கூறி சட்டையை மாட்டி கொண்டு புறப்பட தயாரானவன் மல்லி எழும்ப முடியாமல் தவிப்பதை கண்டு அவளை பிடித்து தூக்கி சுவரோடு சேர்த்து இருத்திவிட்டு..

“இப்படி சாஞ்ச்சு இரு.. இப்போ வாரேன்னு..” சொல்லிவிட்டு பாலன் வெளியே மழைக்கு வாழை இலையை தலைக்கு மறைத்து பிடித்து கொண்டு போய் விட்டான்.

எழும்பி இருந்த மல்லி முடியாமல் தலை சுற்ற மீண்டும் படுக்கையில் படுத்துவிட்டாள்.

சற்று நேரம் கழித்து “மல்லி.. மல்லி..” என்று குரல் கொடுத்து கொண்டே பாலன் குடிசைக்குள் நுழைகிறான்.

“என்னடி அதுக்குள்ளார படுதுட்டியா..? எழும்பி இரு.. வைத்தியரை கையேடு கூட்டியாந்தேன் எந்திரி..!” ஒத்தாசையாக மல்லியை பிடித்து உட்கார வைக்கிறான்.

“வைத்தியரையா உள்ளார வந்து பாருங்க..” பாலன் அழைக்க வைத்தியர் குடையை சுருக்கி ஓரமாக வைத்து விட்டு உள்ளே வருகிறார்.

பாலன் கைத்தாங்கலாக பிடித்து இருக்கும் மல்லியின் கையை பிடித்து வைத்தியர் கண்ணை மூடி நாடி பார்கிறார்.

இரு கைகளால் கண்ணை திறந்து பார்கிறார்.

“நாக்க நீட்டு...”

மீண்டும் நாடி பார்கிறார்..!

சற்று மௌனத்துக்கு பிறகு..

“ஏம்மா.. முழுகாம இருக்கிதியா..?”

மல்லி பேச முடியாமல் தலையை மட்டும் “ஆமா” என்று ஆட்டுகிறாள்.

“அவள படுக்க வையப்பா.. கொஞ்சம் தண்ணி கொதிக்க வை...” வைத்தியர் சொன்னதும் அடுப்பை பற்றவைத்து தண்ணீரை சூடு பண்ணுகிறான். பாலனுக்கு ஒண்னும் புரியவில்லை.

“இந்தா வைத்தியரைய்யா..” கொதித்த தண்ணீரில் ஒரு பகுதியை வேறு பாத்திரத்தில் ஊற்றி துணியால் பிடித்துவைத்தியரின் பக்கத்தில் நீட்டுகிறான்.

வைத்தியர் தன் பையில் இருந்து பல பொடிகளை எடுத்து அந்த கொதித்த தண்ணீரில் இடுகிறார்.

"இந்தாப்பா.. ஒரு கரண்டி போட்டு பொடியை நல்லா கலக்கு. கரண்டியை நல்லா கழுவிக்கோ..” அவர் சொன்னபடி கலக்கி ஆற வைக்கிறான். சூடு குறைந்ததும் குடிக்க கொடுக்கிறார்.

மூன்று சிறு பொட்டலங்களை கொடுத்து மாலையும், மறுநாள் காலை மாலையும் இது போல கலக்கி குடிக்க சொல்கிறார்.

“என்ன வைத்தியரே.. உடம்புக்கு என்னாச்சு..”

“ஒரு உசிரு ரண்டு உசிரு ஆயிருகப்பா.. புள்ளதாச்சியா இருக்கா..! ரண்டு நாளா ஒழுங்கா சாப்பிடல்லே போலஇருக்கு. உடம்பு தளந்து போச்சு. பயபடாதே. பழங்க எதாச்சும் வாங்கி சாப்பிட கொடு. ரண்டு நாள் கழிச்சு வீட்டு பக்கம் வா லேகியம் தாரேன் தின்னகொடு சரியாய்டும்..”

வைத்தியர் சொன்னதும் சட்டை பையில் இருந்த (சாராயம் குடிக்க வைத்த) பணத்தில் அவர் கேட்டதை கொடுத்து அனுப்பி வைத்து விட்டு மல்லியின் அருகில் வந்து அமருகிறான்...!

“மல்லி.. வைத்தியர் சொன்னது நிசமா..?”

“ம்ம்ம் ...” என்று தலையாட்டுகிறாள்.

ஏதோ நினைவுக்கு வந்தவன் போல் அடுப்பில் கொதிக்கும் மீதி தண்ணீரில் கொஞ்சம் அரிசி எடுத்து கழுவி அதில் போட்டுவிட்டு திரும்பி மல்லியின் அருகில் வந்து அமர்ந்து கொண்டு... ...

“ஏம்மல்லி.. போன மாசமே சொல்லி இருக்கலாமில்லே..”

“எத்தரவாட்டி ஒரு மாசத்துலே சொல்லி அப்புறம் ஆயிடுசில்லே... அதான் இந்த வாட்டி ஒரு மாசம் மேல இருந்து பாத்தேன்..”

“ஏம்புள்ளே இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு..?”

“தலசுத்து போயிடுச்சு...“

“நான் கடைக்கு போயி எதாச்சும் வாங்கி வரட்டா.. அடுப்ப கொஞ்சம் பாத்துக்குவியா...”

“சீக்கிரமா வந்துரு..”

சின்னதாய் மழை பெய்தபோதும் பாலன் ஓட்டமும் நடையுமாக சென்று பொட்டி கடையில் இருந்து பிஸ்கட்டு, வாழைபழம், இனிப்பு ரொட்டியும் வாங்கி சட்டைக்குள் மறைத்து பிடித்து கொண்டு போனதைவிட வேகமாக குடிசைக்குள் நுழைகிறான்.

மல்லி வெந்துவிட்ட கஞ்சியை மூடி அடுப்பை சரிசெய்துவிட்டு மெதுவாக வந்து அமருகிறாள்..

“இந்தாபுள்ளே மொத வாய கழுவிட்டு இத தின்னு..” வாங்கி வந்ததை பாயின் ஓரத்தில் வைத்துவிட்டு மல்லியை பிடித்து எழுப்பி தலையில் மழை நீர் விழாமல் வாழைஇலையால் மறைத்து கொல்லை பக்கம் கூட்டி செல்கிறான்.

மல்லி முகம் கழுவி துடைத்து கொண்டு திரும்பி குடிசைக்குள் நுழைகிறார்கள்.

வாங்கி வந்ததை பாலனையும் சாப்பிட வைத்து மல்லியும் சாப்பிடுகிறாள்..!

பாலன் இப்போது மல்லியுடன் பேச்சு கொடுக்க தடுமாறுகிறான்.

“மல்லி.. நான் எம்புட்டு சந்தோசமா இருக்கேனு தெரியுமா..? எம்புடு கனவு வச்சேன்.. இந்தவாட்டி கடவுளு நம்ம கனவ ஏமாத்தமாட்டாருல்லே.... “

“கருமாரி அம்மனுக்கு நேச்சை வச்சு இருக்கேன்.. இந்தவாட்டி தாயி என்னை கைவிட மாட்டா..” மல்லி தன் நம்பிக்கையை அவள் குல தெய்வத்தின் மேல் வைத்தாள்.

மெதுவாக பாலன் மல்லியின் வயிற்றில் கைவைத்து பார்கிறான்.

“மல்லி.. எம்மேல உனக்கு கோவமா..? உன்ன அடிச்சிருக்கேன்.. என்னமா ஏசிருக்கேன்.. என்ன மன்னிச்சிரு மல்லி...”

“பெரிய வார்த்த எல்லாம் பேசாதே.. பொழுது சாஞ்சா போயி குடிச்சிட்டு வந்து என்ன உதைக்க போறே...!”

“நான் குடியாளா மாறிட்டேன்... அது ஏன்னு தெரியாதா மல்லி உனக்கு... இனி குடிக்க மாட்டேன் மல்லி..!” அவள் முகத்தை பார்த்து சொல்ல முடியாமல் சொல்கிறான்.

“நிசம்மா....! இனி சாராயம் குடிக்கமாட்டியா..?”

“உன்மேல சத்தியமா..!” னு அவள் தலையில் கையை கொண்டு போகிறான்.

“வேண்டாம்.. இதா இங்க என் வவுறு மேலே கைவச்சு சொல்லு..”!

“சத்தியமா இனி குடிக்க மாட்டேன்..!”

மல்லியின் வயிற்றில் கைவைத்து சொல்லிவிட்டு அவள் கையை பற்றி கொள்கிறான்.

பாலன் ஆணையிட்டு சொன்னதும் மல்லிக்கு மனதில் சந்தோசமும் நிம்மதியும் அலை மோதுகிறது. அது கண்களில் கண்ணீராய் வெளியே தெரிகிறது. ஆமாம்.. அவள் கண்ட இரு நிறைவேறாத கனவுகள் அல்லவா இன்று அவள் காதால் கேட்டு கொண்டு இருக்கிறாள்..!

“மல்லி.. நான் ஒண்ணு சொன்னா கேப்பியா..?”

“ம்ம்ம்....சொல்லு..”

“நீ இனி வேலைக்கு போவாண்டாம்.... நான் மட்டும் எல்லா நாளும் வேலைக்கு போறேன்”.

“நானும் வேலைக்கு போனா அந்த காசு பணம் மிஞ்சுமில்லே.. இந்த குடிசையை மாத்துலாமில்லே.!”

“அதெல்லாம் சரிதான் புள்ளே.. உன்ன இனி வேலைக்கு விடமாட்டேன்....!”

“இல்லேராசா.. பண்ணையாரு சொல்லி கெடச்ச வேல.. எனக்கு கஷ்டமொன்னுமில்லே போறேன் ராசா...!”

“வேண்டாம் புள்ளே..!” முடிவாக பாலன் சொன்னதும் மல்லியின் முகம் வாடிவிட்டது..!

“சரி புள்ளே... புள்ளதாச்சி முடிஞ்சபொறவு வேலைக்கு போலாம்.! அதுவர நான் மட்டும் வேலைக்கு போயி என் ராசாத்திக்கு எல்லாம் நான் வாங்கியாருவேன்... வேற ஒண்னும் நீ சொல்ல வேண்னாம்... எந்திரி கஞ்சிஆயிடுச்சு குடிப்போம்!”

பாலன் சொன்னது ஒருவிதத்தில் மல்லிக்கும் சரியாக பட்டது.

“நாளைக்கு நான் போயி தலைவர பாத்து விவரம் சொல்லிட்டு வாரேன்..” மல்லி அவனது வார்த்தைக்கு கட்டுபட்டு சம்மதம் சொன்னாள்.

மல்லியை பிடித்து எழும்பி உக்கார வைத்து அவனே மிளகாய் சுட்டு கஞ்சி பரிமாறுகிறான்.

“ராசா குடிகல்லியா.. அந்த தட்டயும் எடுத்து வை” மல்லி பாலனிடம் ஒரு தட்டை காட்டி சொல்கிறாள்.

“ராசாத்தி குடிச்சிட்டுத்தான் இனி இந்த ராசா குடிப்பாரு....”

மல்லிக்கு கஞ்சி ஊத்தி கொடுக்கிறான்.... அவள் சுட்ட மிளகாயும் கடித்து கஞ்சி குடிப்பதை ரசித்து பார்த்து கொண்டு அவள் அருகில் அமருகிறான் பாலன்.

வெளியே பெருமழைவிட்டு எங்கும் பசுமையாக காட்சி அளிக்கிறது..!

அவர்கள் இருவரது மனசை போல..!

 

(பல வார்த்தைகள் கிராமத்து நடையில் பதித்து இருக்கிறேன். தவறு இருப்பின் மன்னிக்கவும் )

நட்புடன் நாஞ்சில்