ஏனோ ஏனோ…?

முத்து பாலகன்
ஏப்ரல் 03, 2013 06:28 பிப

ஆண்…

பூவின் முகங்கொண்டு மலர்கின்ற அழகொன்று

புன்னகையிதழ் சிந்த இதயத்தைத் திருடுதல் ஏனோ ஏனோ…?

 

பெண்…

வேங்கையின் நடைகொண்டு வருகின்ற அழகொன்று

தாங்கிய வடிவத்தை ஆசையாய் எடுத்தது தானே தானே…!

 

ஆண்…

ஏந்திழை இதயத்தில் இத்தனை குளிருதே

இமயத்தின் பனி மழை போலென்னைச் சூழுதே ஏனோ ஏனோ…?

 

பெண்…

நீந்திய கண்களால் நீர் யெனைச் சாப்பிட

ஓங்கிய உள்ளத்தின் உருகிய நிலையது தானே தானே…!

 

ஆண்…

வீணையின் நாதமாய் உயிருளே பெருகிடும்

தேனுயிர்ச் சுவையினை உன் நினைவெழுதுதல் ஏனோ ஏனோ…?

 

பெண்…

நேசத்தின் உயிர்க் கொடி ஆசையில் படர்ந்திட

ஆணந்த மழைத்துளி அள்ளியே தவழ்வதால் தானே தானே…