உப்பும் புளியும்

வினோத் கன்னியாகுமரி
ஜனவரி 28, 2013 10:04 முப

தேவையான பொருட்கள்

பச்சை மிளகாய் 1 (அல்லது வற்றல் மிளகாய் இருந்தால் அதை தீயில் சுட்டு எடுக்கலாம்)

சின்ன உள்ளி 2,3

தேங்காய் எண்ணெய் 5 துளி

புளி தேவைக்கு

உப்பு தேவைக்கு

தயாரிக்கும் முறை

கிராமப்புறங்களில் சோற்றிற்கு கூட்டு இல்லை என்றால் உடனே அவர்களின் ஞாபகத்தில் நிற்பது இந்த உப்பும் புளியும் தான். இதெற்கென தனியாக பெயர் எதுவும் இல்லை. சாதாரணமாக உப்பும் புளியும் என்றே கூறுவார்கள். இதை தயாரிப்பது எளிது. அதிக நேரமே ஆகாது. சுவையும் நன்றாக இருக்கும். அதிகமாக பழஞ்சோற்றுடன் இதைச்சேர்த்து உண்ணும் போது கிடைக்கும் சுவை அற்புதம்.  பழஞ்சோறும் மோரும் உப்பும் புளியும் சேர்ந்த  சுவையை மறக்கவே முடியாது.

எப்படி தயாரிப்பது?

பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாய் நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாய் இல்லாதவர்கள் வற்றல் மிளகாயை தீயில் வெறுமனே சுட்டு அதையும் சேர்க்கலாம். (வற்றல் மிளகாயை தீயில் சுடுவதாக இருந்தால் அதன் புகையை சுவாசித்தால் அதிகமாக இருமல் வரலாம். சிறிது நேரத்தில் சரியாகிவிடும்.)

அதே போல சின்ன உள்ளியையும் மேல் தோல் நீக்கிவி்ட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். 

மேலே கூறிய அனைத்தையும் தேவைக்கேற்ப உப்பும் புளியும் சேர்த்து சிறிது நீர் விட்டு 5 துளி எண்ணெயும் விட்டு பிசைந்து கொள்ள வேண்டியது தான். 

முதலில் சில சமயங்களில் உப்போ புளியோ அதிகமாகி விடலாம். உப்பு அதிகமானால் கொஞ்சம் புளி சேர்த்து சிறிது நீரும் சேர்த்து பிசைந்து கொள்ளலாம். அதே போல புளிப்பு அதிகமாகிவிட்டால் சிறிது உப்பு சேர்க்கவும். 

சிலர் இதையே கொஞ்சம் அதிகமாகச்செய்து தாளித்து எடுத்து கறியாகவும் பயன்படுத்துவார்கள். தாளிக்காவிட்டாலும் இதன் சுவை தனிச்சுவை தான். 

 

(மிளகு சேர்த்து கையால் பிசைவதால் பிசைந்து விட்டு கையை நன்றாக கழுவிவிடவும். கையை தவறுதலாக கண்ணில் பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளவும். கை எரிச்சல் இருந்தால் தேங்காய் எண்ணெய் தடவலாம். அல்லது குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைத்திருக்கலாம்.)

1-2 நபர்கள்
5 முதல் 15 நிமிடங்கள்