தன்னம்பிக்கையே தனக்கு உதவி

Karthika
டிசம்பர் 12, 2012 11:50 முப
காவலர்கள் கதிரை அடித்து இழுத்து செல்ல கண்களில் நீருடன், மனதில் வலியுடன் செல்கிறான். மனம் முழுக்க மருத்துவமனை வாசலில் நிற்கும் தன் மனைவி மகேஸ்வரியும்,மகள் அமுதா என்ற அம்முவும் மட்டுமே நினைவில் நிற்க அழுதுக் கொண்டே ஏமாற்றத்துடனும், விரக்தியுடனும் செல்கிறான். சிறைக்கம்பிகளுக்கு நடுவே அடைக்கப்பட்டு விட வாழ்க்கையை திரும்பி பார்க்கிறான்.சிறை வாசம் ஒன்றும் கதிருக்கு புதிதல்ல. அன்றும் இன்றும் தான் சிறைக்கு வர காரணமானவன் ஒருவன் தான்.. அன்றோ அவன் தலைவன். இன்றோ வாழ்வின் முதல் துரோகி ,எதிரி .

தேர்தல் நேரம் 2 மணி வரை போஸ்டர் ஓட்டும் வேலை பார்த்து கொண்டிருந்தான் கதிர். போற வழியில் ஒருவன் தன் நண்பனிடம் “இங்க பாரு டா. ஊழல் பெருச்சாளிக்கு எல்லாம் போஸ்டர், கட்டவுட், பாலாபிஷேகம் ஒரு கேடு “ என்று அவன் தலைவனை கிண்டல் அடிக்க கதிர் அவனிடம் வாய் தகராறில் ஆரம்பித்து கை கலப்பு வரை ஆகியது. பின் வீட்டுக்கு திரும்பியிருந்தான் கதிர். வந்து வீட்டு கதவை தட்ட தூக்க கலக்கத்தில் இருந்து எழுந்து வந்தாள் மகேஷ்..
“ஏன் யா தினம் இப்படி லேட் டா வர்ற? கட்சி தேர்தல் னு சொல்லிக்கிட்டு திரியிரியே. நாளைக்கு நமக்கு ஒண்ணுனா உன் தலைவரா வந்து பாக்க போறாரு.? நம்ம பொழப்பை பாரு யா. உன் தூக்கத்தை கெடுத்துக்கிட்டு உடம்பை கெடுத்துக்காதயா.”

“மகேஷ் உனக்கு ஒண்ணும் தெரியாது. நமக்கு ஒண்ணுனா தலைவர் பாத்துப்பார். நீ படுத்து தூங்கு. நானும் தூங்குறேன்.”

“ஆமா ஆமா பாக்க தானா போறேன் உன் தலைவர்ர் பாக்குறதை””.

“பொழம்பாம தூங்கு டி “.

தினம் இதே கதை தான். மகேஷ் சொல்லும் அறிவுரை ஏதும் கதிருக்கு ஏறாது. கட்சிக்காக உழைத்து உழைத்து தேய்ந்தான் கதிர். ஒரு நாள் கட்சி பொது குழு கூட்டத்திற்க்காக வெளியூர் சென்று வரும் வழியில் ஏற்பட்ட விபத்தில் கதிருக்கு பலத்த அடி. அரசு மருத்துவமனையில் தீவிர சிகித்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தான். கட்சி எடுபிடிகள் சிலர் வந்து ஏக்க பார்வை வீசி விட்டு கதிருக்கு 5000 கொடுத்து சென்றனர். அது அவனது மருந்து செலவுக்கு கூட போதவில்லை. மகேஷ்வரியின் பெற்றோரும் உறவினரும் சேர்ந்து அவனை பிழைக்க செய்தனர். எவ்வளவு போராடியும் அவன் தன் காலை இழக்க வேண்டியதாயிற்று. விபத்து ஏற்பட்டதிலிருந்து கட்சிக்கும் அவனுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பல முறை முயற்சித்தும் கட்சி தலைவரை சந்திக்க முடியவில்லை.

கதிரும், மகேஷும் சேர்ந்து தங்கள் வீட்டு அருகிலே சிறிய அளவில் பெட்டி கடை ஒன்றை வைத்து பிழைப்பை நடத்தினர். நேரம் கிடைக்கும் போது கைவினை பொருட்களை தயார் செய்து அதையும் விற்று வந்தாள் மகேஷ். பல மாதங்கள் கடந்தது. ஒரு நாள் தன் செல்ல மகள் அம்முவிற்கு காய்ச்சல் வர மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த சிலர் அவன் தலைவன் அருகில் இருக்கும் பிரபல ஜவுளி கடையின் திறப்பு விழாவுக்கு வருவதாக பேசிக் கொண்டனர். இன்றாவது தன் தலைவனை சந்தித்து விட வேண்டும் என்ற ஆசையில் மனைவியை மருத்துவமனையில் விட்டு விட்டு இவன் அருகில் இருந்த கடைக்கு செல்ல கூட்டம் மிகுதியாக இருந்தது.. இவன் சென்ற அரை மணி நேரத்தில் தலைவன் வந்து இறங்க “தலைவா தலைவா எனக் கத்திக் கொண்டு கூட்டத்தில் இடித்துக் கொண்டு முன் சென்றான். அவன் தலைவனோ இவனை கண்டும் காணாதது போல கடைக்குள் சென்று விட்டான். கட்சி ஆட்களோ இவனை தலைவனை தாக்க வந்தவன் எனக்கூறி காவலர்களிடம் இழுத்துச் செல்லும் படி கூறினார். நினைவலைகளில் இருந்து மீண்ட கதிர் ஒரு சபதம் எடுத்தான்.

இன்று முதல் அரசியல் ,கட்சி, தலைவன் எதற்கும் தன் வாழ்வில் இடம் இல்லை. தன் குடும்பம் மட்டுமே தனக்கு முக்கியம். ஒரு காலை இழந்தால் என்ன !!இரண்டு கைகளோடு சேர்த்து தன்னம்பிக்கை என்னும் மூன்றாவது கையும் இருக்கிறதே.. அதை வைத்து வாழ்வில் முன்னேறி காட்ட வேண்டும் என வைராக்கியம் கொண்டான். இரண்டு நாட்களில் மகேஷ் தெரிந்த நபர்களை வைத்து கதிரை வீட்டிற்கு அழைத்து சென்றாள். வீட்டிற்கு சென்ற கதிர் மனைவியிடம் மன்னிப்பு கேட்டு இனி எப்போதும் இது போன்ற முட்டாள் தனத்தை செய்ய மாட்டேன் எனக் கூற மகேஷ்வரியும் மகிழ்ந்தாள். அன்று முதல் தங்கள் உழைப்பை மட்டும் நம்பி வாழ ஆரம்பித்தனர் . மகள் அம்முவை நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர்.. இப்போ கதிரும் தன் அருகில் இருக்கும் நண்பர்களுக்கு தன் வாழ்க்கையை எடுத்துக்காட்டாய் கூறி அரசியல் கட்சிகளை நம்பி ஏமாற வேண்டாம். உழைப்பை உறிஞ்சி விட்டு சக்கையாய் வீசி எறியபடுவோம் என அறிவுரை கூற ஆரம்பித்து விட்டான்.