கர்மயோகப் பயிற்சி முறை

சேஷாத்ரி
ஆகஸ்ட் 03, 2012 10:09 பிப

கர்மயோகப் பயிற்சி முறை


ஓகத்தை (யோகம்) இராச யோகம், பக்தி யோகம், ஞான யோகம், கர்மயோகம் என்று நான்காக நம் ஆன்றோர் பிரித்து உள்ளனர். பதஞ்சலி முனிவர் சொல்லியபடி பயிலப்படுவது இராச யோகம், இறைவனே எல்லாம் என்று எண்ணி அவன் பால் ஒட்டுதல் கொள்ளுவது பக்தி யோகம், அறிவின் ஊடாக உண்மையைக் காண முயல்வது ஞான யோகம். கவனம் சிதறா மனத்துடன் ஒரு வேலையை மேற்கொள்ளுவது கரும யோகம் எனப்படுகின்றது. ஞான யோகத்தினும் சிறந்தது கருமயோகம். இந்த கருமயோகத்தை எவ்வாறு பயில்வது என்பது குறித்து சொல்லித் தருவார் யாரும் இலர்.

என்னுடைய 21 ஆம் அகவையில் இராசாசி கூடத்திற்கும் சட்டமன்ற மன்ற உறுப்பினர் விடுதிக்கும் பின்புறம் இருந்த சிவன் கோவிலின் பூசகர் திரு குப்புசாமி சிவாச்சாரியாரை அணுகிய போது அவர் எனக்கு பயிற்சி ஏடாக தந்த தட்டச்சு படியில் இருந்து பிறருக்கு பயன் நல்கும் எனும் நோக்கில் இங்கு எழுத்தில் வழங்குகிறேன்.


தன்நிலை அறிதல்


'தன்னை உணர்ந்தவர்க்கு தரணியில் குறைவில்லை' என்று ஒரு முதுமொழி உண்டு. உள்ளத்தில் எண்ணங்களை ஏந்திடுவோர்க்கு தன்னை அறிந்திடும் ஆற்றல் இல்லாமல் போய்விடுகின்றது. எண்ணங்கள் ஒருவர்க்கு சுமையே அன்றி இன்பம் அல்ல. தன்னை அறிதல் என்றால் என்ன? எங்ஙனம் தன்நிலை அறிவது. இயல்பாக இருப்போர் எவரும் தன்நிலை அறிவதில்லையா? தன்நிலை அறிதல் என்பது நாம் சற்றும் விரும்பி எதிர்பார்த்திடாத ஒன்று.   நாம் அவ்வப்போது என்ன செய்கின்றோம் என்பதை உள்ளதை உள்ளபடியே உணர்வது தன்நிலை உணர்தல் ஆகும். ஒரு காட்டு, ஒருவர் உண்ணுகின்ற போது மனம் உண்ணுதலோடு ஒன்றிப் போவது இல்லை. மாறாக, உணவு கொள்ளுகின்ற போது மற்றைய சேதிகளில் மனம் ஆழ்ந்து எண்ணமிடுகின்றது. அல்லது, உண்ணுபவர் பக்கத்தில் உள்ளவரோடு இடையிடையே அளவளாவுவார். இனி, சிந்தனையில் பேச்சில் மூழ்கிவிடுங்கால் உணவின் தன்மைகள் இன்னதென்பது அறவே மறந்துவிடும். இவ்வாறு உணவு உண்டுவிட்டு வருபவரிடம் என்ன உணவு உண்டீர்கள் என வினாவினால் அவருக்கு புசித்த உணவு குறித்து மறந்து போய் இருக்கும். மிகுந்த நினைவுகூர்தலுக்குப் பிறகே ஒருவாறு அதைப்பற்றி விடை இறுத்துவார். இதே போல் பல வேறு வேலைகளைச் செய்யும் போது மனம் அச்செயல்கள் மேல் படியாமல் வேறு எவற்றையோ சிந்திக்கின்றது. இது போன்ற நிலையைத் தான் தன்நிலை அறியாத நிலை என்பர்.

இன்னொரு காட்டு, நடந்து கொண்டிருக்கும் ஒருவருடைய மனம் தன் நடையில் ஏற்படும் பிழையை உணர்வதில்லை. சாலையில் செல்லும் போது ஏதோ ஒரு வழியாகச் சென்று விடுவதால் ஊர்தி போக்குவரத்து மிகுதியாக உள்ள சாலைகள் தவிர்த்து மற்றைச் சாலைகளில் மிகுந்த கவனம் தேவைப்படாததால் கால் ஏதோ நடந்து கொண்டிருக்க மனம் உலகம் எல்லாம் சுற்றித் திரியும். அப்போது நடையில், உடையில் ஏற்படும் கோல அலங்கோலங்களை அவர் அறிவதில்லை. சிலர் மிக அறுவறுப்பானபடி பேசிக் கொண்டோ அல்லது முகபாவங்கள் செய்து கொண்டோ கூட நடப்பர். அவற்றினை அவர்கள் அறியாமை நிலை கண்டு சிறுவர்கள் பார்த்து நகையாடுவர். அதையும் கவனிக்காமல் தான் போகின்ற போக்கில் போய்க் கொண்டிருப்பவரை பாதையில் இன்றும் பார்க்க முடிகின்றது. இதுதான் தன்நிலை மறத்தல் என்பது. தன்நிலை மறத்தல் என்ற எதிரிடையான செயலுக்கான இவ் விளக்கத்தின் மூலம் தன்னையறிதல் என்பது தன்நிலையை எப்போதும் உணர்ந்தபடி இருப்பதுவே என்பது படிப்பவர்க்குப் புலனாகும். ஆகவே, மன ஈடுபாட்டுடன் நாம் செய்யும் செயல்களைச் செய்வதே தன்னையறிதல். தன்னை அறிந்து செயல்படுவோர் தம் செயலில் வெற்றி கொள்வது உறுதி.

ஒரு வினையில் மனம் முழுமையாக ஈடுபடுமானால் அவ்வினையின் இறுதி முடிபு முன்கூட்டியே தெரிந்துவிடும்.

மனஈடுபாட்டுடன் செயற்படுவதைப் பழகுவோருக்கு எதிர்கால வாழ்வே, நிகழ்வே தெரிந்துவிடும். இதைத் தான் 'கர்மயோகம்' என்கின்றனர் ஆன்றோர். கர்மயோகத்தின் வாயிலாக ஒருவர் வளமை, வசதி, உடல்நலம், நீண்ட வாழ்நாள், எண்பெருஞ் சித்துகள் முதலாயவற்றை அடைகின்றார். தன்னைஅறிதல் என்பதன் அடிப்படையில் தான் 'கர்மயோகம் ' அமைந்துள்ளது, செயல்புரிகின்றது.

இனி. கர்மயோகத்தை பயிற்சி செய்வதற்கான சில எளிய வழிமுறைகள். இயல்பாக யோகத்திற்கு என்று நேரத்தை ஒதுக்கி காலத்தைச் செலவிட்டுப் பழக முடியாதவர்களுக்கு இந்த கர்மயோக முறை நிச்சயமாக மிகப் பயனுள்ளதாகவும், ஆற்றல் மிக்கதாகவும் இருக்கும். இவ்வகையில் செய்ல்பட்டு கர்மயோகத்தை கைக்கொள்ளுவதால் துன்பமற்ற வாழ்க்கையையும், இன்பமான வளத்தையும் வரையறையின்றி அடையலாம் என்பது இதன் சிறப்பான சேதி. மனிதர் வாழ்வில் யோகத்தை எந்த நிலையிலும் கடைப்பிடிக்கலாம். பொழுது இல்லை, நேரமில்லை என்பதற்காக ஒதுங்கிவிடும் கலை இதுவல்ல.

உறங்கிடும் முன்னம், உண்ணும் நேரம், குளிக்கும் வேளை, பணி செய்யும் நேரம், பிறரோடு பேசுகின்ற நேரம் என இப்படி நாம் நாள்தோறும் ஈடுபாடு கொள்ளும் வினைகளின் போதே இந்த யோகத்தைக் கடைப்பிடிக்கலாம். அதற்கான நிலைகள் இருக்கின்றன. அதன்படி கடைப்பிடிப்பதால் - பிற யோகிகள் செய்கின்ற யோகத்திற்கு கிடைக்கின்ற பயன்போல் இதிலும் பயன் கிட்டுமா? முன்னேற்றம் கிட்டுமா? என்றால் நேடுநேரம் தவம் இயற்றி அடைகின்ற அரும்பயன்கள் இந்த கர்மயோகத்திலும் கிட்டும் என்பதில் ஐயமில்லை.

காலை வேளையில் கண் விழிக்கின்ற போதே இந்த கர்மயோகப் பின்பற்று முறைகள் தொடங்கிவிடுகின்றன. முதலில் சின்னாட்களுக்கு இது கடினமாகத் தோன்றினாலும் பின்னர் இது கைவந்த நிலை பெற்று மிக எளிதாகிவிடும். இதனை செய்யத் தொடங்கிய பின் நமது சாதாரண் வாழ்வில் எத்தனை நலன்களை உணராது இருக்கின்றோம் என்பது நமக்குப் புலனாகும்.

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் அறுசுவை கலந்திருக்கின்றது. நாம் பாடல் கேட்டுக் கொண்டும், தொலைக் காட்சி பார்த்துக் கொண்டும் அவசரத்தில் அள்ளிப் போட்டுக் கொள்வதால் அத்தனை சுவையும் உணராமல் வயிற்றை மட்டும் நிரப்பிக் கொண்டு எழுந்து விடுகின்றோம். இந்த கருமயோகப் பயிற்சியை மேற்கொண்ட பின் எத்தனைச் சுவையுள்ளதான உணவை சத்தற்றதாக எண்ணி உட்கொண்டு அறியாது இருக்கின்றோம் என்று எண்ணத் தோன்றும்.


காலைப் பயிற்சி


காலையில் தன்ணுணர்வு பெற்றவுடன் படுக்கையில் இருந்தவாறே எந்த இடத்தில் நாம் படுத்து இருக்கின்றோம், எந்த திசையில் தலை வைத்திருக்கின்றோம். தலைக்கு நேரே கதவுஅல்லது சாளரம் உள்ளதா? இரவு நாம் படுத்த நேரம் என்ன? இப்போது நேரம் என்ன? இந்த நேரத்தில் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? என்று எண்ணி முடித்துவிட்டு அடுத்து இன்று முக்கியமாக என்னென்ன வேலைகளை என்னென்ன நேரங்களில் செய்யவேண்டும். இவ்வேலைகள் காரணமாக யார்யாரைச் சந்திக்க வேண்டும்?  அவ்ர்கள் பெயர்கள், அவர்களின் முகவடிவம் ஆகியவற்றை எண்ணிப்பார்க்க வேண்டும். இதுவே முதல் பயிற்சி. இதனை ஒருவார காலம் தொடர்ச்சியாகச் செய்யவேண்டும். ஒருவரது மனம் கூர்மை எய்துவதைக் கணக்கிட இது உதவும்.

இவ்வகையில் காலையில் கண் விழிக்கின்ற போதே இந்த கருமயோகப் பயிற்சியை துவக்கிடலாம். காலையில் கண் விழித்து எழுகின்ற போது தன்நிலை உணர்வது தான் மிக முக்கியம். இதனை ஒருவாரம் செய்த பின்பு தான் இதனால் எத்தனை நன்மைகள் கிட்டுகின்றன என்பது புரியும்.


இரவுப் பயிற்சி


ஒரு வாரம் அல்லது ஒரு மாதக் காலைப் பயிற்சிக்குப் பின் இரவில் படுக்கையில் படுத்து தூக்கம் கொள்ளும் முன் படுக்கையில் இருந்தபடியே தான் எந்த இடத்தில் படுக்கின்றோம்? எந்த திசையில் படுக்கின்றோம்? தலைமாட்டில் கதவு அல்லது சாளரம் இருக்கின்றதா? வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் படுக்கப் போய்விட்டனரா? என்று இருக்கும் இடம் பற்றிய நிலையும் அடுத்து இன்று காலை முதல் என்னென்ன வேலைகள் செய்தோம் அவை தொடங்கிய நேரம் நினைவில் இருக்கின்றதா?  எவர் எவரைக் கண்டோம். செய்த வேலைகளில் திருப்தி ஏற்பட்டதா? என்றுமில்லாத ஏதேனும் புதிதாக செய்திருக்கின்றோமா?  என்று எண்ணிய பின் 'இறைவா எனது வாழ்வில் இனியவை நிகழவும் முன்னெடுத்த முயற்சிகளில் வெற்றி கொள்ளும்படிக்கு ஆற்றல் பெறவும் நீ என்க்கு அருள் புரியவேண்டும்' என்று சொல்லிவிட்டு உறக்கம் கொள்ள வேண்டும். இதனை நாள்தோறும் தவறாமல் செய்ய வேண்டும். இவ்விரண்டையும், இதாவது, அதிகாலை விழித்து எழும் போதும், இரவில் தூங்கும் முன் படுக்கையில் இருக்கும் போதும் இப்பயிற்சிகளை செய்து வந்தால் 'தன்நிலை உணர்தல்' எனும் கருமயோகம் ஒருவர்க்குக் கைக்கூடும்.

இவற்றைத் தொடர்ந்து இந்தப் பயிற்சியில் ஒருவர் செய்ய வேண்டிய ஒன்று உணவு உண்ணும் போதும் 'தன்நிலை உணர்தல் ' என்னும் பயிற்சி ஆகும்.  இப்பயிற்சியில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளைச் செவ்வனே அமைத்துக் கொள்ள வேண்டும்.


உணவுப் பயிற்சி


உணவு உண்ணும் மூன்று பொழுதும் பிறருடன் இணைந்து உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். பாடல் கேட்பது, தொலைக்காட்சி பார்ப்பது ஆகியவற்றை உணவின் போது கைவிட வேண்டும். உண்ணும் போது சிந்தனை செய்வதை விட்டுவிட வேண்டும். இவற்றைக் கைக்கொண்டால் மட்டுமே பயிற்சியை செவ்வனே செய்யமுடியும்.

உண்பதற்கு முன் எத்தகைய மன உறுத்தலும் இல்லாமல் உட்கார வேண்டும். மனதில் வேறு எந்த சிந்தனையும் அற்ற நிலையில் தான் உணவை உட்கொள்ள வேண்டும். சோற்றில் கைவைக்கும் முன் 'எனக்கு இந்தப் பயிற்சியை மேற்கொள்ளும் ஊக்கத்தை குறைவுபடாமல் வைத்து வெற்றி கொள்ளும்படியாகச் செய் ' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு பின் சொல்லப்படும் முறையை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பிடி அல்லது கவள உணவையும் கவனமாக வாயில் வைத்து நன்றாக மென்று உமிழ்நீருடன் நன்கு கலந்து உண்ண வேண்டும். முதலில் நாம் என்ன உண்கின்றோம் என்பதை மனதில் நிறுத்த வேண்டும். முதல் கவளத்தின் அல்லது பிடியின் அளவு சற்றொப்ப என்ன அளவில் இருக்கும், இதில் என்னென் சுவைகள் இருக்கின்றன, இதாவது, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு, கார்ப்பு ஆகிய அறு சுவையும் எந்தெந்த விகிதத்தில் கலந்திருக்கின்றன என்று கவனித்தால் அந்த உணவு எத்தனைச் சுவையோடு அமைந்து இருக்கின்றது என்பது விளங்கும். இயல்பாக நாம் உண்ணும் உணவில் இத்தகைய சுவை எங்ஙனம் ஊடுருவி நிற்கின்றது என்பது வியப்பாகவே இருக்கும். சுவைத்து உண்ணும் போது தான் அத்தனைச் சுவையும் இருப்பது நமக்குத் தெரியவரும். இவ்வாறே ஒவ்வொரு பிடி/கவள உணவையும் கூர்ந்து சுவைத்து உண்ண வேண்டும்.

இவ்வகையில் சுவைத்து உண்ணும் போது அளவிற்கு விஞ்சி உணவை உண்டிடமுடியாது. உமிழ்நீருடன் உணவு நன்றாகக் கலந்துவிடுவதால் செரிப்பதற்கு மிக எளிதாக இருக்கும். இதனால் உடல்நலத்தோடு மனநலமும் கிட்டுகின்றது. இதனை மட்டும் செவ்வனே தவறாமல் கடைப்பிடித்து உண்பதனால் தன்நிலை உணர்ந்துவிடில் வாழ்வுப் பாதையில் வளமான சோலைகளை சந்திக்கலாம்.

இப்படியாக விழிக்கின்ற வேளை, உண்ணுகின்ற வேளை, உறங்கு முன் என மூன்று நிகழ்விலும் தன்நிலை உணர்கின்ற பயிற்சியை செய்துவந்தால் வாழ்வில் கருமயோகத்தைக் கடைப்பிடிப்பதால் ஏற்படும் நலத்தில் பாதி நலம் கிட்டிவிடும். இதனை 90 நாள்கள் தவறாமல் கடைப்பிடித்துவரின் தன்னைச் சுற்றி உள்ள சூழ்நிலை விளங்கத் தொடங்கும்.

இவ்வாறாகவே எல்லாப் பொழுதிலும் தான் செய்கின்ற எல்லா வேலைகள் மீது கவனம் சிதறாத கருத்தை வைத்து நாள் முழுவதும் வினையாற்றி முடிப்பவர்களாக சிறிது சிறிதாகப் பயிற்சியை ஒவ்வொரு செயலிலும் செய்திடப் பழகிட வேண்டும். இதுவே கருமயோகத்தின் சாரம். இது யோக அடிப்படையில் நல்ல பயனை விளைக்கும்.

கர்மயோகத்திற்கு தமிழில் வினையாண்மை ஓகம் என்று சொல் அமைப்போம்.