சிவவாக்கியர் - கறந்தபால் முலைப்புகா

balagangadharan
ஜூலை 29, 2012 04:04 பிப

சிவவாக்கியர் - கறந்தபால் முலைப்புகா               ”””கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணெய் மோர்புகா

                  உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா

                  விரிந்தபூ வுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகா

                  இறந்தவர் பிறப்பதில்லை யில்லையில்லை இல்லையே””

                                                                        ----------சிவவாக்கியர்-----

கறந்தபால் முலைப்புகா:
பசுவின் மடியிலிருந்து கறக்கப்பட்ட பாலை மீண்டும் அதன் மடியில் கொண்டு சேர்க்க முடியாது , அதாவது முலையிலிருந்து கறக்கப்பட்ட பால் என்று சொல்லும்போது உலகில் வாழும் பெண் உயிரிகளின் முலையிலிருந்து கறக்கப்பட்ட பாலை மீண்டும் அதன் முலை வழியாக அதன் உடலுக்கு உள்ளே செலுத்த முடியாது என்று பொருள்.கடைந்தவெண்ணெய் மோர்புகா:
மோரை நன்றாக கடைந்தால் அதிலிருந்து வெண்ணெய் தனியாக பிரியும் .
தனியாக பிரித்து எடுக்கப்பட்ட வெண்ணெயை மீண்டும் மோரினுள் செலுத்தி அதை பழையபடி மோராக மாற்ற முடியாது.உடைந்துபோன சங்கினோசை (உயிர்களும்) உடற்புகா:
உடைந்து போன சங்கின் ஓசை என்றால் சங்கிலிருந்து தனியாக பிரிந்த ஓசை என்று பொருள்.
சங்கை ஊதும் போது அதில் இருந்து ஓசை எழுப்பப் படுகிறது. எழுப்பப்பட்ட ஓசையானது காற்றில் கலந்து விடுகிறது.
அவ்வாறு காற்றில் கலந்த ஓசையை தனியாக பிரித்து மீண்டும் அந்த சங்கினுள் கொண்டு சென்று அடைக்க முடியாது.விரிந்தபூ யுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகா:
மரத்திலிருந்து தனியாக பிரிந்து கீழே விழுந்த பூவும் மரத்திலிருந்து தனியாக பிரிந்து கீழே விழுந்த காயும் மீண்டும் போய் மரத்தில் இணையாது இணையவும் முடியாது.
பூவிரிந்தால் அதாவது மலர்ந்தால் மீண்டும் அது மொட்டாக முடியாது என்று சிலர் அதற்கு அர்த்தம் சொல்கிறார்கள் .
இந்த பாடலில் உள்ள கருத்துக்களை ஊன்றி கவனித்தால் ஒன்று மற்றொன்றாக ஆவதைப் பற்றி சொல்லவில்லை . ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிவதைத்தான் சொல்கிறார்கள்.
எனவே மரத்திலிருந்து பூ உதிர்ந்து கீழே விழுவதையும் , மரத்திலிருந்து காய் உதிர்ந்து கீழே விழுவதையும் , உற்று நோக்கினால் ஒன்றிலிருந்து ஒன்று பிரிவதைத் தௌ்ளத் தெளிவாக உணரலாம்.
இறந்தவர் பிறப்பதில்லை யில்லையில்லை யில்லையே:
பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப இந்த ஜென்மம் ஏற்படுகிறது. இந்த ஜென்மத்தில் கர்ம வினைகள் அனைத்தையும் கழித்து விட்டால் முக்தி ஏற்படும் இல்லையென்றால் செய்த கர்மவினைகளுக்கு ஏற்ப மறு ஜென்மம் ஏற்படுகிறது.
இங்கே ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் பிறவி என்பது வேறு. ஜென்மம் என்பது வேறு. பிறவியைப் பற்றி பிறகு தெரிந்து கொள்ளலாம். இபபொழுது ஜென்மத்திற்குள் செல்லலாம்.
ஒரு ஆன்மாவுக்கு 7 ஜென்மம் 7 ஜென்மத்திற்குள் அந்த ஆன்மாவானது தனது கர்ம வினையை கழிக்கா விட்டால் 7x7= 49 ஜென்மம். 49 ஜென்மத்திற்குள்ளும் தனது கர்ம வினையை கழிக்காவிட்டாலும் அந்த ஆன்மாவானது  தானாகவே தனது பயணத்தை முடிக்க சுத்த வெளியில் கலந்து விடும்.
அதனால் தான் நாம் அடிக்கடி ஏழேழு ஜென்மம் என்று சொல்வதற்கு காரணம்.
இந்த ஜென்மத்தில் நாம் நம் கர்ம வினைகள் அனைத்தையும் கழித்து விட்டால் முக்தி கிடைக்கும். முக்தி கிடைத்து விட்டால் நமக்கு மறு பிறப்பு கிடையாது.
யாருக்கு பிறப்பு கிடையாதோ அவருக்கு இறப்பு கிடையாது. பிறப்பு இறப்பு அற்ற நிலை எப்படி கடவுளுக்கு உண்டோ அப்படியே நமக்கும்.


””””தத்வமவே த்வமேவதத்””  அதாவது நீயே அது அதுவே நீ என்ற நிலை உருவாகி விட்டால் பிறப்பு இறப்பு கிடையாது. பிறவிச் சுழல் கிடையாது மறுஜென்மம்  என்பது கிடையாது.

உடலிலிருந்து உயிர் பிரிந்து விட்டால் உயிரின் கர்ம வினை கழிந்து விட்டால் மறு பிறப்பு கிடையாது. உயிரின் கர்ம வினை கழியா விட்டால் மறு பிறப்பு உண்டு.

இங்கே இந்த பாடலில் உயிர்களும் உடற்புகா என்றால் தனது கர்ம வினையை கழித்து விட்டு முக்தி அடைந்த ஆன்மாவானது பிறப்பு எடுக்க மீண்டும் ஒரு உடலைத் தேடிச் சென்று இணையாது என்று பொருள்.

இறந்தவர் என்றால் கர்ம வினையை கழித்து விட்ட ஆன்மா.

இறந்தவர் பிறப்பதில்லை என்றால் கர்ம வினையை கழித்து விட்டு முக்தி அடைந்த ஆன்மா பிறப்பதில்லை என்று பொருள்.
இந்த பாடலின் மூலம் சிவவாக்கியார் என்ன சொல்ல வருகிறார் என்றால்

பரிணாம வளர்ச்சியில் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து விட்டால் மீண்டும் அது பழைய நிலைக்கு திரும்பாது , இணையாது குரங்கிலிருந்து மனிதன் பிரிந்து வந்து விட்ட பிறகு குரங்கு குரங்காக இருக்கிறது . மனிதன் மனிதன் மனிதனாக இருக்கிறான் . இரண்டு வேறு பட்ட நிலை உருவாகி விட்டது.

அதைப் போல

உடலிலிருந்து பால் பிரிந்து விட்டால் பால் வேறு உடல் வேறு.

மோரிலிருந்து வெண்ணெய் பிரிந்து விட்டால் மோர் வேறு வெண்ணெய் வேறு.

சங்கிலிருந்து ஓசை பிரிந்து விட்டால் சங்கு வேறு ஓசை வேறு.

மரத்திலிருந்து பூ பிரிந்து விட்டால் மரம் வேறு பூ வேறு.

மரத்திலிருந்து காய் பிரிந்து விட்டால் மரம் வேறு காய் வேறு.

அதைப்போல பல்வேறு ஜென்மங்களாக உடலோடு ஒட்டி வந்த உயிரானது கர்ம வினைகளை தீர்த்து முக்தி அடைந்து விட்டால் உயிரானது வேறு உடலைச் சென்று சேராது மறுபிறப்பு எடுக்காது.

””””உடல் வேறு உயிர் வேறு என்று ஆகிவிடும்”” என்று சொல்கிறார்.

இறந்தவர் பிறப்பதில்லை என்பதன் மூலம் சிவவாக்கியர் மறு பிறப்பு இல்லை என்று சொல்ல வரவில்லை.

எந்த உயிருக்கு மறு பிறப்பு உண்டு எந்த உயிருக்கு மறுபிறப்பு இல்லை என்று தான் சொல்ல வருகிறார்.