நம்பிக்கை துரோகம்.

நாத்திகன்.
ஜூலை 22, 2012 09:44 முப

                                                    நம்பிக்கை துரோகம்.

                    என் பெயர் தமிழ்.அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படி‌த்துக் கொண்டிருந்தேன். வறுமை எங்களை ஆட்சி செய்து கொண்டிந்த காலம் அது,
சோறு என்று எனக்கு அறிமுகப் படுத்தப் பட்டதென்னவோ சமை அரிசியும், திணை அரிசியும் தான். அதுவும் இரவு நேரங்களில் மட்டும் தான்.

              
                   ஒவ்வொரு கிராமத்துச் சிறுவனுக்கும் படி‌ப்பு என்பது பள்ளியில் போடப் படும் மத்தியச் சாப்பாடு தான்.[இங்கே ஐயா காமராசர் அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆக‌ வேண்டும். சாப்பாட்டிற்காக‌ அல்ல‌ அதன் மூலமாக‌ பாட‌ சாலைக்கு அழைத்து வந்ததற்கு] அதன் அடிப்படையில் தான் எனக்கும் படி‌ப்பு என்பது அறிமுகமானது.

                 
                   ஒவ்வொரு நாளும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுப்பப் படுவது வழக்கம். எங்கள் நிலம் ஊரிலிருந்து ஒரு பர்லாங்கு தூரம், இரவுப் போர்வையாகக் கிடைக்கும் உரையடித்த‌ லுங்கியைத் தலையில் முக்காடிட்டுத் தூக்கம் கலையாமல் நடந்து செல்வதும், மாட்டுத்தொழுவம் அடையும் வரை தூக்கம் தொடருவதும் எனது சிறப்பு. இதைப் பற்றிப் பேசாத‌ ஊர் மக்களே இருக்க‌ முடியாது அவ்வளவு பிரசித்தம். மாட்டுத் தொழுவம் வந்ததும் தூக்கம் தொலைந்தோடிவிடும், முக்காடு முண்டாசாகிவிடும்.

               
                 இரவு மாடுகள் கழித்த‌ சாணமும், கோமியமும் மாடுகள் மிதித்த‌ மிதியில் இரண்டறக் கலந்திருக்கும். ஒரு வகைக் கொடியால் முறுக்கு போல‌ சுத்தப்பட்ட‌ ஒரு தட்டு இருக்கும்,
" ஒட்டன் தட்டு " என்பார்கள். அதை எடுத்து சாணத்தை வாரி தலை சுமக்கையில், அதிலுள்ள‌ சாணம் கலந்த‌ கோமியம், தங்கு தடையின்றி தலையிலிறங்கி ஓடிவரும், குப்பை கொட்டும் இடத்தை அடைவதற்குள், நெற்றி, கண், காது, மூக்கு என்று ஓடிவந்து உதடுகள் வழியே முகத்தைக் கடக்கும் போது, வாயை இருக‌ மூடிக்கொள்ள‌ வில்லையெனில் வாய்க்குள் சென்று விடும், இப்படி எவ்வளவு நேரம் தான் வாயை மூடிக்கொண்டு இருக்க‌ முடியும். இடை இடையே " ஃப்ர்ர்ர்ருருரு... ஃப்ர்ர்ர்ருருரு... என்று ஊதுகையில், ஒரு வகை வாடையுடன் கூடி ஒரு வித‌ சப்தத்தை உருவாக்கும்.

                  ஒரு வழியாக‌ அதை வாரிக் கொட்டிவிட்டு, குளித்து முடித்து வீடு திரும்புகையில், எனக்காக்வே காத்துக் கிடக்கும் கம்மங் கூழோ அல்லது கேழ்வரகு கூழையோ... எடுத்துக் குடிக்கையில் சாணமும், கோமியமும் கலந்தோடி வந்து வாழைக் கடக்கும் நினைவு வரும். பசிக்காகக் கொஞ்சம் குடித்து விட்டு, பூம்புகார் துணியகமோ... அல்லது சீனிவாசா துணியகமோ... இலவசமாகக் கொடுத்த‌ மஞ்‌சள் பையில் எனது பலகையும், ஒரு தமிழ் புத்தகமும் சிறை பட்டிருக்கும், அதை எடுத்து தோலில் போட்டுக் கொண்டு நேரமாகிவிட்டதை எண்ணி பள்ளியை நோக்கி ஓடுகையில், நான் சுமக்கும் சந்தோசத்தில் எனது பலகையும், புத்தகமும் எனக்குப் பின்னால் ஆட்டம் போடும்.

                  மதிய‌ வேளை வந்ததும், சத்துணவுக்காக‌ அரசாங்கம் கொடுத்த‌ அளவில், சத்துணவு வாத்தியாரும், ஆயாக்களும் பங்கு போட்டது போக‌, கொஞ்சம் சாப்பாடும், ரசம் போன்ற‌ சாம்பாரில் எங்கேயாவது ஓரிரு காய்கள் தலை காட்டும். மாலை வந்ததும் வீடு திரும்பிப் பள்ளிச் சுமையை இறக்கி வைத்துவில்டு, மீண்டும் நிலம் நோக்கி ஓட‌ வேண்டும், மேய்ச்சலுக்குச் சென்ற‌ மாடுகளை தொழுவத்தில் பிடித்து கட்டி விட்டு, அவைகளுக்கு இரவு உணவைப் பரிமாரிவிட்டு, வீடு நோக்கி வருகையில் சாமை அல்லது தினைச் சோறு காத்திருக்கும், இப்படித் தான் நான் வாழ்க்கையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தேன்.

                  என்னைப் போலவே பல‌ சிறுவர்களுக்கு கோடை விடுமுறை என்றாலே, ரெக்கை கட்டிப் பறக்கும் சந்தோசம் தான். கோடையில் பள்ளியும் இருக்காது, நடவு, அறுவடை, வேறு எந்த‌ வேலையும் இருக்காது. அந்தச் சமயங்களிலெல்லாம், என் நண்பர்களோடு கூட்டு சேர்ந்து, ஒரே கூத்தும், கும்மாளமும் தான். குமரக் கோவிலில் இருக்கும் துரிஞ்ச‌ மரம், வேப்ப‌ மரம், கொண்ணை மரம் இவை அனைத்தும், வானரங்கள் புகுந்த‌ காடு என்பார்களே, அது போல‌ துவம்சமாகிவிடும். ஏனெனில் நாங்கள் ஆடுவதும் குரங்காட்டம் தான். மரத்திற்கு மரம் தாவுவதில் எங்களிடம் குரங்கே தோற்கும். இது காலையில் ஆரம்பித்து மத்தியம் வரைத் தொடரும்.

                 மதிய‌ வேளை வந்ததும் கொடுக்காப் புளி மரத்திற்குப் படையெடுப்போம், மரத்தின் கிழிருக்கும் சிவலிங்கம் நடாப்பா வீட்டு மிளகாய்த் தோட்டம், சீராளன் வீட்டு தக்காளித் தோட்டம், சேட்டு மாமா வீட்டு மல்லித் தோட்டம் இவைகள் அனைத்தும் கலகலத்துப் போகும். வழிறு முட்டத் திண்ரவர்கள், கொஞ்சமாகத் திண்ரவர்கலென்று அவரவர்களுக்குத் தனித் தனியாய் வாயு வெளியேறும். கலைத்துப் போன‌ நேரத்தில் ஊர்  கவுண்டர் வீட்டுக் கிணறு, ஊர் பொதுக் குளமென்று குளிக்க‌ அல்ல‌ குதிக்கச் சென்று விடுவோம். அதுவும் ஊர் பொதுக்குளத்தில் குதிப்பதென்றால் அலாதிப் பிரியம். பிரகென்ன‌ ஆமைக் குட்டிச் சொராணம், சொரக்குடுக்கை நீச்சல் இப்ப‌டி சிரிது நேரம் போகும், அதன் பிறகு ஓரி வைப்போம், அது மிக‌ பயங்கரமாக இருக்கும்.

                  பொதுக் குளக்கரைக்கு மேல் வானை முட்டும் அளவிற்கு ஒரு அரச‌ மரமிருக்கும், பத்திற்கும் மேற்பட்டோர் இந்த‌ ஓரியில் கலந்து கொள்வோம். ஒருவர் பிடிபட்டால் பிடிபடாத‌ மற்றொருவன் பிடிபட்டவனுக்கு உயிர் கொடுத்து விடுவான். எங்களில் ஒருவனை மட்டும் யாராலும் பிடிக்கவே முடியாது, அவன் இரட்டைத் தொண்டர் வீட்டு சேகர். மற்ற‌ எல்லொரும் பிடிபட்டு விட்டாலும் கூட‌, அவன் மட்டும் குளக்கரைக்கு மேலிருக்கும் அரசமர‌ ஊச்சியில் ஏரி உட்கார்ந்து கொள்வான், தீண்டுபவன் அந்த‌ மரத்தின் மேல் ஏரி தீண்டும் சமயம் பார்த்து ஊச்சியிலிருந்து குளத்தில் குதித்துவிடுவான். அவனால் மட்டும் தான் அங்கிருந்து குதிக்க‌ முடியும். மற்ற‌ யாரும் ஊச்சியில் ஏரவே பயப்படுவார்கள், மீண்டும் எல்லோருக்கும் உயிர் கொடுத்து விடுவன், ஆட்டம் மீண்டும் முதலிலிருந்தே தொடங்கும்.

                 அப்படிப் பட்ட‌ கோடை காலத்தை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்த‌ எனக்கு, அந்த‌ வருடம் ஒரு புதிய‌ நண்பன், என் தந்தையால் எனக்கு அறிமுகம் செய்து வைக்கப் பட்டான், அவன் பெயர் அய்யனார். நல்ல‌ கருகருன்னு அழகாழிருப்பான். அவன் பிறந்த‌ முதல் மாதமே அவன் அம்மாவிடமிருந்து பிரித்து, அதனை வளர்த்த‌ அலப்பான் குமரேசன் நூறுரூபாய்க்கு என் தந்தையிடம் விற்று விட்டன். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நட்டக்கும் அய்யனார் சாமி திருவிழாவில், " ஆட்டை வெட்டுரென்னு"... நேந்துக்கிறது எங்க‌ ஊர் வழக்கம், அதுவும் இல்லாதக் குட்டியாய் பார்த்துத் தான் வாங்கு வார்கள், அதன் அடிப்படையில் தான் எனக்கு அந்த‌ வெள்ளட்டுக்குட்டி அறிமுகமானது. 

                 அய்யனார் சாமிக்கு நேர்ந்து கொள்வதால், ஆட்டை அய்யனார் என்று அழைப்பது வழக்கம். அவன் வாங்கி வந்த‌ சில‌ நாள் வரை எனக்கொரு தொல்லையாகவே இருந்து வந்தான், அவன் வந்த‌ பிறகு எனக்கு வேலைகளும் அதிகரித்து விட்டது. மெல்ல‌ அவனை நனும், என்னை அவனும் புரிந்து கொண்டு விட்டோம், அவனை எனக்கு பிடித்து விட்ட‌ பிறகு அவனை கவனிப்ப்தே எனக்கு குதூகலமாக‌ இருந்தது. 

                 காலையில் எழுந்து பழைய‌ வேலைகளை முடித்து விட்டு, பசும் பாலை புட்டியிலடைத்து அவனுக்கு கொடுக்கும் போது ஏதோ... உண்மையான‌ தாயின் மடி கிடைத்து விட்ட‌ சந்தோசத்தில், "‌ஃப்பச்சக்கு... ஃப்பச்சக்கு..." என்று வாலையாட்டிக் கொண்டு முட்டி முட்டிக் குடிப்பான், குடித்து முடித்ததும் கடலைப் புண்ணாக்கை சிறுக‌ உடைத்துக் கொடுப்பேன். சந்தோசமாக ரசித்துச் சாப்பிடுவான், பிறகு கொடுக்காப் புளி தழையையோ... அல்லது கடலைச் செடியையோ... எடுத்து வந்து அவன் முன் கட்டித் தொங்க‌ விட்டு விட்டு பள்ளிக்குச் செல்வேன்.

                 வாத்தியார் பாடம் நடத்தும் போதும் அவன் நினைவிலேயே வகுப்புகள் தொலைந்தோடிவிடும், மாலை வந்ததும் அவனைப் பிடித்துக் கொண்டு மேய்க்கப் புறப்பட்டு விடுவேன். 

                 இப்போது பத்து நண்பர்களுக்குச் சமமாய் என்னை அவன் மகிழ்வித்துக் கொண்டிருந்தான், பயங்கரச் சுட்டிப்பயல். அவனுக்கு நான் ஒரு நல்ல‌ வளர்ப்புத் தாய் என்று நன்றாகப் புரிந்து கொண்டான். ஒரு சின்னக் குழந்தைக்கு எவ்வளவு துடுக்குத் தனம் இருக்குமோ... அதைவிடத் துடுக்கன், மனிதனுக்கு குறைந்தது மூன்று ஆண்டுகளாவது தாயின் அன்பும், அரவனைப்பும், ஆதரவும் தேவைப்படும், ஆனால் இவன் பிறந்த‌ ஒரே மாதத்தில் அவன் தாயிடமிருந்து அனைத்து பந்தங்களையும் முறித்துக் கொண்டு வந்தவன் என் நண்பன். அவன் மனிதர்கள் மேல் அப்ப‌டி ஒரு அசைக்க‌ முடியாத‌ நம்பிக்கை வைத்திருந்தான்.

                 எங்கள் வீட்டிலுள்ள‌ அனைவருக்கும் அவன் செல்லப் பிள்ளை, அவனுக்கும் எல்லோரிடத்திலும் அப்ப‌டி ஒரு அன்யோன்யம், நான் இல்லாத‌ போது என் தாத்தா அவனுக்கு ஒரு மாற்றாந் தாயாய் இருந்து வந்தார். அவன் நாளடைவில் முருங்கை மரம் போல‌ கிடு கிடு வெனவும், நல்லகொழு கொழு வெனவும் வளர்ந்து விட்டான். இப்போது எனக்கே ஆச்சயமாகவும், வியப்பாகவும் இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்னால் அவனை நான் தூக்கிச் செல்லும் போது செல்லமாக‌ இருக்கியனைத்தால் அவனுக்கு மூச்சு முட்டிவிடும், கிழே இறக்கி விட்டால் எனக்குப் பின்னாலேயே ஓடி வருவான், இப்போதெல்லாம் என்னைப் பாடாய்ப் படுத்தி விடுகிறான், ஆறு மாதத்திற்குள் அசுர‌ வளர்ச்சியடைந்து விட்டான், கயிறை நான் பிடித்திருந்தால், என்னை இழுத்துத் தள்ளி விட்டு ஓடிவிடுவான், எனக்கு கோபம் கோபமாய் வரும், அந்தச்சமயம் பார்த்து என்னை சமாதானப் படுத்துவது போல‌ என் காலில் வந்து உராய‌ ஆரம்பித்து விடுவான், அவனினத்தில், அவனை எதிற்க‌ ஊரில் வேறு ஆளேயில்லை அப்படியொரு சண்டித்தனம் செய்வான், அவன் வயது ஆண்களைக் கண்டாலே அவனுக்கு எங்கிருந்துதான் கோபம் வருமோ தெரியாது, உடனே காதை விரைத்துக் கொண்டு பின்னுக்குச் சென்று காலைப் பர‌ பர‌ வெனறு தரையிலுள்ள‌ மண்ணை வாரி வாரியடித்து மின்னலென‌ முன்னால் ஓடிவந்து எதிரியைத் தாக்க‌ ஆரம்பித்து விடுவான். இவ்வளவுக்கும் இவனுக்கும், அவனுக்கும் எந்த‌ வித‌ முன் விரொதமும் இருக்காது. இரண்டே முட்டில் எதிரி பயந்தோடிவிடுவான், அவனைத் தோற்கடித்து விட்ட‌ கர்வத்தில் என்னை வந்து உராசுவான், பெண்களைக் கண்டால் பெட்டிப் பாம்பாய் அடங்கி விடுவான். அப்படியே அந்த‌ பெண் ஆட்டைத் துரத்திக் கொண்டு ஓடிவிடுவான், பொம்பலைப் பொறுக்கிப் பயல்.

                  இப்படி சந்தோசமாக‌ இருந்த‌ நாட்களுக்கு, அந்த‌ நாள் முற்றுப் புள்ளி வைத்து விட்டது.

                  ஏனோ எனக்குள் ஒரு இனம் புரியாத‌ வேதனை என் மனதைப் போட்டுப் பிழிந்து கொண்டிருந்தது, காரணம் இன்னும் சில‌ நிமிடங்களில் அவனின் கடைசிப் பயணம் தொடங்கப் போகிறது, இன்னும் ஒரு சில‌ மணித்துளிகளில் அவன் நிறந்தறமாக‌ என்னை விட்டுப் பிரிந்து விடுவான், இங்கே பிரிவு என்பது அவனின் மரணத்தைக் குறிக்கும்.

                  ஆம் இன்று அய்யனார் சாமிக்கு விழா... இங்கே விழா என்பது பலியிடும் விழா... பல‌ உயிர்களின், உயிரை எடுக்கும் விழா... பல‌ மரண‌ ஓலங்கள் எழுப்பப்படப் போகும் கடவுள் சன்னிதி விழா. இன்று காலை முதல் என்னால் சாப்பிட‌ முடியவில்லை, அறுவைச் சிகிச்சை மூலம் தான் குழந்தையை எடுக்க‌ முடியும், குழந்தையின் உயிருக்கு உத்தரவாதம் தர‌ முடியாது. என்று சொன்ன‌ பிறகும் அறுவைச் சிகிச்சை அறைக்குச் செல்லும் தாயின் வேதனையைப் போல‌, நானும் வேதனைப் பட்டுக் கொண்டிருந்தேன், ஆனால் அவன் இதையெல்லம் கண்டு கொள்ளாமல் கொடுக்காப் புளித் தழையை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டிருந்தான், அவனை வெட்டப் போவது தெரியாமலே.

                  அவனைப் பார்க்கப் பார்க்க‌ எனக்கு ஒரே அழுகை, தூக்கு தண்டனை கைதியின் கடைசி ஆசை போல‌, அம்மா விடம் சென்று அழுது அடம்பிடிக்கிறேன், என் தாத்தா விடம் ஓடிச் சென்று முறையிடுகிறேன், தேர்தலில் வெற்றி பெற்ற‌ எம்.எல்.ஏ போல‌, இருவரும் என் கோரிக்கையை கண்டு கொள்ளவேயில்லை. செ.அகரம் காட்டிலுள்ள‌ அய்யனார் கோவிலுக்கு புறப்படுவதிலேயே அவர்கள் குறியாய் இருந்தார்கள்.

                   என் நண்பனை வெட்டுவதற்கு பிரத்யேகமாக‌ ஒரு கொடுவாளை என் தாத்தா தீட்டிக் கொண்டிருந்தார், ஒரே வெட்டில் என் நண்பனின் தலை வேறு, உடல் வேறு ஆக‌ வேண்டுமாம், இது தெரியாத‌ என் நண்பன் தனக்கு தழை வெட்டவே, தன் எசமானன் கத்தியைத் தீட்டுகிறார் என்று நினைத்துக் கொண்டது போலும், செல்லமாக‌ என் தாத்தாவை நாவால் வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

                    என் நண்பனின் பயணம் தொடங்கி விட்டது, அவனின் மரணப் பயணம் தான். வண்டி கட்டி பூசை, பொங்கல் பொருட்களை ஏற்றிக் கொண்டு சாரை சாரையாய் வண்டிகள் சென்று கொண்டிருக்க‌, ஒவ்வொரு வண்டிக்குப் பின்னாலும் கொடுக்காப் புளி தழையோ, அல்லது கடலைச் செடியையோ கட்டித் தொங்க‌ விட்டிருக்க‌, அதன் பின்னால் தன் எசமானன்கள் மேல் வைத்திருக்கும் அசைக்க‌ முடியாத‌ நம்பிக்கையில் ஆடுகள் தழையைச் சாப்பிட‌ விழைய‌, வண்டிகள் செல்லச் செல்ல‌ தழையை ருசிக்கும் வேகத்தில் தன் மரணப் பாதையைக் கடந்து கொண்டிருந்தது ஆடுகள்.

                     ஆடுகள் சென்று கொண்டிருந்தது எப்படி இருந்த ‌தென்றல், பொதி சுமக்கும் கழுதை நடக்க‌ முடியாமல் சென்று கொண்டிருக்க‌, அதன் மேல் அமர்ந்திருப்பவன். கழுதை விரைவாகச் செல்ல‌ வேண்டும் என்பதற்காக‌, ஒரு கொம்பில் கேரட்டைக் கட்டித் தொங்க‌ விட்டு அதன் முன்னால் நீட்ட‌, அதை ருசிக்கும் விதத்தில் முன்னோக்கி ஓடும் கழுதையைப் போல‌, ஆடுகள் தழையைச் சாப்பிட‌ வண்டிகளின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தன‌.

                      அய்யனார் கோவிலும் வந்தது, பூசையும் ஆரம்பமானது, அவரவர் தங்கள் குழந்தையைப் போல‌ பாசம் காட்டி வளர்த்த‌ ஆட்டை சந்தோசமாக‌ வெட்டு கொடுக்கக் காத்துக் கொண்டிருந்தார்கள், அப்போதும் ஆடுகளுக்கு தங்களின் எசமானன் மேல் வைத்த‌ நம்பிக்கை இம்மியளவும் குறையாமல் உணவுக்காக‌ தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்க‌,

                       மற்ற‌ ஆடுகள் கழுத்தில் பூ மாலை போடப் பட்டது போல‌, என் நண்பனின் கழுத்திலும் மாலை போடப்பட்டது, ஒரு ஆட்டின் கழுத்திலிருந்த‌ மாலையை மற்றொரு ஆடு சாப்பிட‌ முயன்றது.

                       அய்யனார் காலடியில் வைத்து பூசை செய்யப்பட்ட‌ மஞ்சள் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, அனைத்து ஆடுகளின் மேலும் தெளிக்கப்பட்டது, ஆடுகளை வெட்டுவதற்கு அவைகளின் சம்மதம் வேண்டுமாம், சில‌ ஆடுகளுக்கு தாங்கள் மரணிக்கப் போவது தெரிந்திருக்கும் போலும், மஞ்சள் தண்ணீர் தெளித்த‌ பிறகும் தலையை ஆட்டாமலேயே இருந்தன‌, அதன் எசமானர்கள் அதனிடம் எப்படியாவது சம்மதம் வாங்கி விடவேண்டும் என்ற‌ முனைப்பில், குடம் குடமாய் தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்தார்கள், அப்படியும் சம்மதம் தராத‌ ஆடுகளின் காதுகளில் தண்ணீரை ஊற்றி வலுக்கட்டாயமாக‌ அதன் சம்மதம் பெறப்பட்டது.

                       ஆனால் என் நண்பனுக்கு அப்படிப்பட்ட‌ அவ‌ நம்பிக்கை ஏற்பட்டிருக்காது போலும், மஞ்சள் தண்ணீரைத் தெளிக்கப்பட்ட‌ ஆடுகளில் முழு நம்பிக்கையோடு என் நண்பன் தான் முதலில் தலையை ஆட்டினான். அவ்வளவு தான் அது நடந்தே விட்டது.

                       அழுகையில் நான் என் தந்தையின் பிடியில் சிறை பட்டிருக்க‌, அய்யனார் கோவில் பூசாரி தன் வீர‌, தீர‌, பராத்காரத்தை ஒன்று திரட்டி ஒரே வெட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் தலை வேறு, உடல் வேறு ஆனது. அப்போது தான் அவனுக்கு மனிதர்களின் நம்பிக்கை துரோகம் தெரிந்திருக்கும் போலும்.

                        அவன் தலை வெட்டப்பட்டு கண் திறந்த‌ நிலையில் தனியாகத் துடித்துக் கொண்டிருக்க‌, அவன் கழுத்திலிருந்து ரத்தம் பீரிட்டு அடித்துக் கொண்டிருக்க‌, அவன் துடித்தத் துடியை வெட்டுப் படாமலேயே என் தந்தையின் சிறையில் நான் துடித்துக் கொண்டிருக்க‌, வெட்டப்பட்ட‌ நிலையில் என்னை எட்டி எட்டி உதைத்து " அடப்பாவிகளா உங்களை நம்பியதற்கு என் உயிரையே பிரிச்சிட்டிங்களெ..." என்று கோட்பது போல் இருந்த்து.

                        அவனுக்கு மனிதனின் முதல் நம்பிக்கை துரோகமும், எனக்கிருந்த‌ கடவுள் நம்பிக்கை மேல் விழுந்த‌ முதல் சம்மட்டியடியும் ஒரே நேரத்தில் நிகழ்ந்து விட்டது.
      

                                                                    முடிந்தது
                                                                                                                                                  இவன் 
                                                                                                                                          அ.கு.அன்பரசன்.