"மனம்" ஆராய்ச்சிக் கட்டுரை

தமிழ்த்தேனீ
ஜூலை 24, 2008 06:39 பிப
கட்டுரை-மனம் பாகம் 1
எண்ணம் ஆக்கம் வடிவம்: ஆர் கிருஷ்ணமாச்சாரி என்கிற
தமிழ்த்தேனீ

கடலாழம், ப்ரபஞ்சத்தின் தூரம், ஒளியின் வீச்சு, வேகம்,
ஒலியின் அதிகபட்ச அளவு, எதை வேண்டுமானலும்,
அது அதற்குண்டான விஞ்ஞான அளவுகோள்களை,
வைத்துக் கண்டு பிடித்து விடலாம், ஆனல் இன்னும்
மனிதனால் கண்டு பிடிக்க முடியாத ,நான்கு விஷயங்கள் ,
வெகு நாட்களாக என்மனதை உறுத்திக்
கொண்டே இருக்கிறது,

அவை: 1. மனம் :- மனதாழம், மனத்தின் வீச்சு, மனதின் சக்தி!

2. மூளை:- ஒரு மூளையில் பதிவாகிய விஷயங்களை
மற்றொறு மூளையில் பதிவு செய்ய ஒரு இயந்திரம்!

3. மூளையும் , மனதும் ,ஒன்று தானா?இல்லை வேறு வேறா?!

4.மனம், இந்தப் ப்ரபஞ்சத்துக்குள், அடங்குகிறதா அல்லது
இந்த ப்ரபஞ்சம், மனதுக்குள், அடங்குகிறதா?!


இவை நான்றையும் கண்டு பிடித்துவிட்டால்,
ஓரளவு படைப்பின் மூலத்தின் ஒரு பகுதியையாவது,
கண்டுபிடித்ததாக மனிதன் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்,!

எதைப்பற்றி ஆராய்ச்சி செய்யவேண்டுமென்றாலும்,
அதற்கு ஒரு ஆய்வுக்களம் ,அல்லது ஒரு விஞ்ஞான
ஆராய்ச்சிக்கூடம், வேண்டும்!
சரி ,மனதைப் பற்றி ஆய்வு செய்ய எங்கு போவது?
எங்கும் போக வேண்டாம் ,நம் மனமே நம் ஆராய்ச்சிக்
களம் , விந்தை தான் ,ஒரு விஷயத்தைப் பற்றி ஆராய்ச்சி
செய்ய அந்த விஷயமே, ஒரு ஆராய்ச்சிக் களமாவது,
விந்தையிலும் விந்தைதான்!!!

மனதைப் பற்றி ஆய்வு செய்ய விஞ்ஞானக் கூடம்
வேண்டாம், மெய்ஞானக்கூடம் தான் வேண்டும்!
ஏனென்றால், மெய்யிலேதானே மனம் இருக்கிறது,
ஆமாம், மெய் எனும் உடம்பு ,என்று சித்தர்கள்
சொன்னது போல்,
இந்த மனம் உடம்பிலேதான் இருக்கிறதா?
அப்படியென்றால் , உடம்பை அல்லவா ஆராய்ச்சி
செய்ய வேண்டும் ? இல்லை ..இல்லை..
மனத்தைப் பற்றி , ஆராய்ச்சி செய்ய
விஞ்ஞானம் மட்டும் போதாது,
மெய்ஞ்ஞானமும் வேண்டும்.!!

மெய் ஞானம், எங்கு கிடைக்கும்?அனுபவ அறிவிலேதான்
கிடைக்கும் , ஆகவே நாம் மனதைப் பற்றி ஆராய,
அனுபவத்தை, அனுபவத்தின் மூலமாக கிடைத்த
எண்ணங்களை ,ஆராய்ச்சி செய்வோம்.!!
அனுபவம் கொடுக்கும் தெளிவு ,அறிவு ,ஞானம்
இவைகளை அடுத்தவரால் கொடுக்க முடியாது,
அவ்வளவு ஏன்,, ஆண்டவன்கூட நமக்கு அனுபவங்களைக்
கொடுத்து , அதன் மூலமாகத்தான் தெளிவைக் கொடுக்கிறான்,
ஆதலால் என் சிற்றறிவுக்கு ஏற்பட்ட அனுபவங்களை,
பாடமாகக் கொண்டு ,என் தெளிவை , உங்களுடன்
பகிர்ந்து கொள்கிறேன்.!!!

ஆதலினால், முதலில் மனம் என்பதைப் பற்றி, என் மனதில்
உதித்த சில எண்ணங்களை, உங்களுடன் பகிர்ந்துகொள்ளும்
என் ஆசையை , இந்தக் கட்டுரை மூலமாக சிறிதேனும்
தீர்த்துக்கொள்ளத்தான், இந்த சின்ன முயற்சியை
மேற்கொள்ளுகிறேன்.!!

கடலாழம் காண முடிந்தாலும் பெண்கள்,
மனதாழம் காண முடியாது.!!
என்று ஒரு கவிஞ்ஞன் பாடினான்,
மனிதனுக்கு ஆண் பால் ,பெண் பால், போன்ற
வித்தியாசங்கள் உண்டு,
மனதுக்கு ஏது வித்யாசம்?
மனம் என்னும் ஒரு கருவி ,மனிதனுக்கு மட்டும் சொந்த
மில்லை ,
மனம்....எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவான ஒன்று,
ஒரு கரப்பான் பூச்சியை நாம் பார்த்து,
இதை எப்படியும் தப்பவிடக் கூடாது அடித்து
விடவேண்டும் ,என்று நம் மனதில் நாம் நினைப்பதை
அந்தக் கரப்பான் பூச்சி அதன் மனதில் உணர்ந்து ,
இவனிடம் மாட்டமல் தப்பி விடவேண்டும், என்று
நினைத்து அதற்காக எப்படி ஓடினால் தப்பிக்க
முடியும், என்று திட்டம் போட்டு தப்பித்து ஓடிவிடுகிறது.!!
இத்தனையும் கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்துவிடுகிறது.!!

ஆகவே மனத்தை பற்றி சிந்திக்க, வேறு யாரால்
முடியும்? ஆகவே, என் மனமே நீதான் எனக்கு,
உன்னைப் பற்றி அறிய உதவவேண்டும்.!!

யார் என்னிடம் வந்து எப்படி இருக்கிறீர்கள்,
என்று கேட்டாலும், எல்லாப் ப்ரச்சனைகளோடும்,
சந்தோஷமாய் இருக்கிறேன், என்று பதில்
சொல்வது என் வழக்கம்.!

ஏனென்றால் ,ப்ரச்சனைகள் இருந்தாலும்,
அவைகளை சமாளித்துக் கொண்டு தான்,
அதற்கு நடுவே வாழவேண்டும், என்ற
கொள்கை உடையவன் நான்.! அது மட்டுமல்ல
“சகித்துக் கொண்டு வாழ்வதை விட
ரசித்துக் கொண்டு வாழ்வது சிறப்பானது “

ப்ரச்சனைகள் இல்லாத ஜீவராசிகளே,
உலகத்தில் கிடையாது என்பது அடியேனுடைய
எண்ணம்.!!
ஒரு முறை ஒருவர் சொன்னார்,
ப்ரச்சனை இல்லாத மனுஷனும் இல்லை,
அர்ச்சனை இல்லாத கடவுளும் இல்லை, ன்னு

ஆனால் அர்ச்சனை இல்லாத கடவுள்கள்
இருக்கிறார்கள், ப்ரச்சனை இல்லாத ஜீவராசிகள்,
இல்லை இல்லை இல்லவே இல்லை,
இதுதான் உண்மை.!!

ப்ரச்சனைகள் பல வகைப்படும்,

1.தானாகவே வருவது,
2 நாமாக எற்படுதிக்கொள்ளுவது,
3.தீராத ப்ரச்சனைகள்,
4முயன்றால் தீர்த்துவிடக்கூடிய ப்ரச்சனைகள்,


ஆனால் ,
மனம் என்று ஒன்று இருக்கும் வரை,
அந்த மனத்தை கட்டுப்படுத்தும்
சூட்சுமம் அறியாத வரையில்,
யாருமே ப்ரச்சனைகளில் இருந்து
மீளவே முடியாது,
ஆகவே மனம்தான் பெரிய ப்ரச்சனை.!!

மனம்........

இது எங்கிருக்கிறது? , இதை முதலில்
கண்டுபிடிக்க வேண்டும்,
மனம் மூளையிலிருக்கிறதா?
இல்லை ,இதயத்தில் இருக்கிறதா?
சொல்லமுடியவில்லை , ஏனென்றால்,
மனமும் உயிரும் ஒரே மாதிரியானவை,
மனசு அதிர்ந்து போனால் உயிர் போகி
றது- உயிர் போய் விட்டால் மனது
எங்கு போகிறது?,
உயிர் எங்கிருக்கிறது? இதயத் துடிப்பிலா,
ரத்தத்திலா?, நாடிகளிலா? ,மூளையிலா?, அல்லது,
உணவிலா?
கடினம் கண்டுபிடிப்பது கடினம்!!!!


மனசுலெ இரூக்கு, வார்த்தையில் வரமாடேங்குது
அப்பிடீன்னு சொல்வோம்,

அப்படியானால், எண்ணங்கள் தேக்கி வைக்கப்படும்
இடம் ,மனது அல்ல மூளை.!
-இது சரியென்றால் , மனது மூளையிலுள்ளதா?
அப்படியென்றால் ,அன்பை, காதலை, வெளிக்காட்ட
இதயத்தின் படம் எப்படி வரையலாம்?
மூளையின் படமல்லவா வரையவேண்டும்?

மூளையின் , படம் வரைந்து காதலை சொன்னால்,
என்ன ஆகும் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது!!
நிச்சயமாக பயித்தியக்கார விடுதிக்கு அனுப்புவார்கள்.

அப்படியானால் ,நாம் பார்க்கும் பொருட்கள்,
அழகு பிம்பங்கள், எல்லாம் மூளையில்
பதிகிறதா? அல்லது மனதில் பதிகிறதா?
அப்பப்பா.... மனம் நம்மை எவ்வளவு ஆட்டி
வைக்கிறது?

ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன்,
வேலைக்காரர் என்னை உள்ளே
உட்காரச் சொல்லி விட்டு,
அவரை அழைத்துவர உள்ளே போனார்,
அதற்குள் என் மனதிலே எத்தனை எத்தனை
எண்ணங்கள்?
இவரைப்பார்ப்பது நம் தகுதிக்கு சரிதானா?,
இவரால் காரியம் நடக்குமா? ,இவர் எப்படி
இருந்தாலும் நைச்சியமாய்ப் பேசி காரியத்தை
முடிக்க வேண்டுமே!,
அந்த அறையை நோட்டமிட்டது என் மனது,
ஒரு விலை உயர்ந்த பொருள் என் கண்ணில்
பட்டது, உடனே அதை அவர் வருவதற்குள்
எடுத்து வைத்துக் கொள்ளலாமா?இப்படி
ஒரு மனது சொல்லியது,-அதற்குள் இன்னொரு
மனது ,வேண்டாம் அது தவறு என்று சொல்கிறது,
அடேயப்பா எத்தனை மனது உள்ளே இருக்கிறது?
இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும்!!


ஒவ்வொரு மனிதன் உள்ளேயும் ஒரு சக்தி இருக்கிறது,
தவறான காரியம் செய்யும்போது, உள்மனது
வேண்டாம் என்கிறது , அதை கண்டுகொள்ளாமல்
காரியம் செய்யும்போது ,மனசாட்சி இல்லாமல்
காரியம் செய்தோம் என்று சொல்கிறார்கள்,
இந்த உள்மனது சொல்வதைக் கேட்க
ஆரம்பித்தாலே போதும் ,காவல் நிலையங்களும்
வழக்குரைக்கும் மன்றங்களோ தேவைப்படாது,
உள் மனதை அலட்சியப்படுத்தி விட்டு,
செயலாற்றுபவர், திருடன் ,காமுகன் ,குடிகாரன்,
கொலைகாரன், என்ற பட்டங்களை சுமக்க
வேண்டியுள்ளது.!!

ஆகவே, எண்ணங்களை வைத்து யாரும்
தண்டனை வழங்குவதில்லை,
செயலை வைத்துதான், தீர்ப்பளிக்கிறார்கள்,
தண்டனை வழங்குகிறார்கள்,

இந்த மனது இருக்கிறதே, அதன் எண்ணங்களை,
துல்லியமாய் அளக்க ,இன்னும் கருவி கண்டு
பிடிக்கவில்லை,!!
ஆனால் நீதி மன்றங்களில், தண்டனை கிடைக்கிறதோ,
இல்லையோ, நம் மனம் மட்டும் நாம் செய்யும்
எதையுமே மறப்பதில்லை,!!!
பொல்லாதது இந்த மனது,
அவ்வப்போது எச்சரிக்கிறது,
உறுத்துகிறது ,நம் நிம்மதியைக் கெடுக்கிறது,
ஆகவே நீதி மன்றம் வெளியே இல்லை,
நம் உள்ளேயே இருக்கிறது.!!!

ஆகவே மனம் ,நம்மை ஆட்டிவைக்கும் கருவி,
எச்சரிக்கும் கருவி, ஆக மனம் என்பது ,ஒரு
கருவி , கருவி இருக்கிறது , ஆனால்
அது எங்கிருக்கிறது ?,,
அதுதான் ஆண்டவனின் சூக்ஷுமம்,
அதனால்தான் ஞானிகள்
உன்னை நீ உணர், என்று சிறிய வார்த்தையில்,
பெரிய தத்துவதைக் கூறுகின்றனர்.!!


ஒரு மறக்கமுடியாத சம்பவம்,

ஒரு நண்பர் வீட்டுக்கு சென்றிருந்தேன்,
அங்கு உள்ளே நுழைந்தவுடன்,
அந்த நண்பரின் குழந்தை வாங்க மாமா
என்று என்னைக் கூப்பிட்டு, என்னைத் தாண்டி
ஓடவும் ,அங்கிருந்த இரும்பு பீரோ அந்தக் குழந்தை
மேல் சாயவும் , நான் வேகமாக எழுந்து ஓடினேன்,
பீரோ என் மேல் விழுந்தது, எனக்கடியில் குழந்தை
நசுங்குகிறது,
பீரோ என்னை நசுக்குகிறது,
எப்படியும் குழந்தயைக் காப்பாற்ற வேண்டும்
என்கிற வெறியில் , கஷ்ட்டப்பட்டு பீரோவை
கொஞ்சம் மேலே தூக்கி ,குழந்தையை எனக்கடியிலிருந்து
வெளியே தள்ளிவிட்டேன், பிறகு என்னை அறியாமல்
மயங்கிவிட்டேன் , நாலுபேராலும் தூக்க முடியாத
அந்த பீரோவை, நான் எப்படி தாங்கினேன்? ,
எப்படி குழந்தையை காப்பாற்றினேன்?
என்று எனக்கே புரியவில்லை,
எனக்கு கை எலும்பு முறிவு ,
காலில் நல்ல அடி ,படுக்கையிலிருந்து மூன்று
மாதம் கழித்து தான் நான் எழுந்தேன்,
எனக்கு எப்படி அவ்வளவு பலம் வந்தது?
என் மனம் குழந்தையைக் காப்பாற்றக்
கட்டளை இட்டது,
ஆக, எனக்கு இயல்பாய் இல்லாத பலத்தை,
என் மனம் எனக்கு கொடுத்திருக்கிறது,
ஓ... மனம் இருந்தால் மார்க்கம் உண்டு,
என்பது இதுதானோ?
ஆகவே மனதைக் கட்டுப்படுத்தினால்
எதையும் சாதிக்கமுடியும்.!!

விந்திய மலையிலே சித்தர்கள், அந்தப்
பனியிலும் தங்கள் உடலை 98.4,
என்கிற அளவிலேயே வைத்திருக்கிறார்கள்,
-காரணம் மனக் கட்டுப்பாடு,

அழகான பெண்ணை பார்க்கும்போது,
அவளை தங்கையாகவோ, தாயாகவோ,
மகளாகவோ, அல்லது சக்தியின்
அவதாரமாகவோ ,பார்க்கும் மனப்பக்குவம்
ஏற்படுத்திக்கொள்ள மனக்கட்டுப்பாடு
அவசியம் ,ஆகவே... மனக்கட்டுப்பாடு இல்லாமல்,
இந்த ப்ரபஞ்சம் இல்லை-இந்தப் ப்ரபஞ்சம்,
மனதுக்குள் கட்டுப்படவேண்டும்.!!!
சகல ஜீவராசிகளையும் ஆட்டிப்படைப்பது
மனம்!!!!
நம் மனதைக் கட்டுப்படுத்தினால் ,வசமாகாத
சித்துக்களே இல்லை ,நம் எண்ணங்கள் தான்
நம்மை வாழவைக்கிறது ,வீழ வைக்கிறது.!!

நம்மை அறியாமலே, நமக்கு ஒருவர் மீது
வெறுப்பு வறுகிறது, என்றால் அவர் தவறான
எண்ணங்களைக் கொண்டிருப்பார், அதை
நம் மனம் கண்டுபிடித்து விடுகிறது,
அதேபோல் ,நம்மை அறியாமலே ஒருவர் மீது
நாம் கொள்ளும் அன்புக்கும், அதுதான்
காரணம், நம் மேல் அவர் உண்மையான பாசம்
வைத்திருப்பார் ,அதையும் நம் மனம்
கண்டுபிடித்துவிடுத்துவிடுகிறது.!!

ஒரு ராஜா, வழக்கமாக உலா வரும் பாதையில்,
ஒரு சந்தனக்கட்டை வியாபாரி, அவருக்கு
வணக்கம் சொல்வார், ராஜாவுக்கும்
அவரைப் பார்க்கும் போது சந்தோஷமாக
இருக்கும் ,ஒருநாள் அந்த சந்தனக்கட்டை
வியாபாரி வணக்கம் சொல்லும்போது,
ராஜாவுக்கு,அவரை வெட்டிப் போடவேண்டும்
போல்இருந்தது, அதற்கு காரணம் தெரியாமல்,
அவர், மந்திரியைக் கூப்பிட்டு ஒரு நாளும்
இதுபோல் தோன்றியது இல்லையே
இன்று ஏன் இப்படி தோன்றுகிறது
என்று கேட்டார்,,


மந்திரி ஒருநாளைக்கு அந்த வழியே
செல்லாமல் வேறு வழியில் ராஜாவை
அழைத்துக்கொண்டு சென்றுவிட்டு,
மறுநாள் பழைய வழியிலேயே, அழைத்துக்கொண்டு
போனார், அன்று மீண்டும் ராஜாவுக்கு வியாபாரியை
பார்த்து சந்தோஷமாக இருந்தது, அதற்கு என்ன
காரணம் என்று மந்திரியைக் கேட்டார்,
அரசே..... அந்த சந்தனகட்டை வியாபாரியின்
சந்தனக் கட்டைகள் விற்காமல் இருந்தன,
அன்று அவன் மனதில் இந்த ராஜா இறந்து
போனால் அவரை எரிப்பதற்கு, சந்தனக்கட்டைகள்
விற்று விடுமே ,என்று எண்ணினார்,
ஆனல் நேற்று அவர் சந்தனக்கட்டைகளை ,
விற்பதற்கு வேறு ஏற்பாடு நான் செய்தேன்,
அதனால், இன்று ராஜா நீடூழி வாழ வேண்டும்
என்று நினைக்கிறார் , அதனால் உங்களுக்கும்
சந்தோஷமாக இருக்கிறது, என்றார் .!!
மற்றவர்களின் எண்ண ஓட்டங்களைக்
கூட நம் மனம் அறிகிறது,
இதைதான் பெரியோர்கள் த்ருஷ்டி படுகிறது
என்று சொன்னார்கள் .!!!

ஆகவே,நம் மனதைக் கட்டுப்படுத்தவேண்டும் ,
மேலும் அடுத்தவர் மனதிலும் நல்ல எண்ணங்கள்
எற்படுத்தி, அவர்களையும் நம் வசமாக்கவேண்டும்,
இதைத்தான் ,ஆங்கிலத்தில் இமேஜ், என்கிறார்கள்
ஆக, மனம் எனும் கருவியை கட்டுப்படுத்தியே
ஆகவேண்டும்.!!
எப்படி கட்டுப்படுத்துவது?
அனுபவம் தான் ஆரம்பப் பாடம்,
அனுபவம், அனுபவித்து அறிய வேண்டிய ஒன்று,
அடுத்தவர்களால் உணரவைக்கமுடியாத ஒன்று,
அனுபவம் :- உலகில் எல்லாத் தவறுகளையும்
நாமே செய்து அனுபவம் பெற வேண்டுமென்றால்
அதற்கு ஆயுள் போதாது,அடுத்தவர் தவறு செய்யும்
போது கூட அதைப் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்,
ஆதலினால், அன்றாடம் நம்மைச்சுற்றி நடக்கும் ,
நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்,
அதில் நம்மை ஆழ்த்தி அதைக் கற்பனையாய்
அனுபவித்து, பெற்றுக்கொள்வது, அனுபவம்
ஆகும்-

கட்டுரை- மனம் பாகம் 2

என் மனம் நீ அறிவாய், உந்தன்
என்ணமும் நான் அறிவேன்.
என்ற கவிஞர் கண்ணதாசனின் கவிதை
வரிகளும்,
கண்ணும் கண்ணும் கொள்ளைஅடித்தால்,
காதல் என்றே அர்த்தம்.
என்ற கவிஞர் வைரமுத்துவின் ,வரிகளும்
வியப்பூட்டுகின்றன, நம் சிந்தனையைத்
தூண்டுகின்றன!!!

கண் மனதின் வாசல்-ஆகவே மனம் ஒன்றோடு
ஒன்று வசமாகிவிட்ட, காரணத்தாலேதான்
கண்ணோடு கண் நோக்குகிறதா?
அல்லது கண்கள் சந்தித்துக்கொண்டதால்,
மனம் வசப்படுகிறதா?
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்,
கண்கள் கலந்தன, கருத்தொருமித்தோம்,
என்றார் வர்ணித்தார் கம்பர்.
ஆதலால் கண்கள் கலந்தால், கருத்து ஒருமித்துப் போகும்,
அதன் பின் மனம் வசமாகும் என்பதா?

அல்லது ,இராமன் பரப்ரும்மம், சீதை உலக மாதா,
என்று, பரஸ்பரம் ஒருவரை ஒருவர், ஏற்கெனவே
மனதளவில் அறிந்திருந்ததால் ,ஒருமித்துக் கண்கள்
கலந்தனவா?

ஏனென்றால் இராமனோ சீதையோ வேறு யாரையும்
பார்த்து கருத்து ஒருமிக்கவில்லையே,
ஆகவே கண்கள், மனதின் வாசல்,
உள்ளிருப்பவர் சம்மதம் கொடுத்தால் அன்றி
வாசல் திறக்குமா?

ஆகவே உள்ளிருப்பது மனம்-உயிர்-ஆத்மா
அகத்தின் அழகு முகத்தில் தெரிவது, அகத்தின்
வாசலாகிய கண்கள், முகத்தில் இருப்பதால் தானோ?

மனக்கதவம் திறந்த பரம்பொருளே ,திருக்கதவும்
திறக்க வரமருளே, என்கிற அப்பரின் வரிகளும்
இதற்கு நல்ல சான்றாகும்.
என் மனசறியச் சொல்கிறேன்,
என் மனசாலகூட உனக்கு த்ரோகம்
செய்ததில்லை,
என் கண்களைப் பார், அதில் கள்ளம் இல்லை
இப்படியெல்லாம் பேசுகிறோம்.

மனதில் கள்ளம் இல்லவிட்டால், கண்கள்
தூய்மையாய் இருக்கும், என்பது உண்மையாகிறது.

மனதடக்கத்தோடு ,தன்னடக்கமாக ,இருப்பவன்
உலகை ஆளுவான் ,என்பார்கள்.
வாய் பேச முடியாத ஊமைகள் கூட,
கண்களாலும், சைகைகளாலும், அவர்கள்
நினைப்பதை ,நமக்கு புரியவைத்துவிடுகிறார்கள்.

சரி, கண்கள் இல்லாத குருடர்களூக்கு, இருக்கும்
மனதுக்கு, வாசல் கிடையாதா? உண்டு.
அப்பார்வை அற்ற விழிகள்கூட, அவை ஏற்படுத்தும்
பாவங்களினால் , அன்பை வெளிப்படுத்தி விடும்,
அந்த பாவங்கள், அவர்களுக்கு மனதின்
வாசலாகிவிடுகிறது ,பார்வையாகிறது,
மனிதருக்குப் ப்ரதானமாவது மனது,

மனதை எப்படி கட்டுப்படுத்துவது?
கணக்கிலடங்கா எண்ண அலைகள்,
மோதும் கடல் இது,
கடலில் கூட, அலைகள் ஓரத்திலேதான் வரும்,
நடுக்கடலில் அலைகள் இருக்காது,ஆகவே...
கடல் தனக்குத்தானே, நடுவிலே கட்டுப்பட்டு
இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
நடுக்கடலுக்கு போகவேண்டுமென்றால்,
அதற்கு வாகனம் வேண்டுமே,.
எண்ணங்களே, எண்ண அலைகளே, இல்லாத
ஆழ்மனது, என்பது நடுக்கடல் ,என்று
வைத்துக்கொள்வோம்-அல்லது கட்டுப்பட்ட
மனது, என்று வைத்துக்கொள்வோம்,
நம் மனதிற்குள்ளேயே, கட்டுப்படுத்த முடிகின்ற,
ஆழ் மனது இருக்கின்றது, அங்கு நாம்
சென்றால் , மனதைக் கட்டுப்படுத்தலாம்,
சரி... வாகனம் வேண்டுமே, முதலில் அந்த
வாகனம் நம் கட்டுக்குள் வரவேண்டும்-பிறகு
அதை நாம் ஆளவேண்டும், அதன்பின்
அதில் ஏறி, ஆழ் மனதுக்கு செல்லவேண்டும்.!

ஒருமுறை , பகவான் க்ருஷ்ணன் சகாதேவனிடம்,
உன்னால் என்னை கட்டிப்போடமுடியுமா?
என்று கேட்டாராம், உடனே சகாதேவன்
கண்களை மூடி, த்யானம் செய்து, கிருஷ்ணனை
மனதிற்குள்ளே கட்டிப்போட்டானாம்,
அது பக்திக் கட்டு,
அங்கு பக்தி, ஒரு சாதனமாக பயன்பட்டது,
அந்த பக்தி என்னும் சாதனத்தை பயன் படுத்தி,
த்யானம் என்னும் வழியில் சென்று ,ஆழ்நிலையைத்
தான் அடைந்து, அங்கு கண்ணனையும் அழைத்துச்
சென்று, கட்டிவிட்டு தான் மட்டும் வெளியே வந்த,
சகாதேவன் நிச்சயமாய் சக்தி படைத்தவன்தான்,
ஆக.... ஆழ் நிலைக்குப் போக, சக்தி தேவைப்படுகிறது
அந்த சக்தியை அடைய ... த்யானம் ,யோகம் ,தவம் ,
என்று எதை வேண்டுமானாலும் கையாளலாம்.
மனதிலே ,நமக்கு நாமே ப்ரதிக்யை எடுத்துக்கொண்டால்
அன்றி முடியாத காரியம்.

மனோதத்துவ நிபுணர்கள்,கூட நம்மை
வசப்படுத்த, நாமே, நம்மை அவரிடம், நம்பிக்கை
வைத்து ஒப்படைத்தால் தான் முடியும்,அல்லது
நம்மனதைக் கட்டுப்படுத்தும் வழி அவருக்குத்
தெரிந்திருக்க வேண்டும்
ஆகவே... மனதைக் கட்டுப்படுத்த,
முதலில், அதை தயார் செய்யவேண்டும்.

மனமென்னும் மனோதத்துவ நிபுணரிடம்
நாமே ,நம்மை தயார் செய்து ஒப்படைக்கவேண்டும்,
ஒத்துழைக்கவேண்டும், அப்பொதுதான், நம் மனதை
நாமே கட்டுப் படுத்தமுடியும்.!

மண்ணுலகில், மனிதனை விட சிறந்தது வேறொன்றுமில்லை,
ஜீவரசிகளில், மனதை விடச் சிறந்தது வேறொன்றுமில்லை!!!

கட்டுரை- மனம் பாகம் - 3

மனம் என்பது ,நாடு, மொழி ,மதம் ,இனம்,
ஜாதீ ,பணக்காரன், ஏழை, என்கிற எல்லா
அடிப்படைகளையும் கடந்து நிற்பது!!
எல்லாவற்றையும் கடந்து நின்றால் ,அது கடவுள்!!
அல்லவா? அப்படியானால், மனம் தான் கடவுளா?
உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஷேமமாக
இருக்கவேண்டும் என்று ,மனிதர்களின் ஒன்றுபட்ட
மனம் நினைத்தால்-இன்று வளர்ந்துள்ள விஞ்ஞானம்,
அறிவியல் நுட்பங்கள், போன்ற எல்லா வசதிகளையும்,
உலகில் உள்ள எல்லா மக்களும் அடையவேண்டும்,
என்ற சமநோக்கோடு உலகில் உள்ள அனைத்துப்
ப்ரதிநிதிகளும் ,ஒன்று கூடிப் பேசி ,மனதளவிலே செயல்
பட்டால் -பேதங்கள் நீங்கி, செயல்திறன் ,மூளைத்திறன்
அனைத்தும் ,ஒரு புள்ளியில் குவிக்கப்பட்டு,
ஆக்கபூர்வமாக செயல் பட்டு, சரியான , மிகச் சரியான,
விளைவுகளை ஏற்படுத்தும்.
உதாரணமாக அணுசக்தி :-இந்த சக்தியை, இதன் வளத்தை,
பெருக்க தனித்தனியாக செயல் படும் எல்லா நாடுகளும்,
ஒற்றுமையாக சேர்ந்து ,ஒரு அணு ஆராய்ச்சி நிலையம்
அமைத்து, எல்லா நாடுகளும் அதில் பங்கேற்றால்,
அதன் கண்டுபிடிப்புகள்பொதுவாக உலகிற்கே
பயன்படும்.!!!

அதை விடுத்து ,என் நாடு வல்லரசு ,எல்லா நாடுகளும் எனக்கு
பயப்படவேண்டும், என்று நினைக்க ஆரம்பித்தால் ,
அணு ரகசியங்கள், அண்டை நாடுகளூக்கு
விற்கப்படும், அபாயம் தவிர்க்கமுடியாததாகிவிடும்.!

இதை எதற்காக சொல்கிறேனென்றால், எல்லா
நாடுகளும், எல்லா மக்களும், ஒரு மனதாக
இணைந்தால், மனம் ஒருமைப்பட்டால் ,சுபிட்ஷம்
வரும் .
எல்லாம் ஒரு குடைக்கீழ் ஆளப்பட வேண்டும்,
அங்கு ஆளப்படுபவர்கள் சுபிட்ஷமாக இருக்க வேண்டும்,
ஆள்பவர்கள் பொது நோக்கோடு உலகிற்காக
த்யாகம் செய்பவர்களாக இருக்கவேண்டும்',
அதற்கு.. எல்லோரும் பொது நோக்காக ,மனதளவிலே
நல்ல சிந்தனைகளை, மலரச் செய்யவேண்டும்,
எல்லோருடய மனமும் ஒன்றுபடவேண்டும்,
அப்போதுதான் பேதங்கள் மறையும்,
மனதிலே ஆத்மசக்தி வளரும்.!!

நம் மனது , அல்லது மூளை , அன்றாடம்
நாம் சந்திக்கும் சம்பவங்கள், சச்சரவுகள்,
வாசனைகள், இடங்களின் தத்ரூபமான
தோற்றங்கள் , நிறங்கள் ,எல்லாவற்றையும்
பதித்துக் கொள்கின்றது ,
இப்போது கணிணியில் ...,மெமெரி ரிகால்
என்னும் ஞாபகத் திருப்பம் , இருப்பது போல்
நம் மூளையிலும் ,அல்லது நம் மனதிலும்,
ஞாபகங்களை புதுப்பிக்க , ஒரு கருவி இருக்கிறது!
மனோதத்துவ நிபுணர்கள் , நம்மை தற்காலிகமாக
தூக்க மயக்கத்தில், ஆழ்த்தி நம் எண்ண அலைகளை
பின் நோக்கி போகச்செய்து ,அப்போதய கால கட்டத்தில்
என்ன நடந்தது , என்பதை நம் நினைவுக்குக் கொண்டு
வருவது உண்டு,
ஆனால் இதுவரை பதியாத, வருங்கால நிகழ்ச்சிகளை
எந்த முறையிலும் அறிய முடியாது ,என்பது விஞ்ஞானம்,
ஆனால்முடியும் என்கிறது மெய்ஞானம்,

த்ரிகால ஞானிகளை ,நம்முடைய இதிகாச புராணங்கள்
அறிமுகப் படுத்தியிருக்கிறது,
உதரணங்கள்:-
1.ரேணுகா தேவி, ஜமதக்னி முனிவரின் ,கற்புள்ள மனைவி
தன் கற்பின் திறத்தாலேயே, பச்சை மண்ணாலேயே
பாண்டம் செய்து ,நித்ய பூஜைக்கு நீர் கொண்டு வருபவள்,
அந்த நீரிலே, ஒரு கந்தர்வனின் நிழலைக் கண்டு,
இப்படியும் அழகான ஆண்களும் உள்ளனரா?
என்று நினைத்ததை, மனதாலேயே உணர்ந்த
ஜமதக்னி முனிவர்.!!!

2. அர்ஜுனனின் பேரன், அபிமன்யுவின் புத்ரன் ,
பரிஷ்ஷித்து மகராஜா பத்தாவது நாளில்,
பாம்பு கடித்து இறப்பான், என்று முன்கூட்டியே
உணர்ந்து சொன்ன த்ரிகால ஞானி,
ஆகவே,
மரணம் என்பது ,எப்படி ஏற்பட்டாலும்
அதில் எந்த மாற்றமும் இல்லை,
ஆஹா சரியான நேரத்தில் இறந்தார்,
என்றோ... -அடாடா சாகிற வயதா இது
என்றோ...
முடிவு செய்ய நம்மால் முடியுமா?
நாம் உண்ணும் ஒவ்வொரு அரிசியிலும் ,
நம் பெயர் இருக்கும் , என்பார் பெரியோர்.
ஆகவே விதி வலியது.1
ஆமாம்!!!-அது எந்த அளவுக்கு வலியது என்றால் ,
அதைப் படைத்த ஆண்டவனாலேயே,
மாற்றமுடியாத அளவுக்கு வலியது.

ஆகவே நாம் , நம் மனதிற்கு ஆறுதலாகவோ,
நம்மை ஒரு கட்டுக்குள் வழி நடத்தவோதான்,
கடவுளைக் கும்பிடுகிறோம்.!!!
ஒருவருக்கு கத்தியால் காயம் ஏற்படும் ,
என்று விதி இருந்தால் ,
அந்தக் காயம் எதிராளியாலோ,
அல்லது நம் நோய் தீர்ப்பதற்காக
வைத்தியராலோ ,ஏற்பட்டே தீரும்.!!

உடலுக்கோ ,மனதிற்கோ, நோய் வந்தால்
வைத்தியர் உண்டு, உயிர் நோய்வாய்ப் படுமா?
அதற்க்கு வைத்தியம் உண்டா,
வைத்தியர் உண்டா?
உடலைவிட்டு உயிர் தனியாக இயங்கமுடியுமா?
உயிர் போனால், ஆவி போய் விட்டது என்கிறார்கள்,
அப்படியானால் உயிர் தான் ஆவியா?
ஒருவர் உடம்பில் ,ஆவி புகுந்து இருக்கிறது என்கிறார்கள்,
உயிர்தான் ஆவி என்றால், ஒரு உடம்பிற்குள்,
இரு ஆவி எப்படி இருக்கமுடியும்?
இதற்கு முன்னால் அவனுடைய மொழியைத் தவிர,
வேற்றுமொழியே, தெரியாத ஒருவன், ஆவிபுகுந்தால் மட்டும்
வேறு, வேறு,.. மொழிகள் பேசுவது எப்படி?
அப்படியென்றால்.. ஆவிகள் மனிதனுடைய மனதை
ஆக்ரமிக்கிறதா? அப்படியென்றால் ,வேறு ஆவிகளோ தேவதைகளோ,நம்மை ஆக்ரமிக்க முடியுமென்றால் ,
நம்மாலும் அவைகளை ஆக்ரமிக்க முடிய வேண்டும்
அல்லவா?..முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள்
அதற்கு பெயரும் இட்டிருக்கிறார்கள் அதுதான்,

மனோவசியம்:-

ஆம் மனதை வசியம் செய்வதுதான் மனோவசியம்,
மனோவசியம் முறையாக செய்து ,
மிருகங்களை, மனிதர்களை, ஏன் தேவதைகளைக்கூட ,
வசியம் செய்ய முடியும், என்று நம் முன்னோர்கள்
நிரூபித்திருக்கிறார்கள்!!
ஆனால் மனிதன், எல்லாவற்றையும் வசியம் செய்துவிட்டு,
தன்மனதை வசியம் செய்யும் முயற்சியில்,
தோற்றுப் போகிறான்.!!

உயிர் என்பது ஆத்மாவா?இரத்தமா?
இருதயமா?மூளையா?
அல்லது நாடித்துடிப்பா?
ஒவ்வொரு யந்திரத்துக்கும் உள்ளே
மின்சாரம் ஒரு சக்தியாகி அதை இயங்கவைப்பதுபோல்
உடலுக்கு சக்தி ரத்தமென்றால் ரத்த தானம்
செய்யும்போது நம் உயிரை இன்னொரு
உடலுக்குள் செலுத்துகிறோமா?
ஒரு உடலுக்கு இரு உயிர்களா?

உயிருக்கு உருவம் கிடையாது
அந்த உயிரின்றி எதுவும் நடவாது
என்ற கண்னதாசனின் வரிகளைப் படித்தால்
உயிருக்கும் ஆத்மாவுக்கும் உருவம் கிடையாது
என்ரு பொருள் வருகிறது
அப்படியானால் உயிர் பிரிந்த பிறகும் அந்த
ஆத்மாவோடு மனம் இருக்கிறதா?
அந்த மனம் தான் எண்ணங்களைத்தேக்கி
வைத்துக்கொண்டு ஆன்மீகவாதிகள்
சொல்வது போல் ஏழு ஜென்மங்களுக்கும்
தொடர்பு விட்டுப்போகாத பாலமாய் இருக்கிறதா?
அப்படியானால் தூக்கம் என்பது தற்காலிக மரணம்,
மரணம் என்பது நிரந்தரமான ஓய்வு என்றும்
கூறுகிறார்கள்,

இந்த ஓய்வு என்பது உடலுக்கா? மனதிற்கா?
அல்லது உயிருக்கா?
ஆராய்ச்சிகள் கூறுகின்றன
மனிதன் கூடுவிட்டு கூடு பாயும் முறையில்
தன்னிலிருந்து தானே பிரிந்து மீண்டும்
தன்னை வந்தடைய முடியும் என்று
அப்போது உயிர் நம்மை விட்டுப் பிரிந்துசென்று
அனுபவங்களைச் சேகரித்துக்கொண்டு
மீண்டும் நம்மை வந்தடைகிறது என்பதாகும்
நாம் காணும் கனவுகளே நம் ஆழ் மனதின்
விளைவுகளே என்று கூறுவர்

ஆகவே கனவு காணும் மனிதர்கள் தன்னிலிருந்து
பிரிந்து தானே தன்னை வந்தடையும் சக்தியில்
ஒரு குறிப்பிட்ட அளவினைக் கொண்டிருக்கிறார்கள்
என்பது தானே உண்மை
இந்தக் குறிப்பிட்ட அளவை விஸ்தரிக்க முடிந்தால்
அது மனித இனத்தை மெய்ஞானத்திலும்
விஞ்ஞானத்திலும் முன்னேற்றமடையச் செய்யும்