எங்காவது பார்த்ததுண்டா இப்படி ஒரு பாலத்தை?.....

ரஹீம்  கஸாலி
ஜனவரி 10, 2012 11:13 முப


வழக்கமாக ஆற்றின்மேல் பாலத்தை பார்த்திருப்பீர்கள். பாலத்தின் மேல் ஆறு பார்த்திருக்கிறீர்களா? அல்லது கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா?
பாலத்தின் மேல் தண்ணீர் ஒடும் உல்டாவான பாலத்தைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

பார்க்க ஒரு அணைக்கட்டு போல காட்சியளிக்கும் இந்தப்பாலத்தின் மேல்புறம் தண்ணீர் ஓடும். அப்படியானால் கீழே?.... விவசாயத்திற்காக இந்த பாலத்தின் மேல் ஓடும்  நீரை இரு மதகுகளின்(shutter) வழியே திறக்கப்பட்டு அது கீழே ஊற்றும். அதுவும் ஒரு பக்கம் மட்டுமே... மற்ற பக்கங்களில் ஆடு, மாடு மேய்ந்து கொண்டிருக்கும். அப்படி ஒரு வித்தியாசமான பாலம் இது.


 மதகு வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டு ஊற்றுகிறது
விவசாயத்திற்காக, திறந்து விடப்படும் நீர் ஒரு குறிப்பிட்ட உயரத்திலிருந்து ஒரு நீர்வீழ்ச்சியைப்போல ஊற்றும். அதில் தலையை நனைத்தால் மினி குற்றாலத்தில் குளிப்பதுபோல இருக்கும். இதை படித்ததும் அப்படிப்பட்ட பாலம் எங்கிருக்கிறதென்று அறிய ஆவலாக இருக்கிறதா? அந்த பாலத்தை பார்க்க ஆசையாக இருக்கிறதா?

 இது பாலத்தின் கீழ் புறம்
அப்படியானல் நீங்கள் எங்கள் ஊரான அரசர்குளத்திற்குத்தான் வரவேண்டும். ஆம்...அப்படிப்பட்ட பாலம் எங்கள் ஊரில் தான் இருக்கிறது. ஏறக்குறைய எட்டு மாதம் இப்படி தண்ணிர் ஓடும். தினமும் எங்கள் குளியல் இங்குதான். ஆர்ப்பரிப்புடன் ஓடும் இந்த தண்ணீரை எதிர்த்து நீந்துவதே ஒரு உடற்பயிற்சிதான். இங்கு குளித்தால் நேரம் போவதே தெரியாது. கரை ஏறவும் மனம் வராது.

பாசனத்திற்காக மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர் கல்லணையை வந்தடைந்து அங்கிருந்து பல கிளை ஆறுகளாக பிரியும். அப்படி பிரியும்
எத்தனையோ கிளை ஆறுகளில் எங்கள் ஊர் ஆறும் ஒன்று....எங்கள் ஊர் வழியாக செல்லும் இந்த ஆறு, பக்கத்தில் 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கடலில் கலக்கிறது. இத்தனை அருமையான இந்த பாலம் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.