புது வரவு

Avanthi
டிசம்பர் 30, 2011 02:27 பிப

எனக்கு நேற்றுத்தான் திருமணம் முடிந்திருந்தது. அம்மா பார்த்த பெண்தான். அடக்கமாகவும் மிக மிக அழகாகவும் இருந்தாள். புதுப் பெண் என்றில்லாமல் என்னுடன் சகஜமாகக்கூட பழகினாள்.
திருமணக் களியாட்டங்களின் களைப்பு மிகுதியில் காலையில் நன்கு அசந்து தூங்கிவிட்டேன். புது மனைவியின் கைமணம் சமையலறையை கமகமக்கப் பண்ணிக் கொண்டிருந்தது.
கண்ணாடியில் என்னை பார்த்த போது, நானும் பிறவிப் பயனை எய்துவிட்ட சந்தோசம் முகத்தில் தெரிந்தது. அந்த நேரம் பார்த்து ஒரு புதுப் பெண்ணின் வரவு எனது காதோரமாக கண்ணாடியில் தெரிந்தது.
எனக்கு முகத்தில் பயப் பிராந்தியில் வியர்வைத் துளிகள் தோன்றத் தொடங்கி விட்டது. மனைவி இந்த விடயத்தைப் பற்றி அறிந்தால் எப்படி எடுத்துக் கொள்வாளோ? சீ இந்தப் பாழாய்ப் போனவள் நேற்று வந்து தொலைத்திருக்கலாம். ஏதாவது ஒரு முடிவு கட்டியிருப்பேன். இப்படி எனது தலையை பிய்த்துக் கொண்டிருந்த வேளை. வந்தாளே என் அருமை மனைவி.
ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள் என்ற கேள்வியுடன்.
பயத்தில் வெலவெலத்த என்னை ஒரு மாதிரியாக பார்த்ததுடன். என்னப்பா காதோரம் ஒரு வெள்ளை மயிர் என்று இலேசாக அதை பிடுங்கியும் விட்டாள். போன உயிர் திரும்பியது.