வாழ்வியல் கதைகள் 20/5/2011

aatchi
May 20, 2011 10:04 முப
(1)   ஒரு சாது முப்பது வருடங்களாக இமாலயத்தில் தியானத்தில் இருந்தார்.முப்பது வருடங்களில் தன் ஆன்மாவின் அகங்காரம் முற்றிலும் அழிந்து அமைதியாகிவிட்டதாக,முக்தியடைந்து விட்டதாகத் தோன்றியது.அவரை சந்திக்க வந்த சீடர்களில் ஒருவன் மலை அடிவாரத்தில் திருவிழா நடைபெறுவதால் பங்குபெற அழைத்தான்.
அழைப்பை ஏற்று திருவிழாவிற்கு சென்ற சாதுவின் காலை கூட்ட      நெரிசலில் மனிதன் ஒருவன் மிதித்துவிட்டான்.மிதித்த வேகத்திற்கு அந்த சாதுவிற்கு சுல்லென்று கோபம்,வலி தலைக்கேறியது.சாது தன் நிலை கண்டு வியப்படைந்தார்.முப்பது வருட இமாலய வாழ்நாளில் காண முடியாதது,இன்று ஒரு மனிதன் கால் பட்டதால்  நிதர்சனம் ஆயிற்று.
(2)
சிறப்பாக ஆட்சி செய்துகொண்டிருந்த அரசனுக்கு வெகுநாட்களாக தமது எல்லையில் வாழும் சந்நியாசி ஒருவரை தனது அரண்மனைக்கு அழைத்து விருந்து உபசரிக்க ஆசைப்பட்டார்.சந்நியாசி ஒருவரை தரிசித்து,வணங்கிதாங்கள் இங்கு வெகுநாட்களாக வாழ்கிறீர்கள்,தியானம்,தவம் செய்கிறீர்கள் என்பதை அறிவேன்.தாங்கள் எனது அரண்மனையில்  தங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்என்றார்.அதற்கு சந்நியாசி மறுப்பேதும் இல்லாமல் சரி வா போகலாம்,உன் விருப்பம்படியே தங்குகிறேன் என உடனே சம்மதம் தெரிவித்தார்.

அரசனுக்கு ஆச்சர்யம்.இவர் என்ன சந்நியாசி?கேட்டவுடன் சம்மதித்துவிட்டாரே!இவர் உண்மையான சந்நியாசிதானா என்ற சந்தேகம் எழுந்தது.பற்றற்றவனுக்கு அரண்மனை தேவயில்லையென சந்நியாசி வாதிடவில்லையே என்ற குழப்பத்துடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.
அரண்மனையில் சந்நியாசிக்கு அரசனுக்கு நிகரான மரியாதை,ஆடை ,அலங்காரம்,உணவு ,உபச்சாரம் வழங்கப்பட்டது.சந்நியாசி அனைத்தையும் எற்றுக் கொண்டார்.வயிர் நிரம்ப உண்டார்,அரச ஆடைகள்,அணிகலன்களை அணிந்துகொண்டார்,ஆடம்பர படுக்கையில் உறங்கினார்.பல நாட்கள் சென்றது.அரசனுக்கு சந்தேகம் அதிகரித்தது.இத்தனை நாள் அரண்மனையிலே இருக்கிறாரே,மீண்டும் தனது பழைய நிலைக்கு,இடத்திற்கு செல்ல சந்நியாசிக்கு விருப்பமில்லையா?அரண்மனை வாசியாகிவிட்டாரே?என தன் சந்தேகத்தை சந்நியாசியிடமே கேட்டுவிட முடிவு செய்தான் அரசன்.

சந்நியாசியிடம் சென்றுஐயா எனக்கு ஒரு சந்தேகம்என்றான் அரசன்.என்னை அழைத்த முதல் நாளே உனக்கு சந்தேகம்  வந்துவிட்டது. ஆயினும் கேள்  என்றார் சந்நியாசி.நீங்கள் எப்படிப்பட்ட சந்நியாசி? என்பதே என் சந்தேகம் என்றான் அரசன்.பதில் வேண்டுமாயின் என்னுடன் வா என்று அரசனை அழைத்துச் சென்றார் சந்நியாசி.அரண்மனையிலிருந்து வெகுதூரம் சென்றும் சந்நியாசி பதில் சொல்லவில்லை.ஊர் எல்லை வந்தவுடன் எங்கு அழைத்துச் செல்கிறீகள் என்றான் அரசன்.உன் கேள்விக்கு பதில் சொல்லத்தான்,மேலும் என்னுடன் நட என்று வெகு தூரம் அழைத்துச் சென்றுவிட்டார் சந்நியாசி.பொழுதும் போய்விட்டது.

அரசன் மீண்டும் சந்நியாசியை நிறுத்தி பொழுதே போய்விட்டது,எங்கே போகிறீர்கள்,என் கேள்விக்கு பதிலும் சொல்லவில்லயே என்றான்.இனி நான் திரும்ப போவதில்லை என்பதே என் பதில்,தொடர்ந்து செல்லப் போகிறேன் விரும்பினால் என்னுடன் வா, என்றார் சந்நியாசி.அரசன் அதிர்ச்சியடைந்து,என்னால் வர முடியாது,என் நாடு,மக்கள்,என் குடும்பம்,அரசாட்சி உள்ளது.அனைத்தையும் விட்டு என்னால் எப்படி வர இயலும் என்றார்.
உன் கேள்விக்கு பதில் கண்டுகொள்ள முடிந்தால் உணர்ந்துகொள்,நான் தொடர்ந்து செல்லப் போகிறேன்,எனக்கு என்னுடையது என்று எதுவும் இல்லை,எனக்கு சொந்தமானது எதுவும் இல்லை.இத்தனை நாள் உன் அரண்மனையில் நான் இருந்தேனே தவிர எனக்குள் உன் அரண்மனை  இல்லை என்றார் சந்நியாசி.

சந்நியாசியின் காலில் விழுந்து, என் பிரேமை விலகியது,என் வாழ்நாள் முழுவதும் பச்சாதாபம் ஏற்படும்,எனவே என்னுடன் வந்து அருள்புரியுங்கள் என்றான் அரசன்.மீண்டும் வர தயார்,ஆனால் மீண்டும் உனக்கு சந்தேகம் தோன்றும்.எனக்கு ஒரு பேதமும் இல்லை.உன்னிடம் கருணை கொண்ட அனுதாபம் என்னை நேராகச் செல்லப் பணிக்கிறது என்று பதிலளித்து சந்நியாசி தன் வழியில் சென்றார்.
*********************************************************************************************************************