காதலிச்சவன் காத்திருக்கிறான் சிறைக்குள்ளே

Yathavan
May 15, 2011 01:47 பிப

புளியமரத்தடி பிள்ளையார் கோவில்
பொங்கல் பானையில் கட்டிய பட்டு
சின்னஞ்சிறுசுகளின் எட்டுக்கோடு
சிரித்துக்கொண்டே நீ சுடும் வடைகள்

தீர்த்த குளத்தின் தாமரை மலர்கள்
தீண்டாமல் தீண்டும் இலைகளில் நீர்கள்
பார்த்து விட்டு போகும் உன்னுடைய அம்மா
பார்த்துக்கொண்டே இருக்கும் என்னுடைய கண்கள்

படையல் முடிந்ததும் படிக்கும் தேவாரம்
உன்னை நினைத்தே பூசும் வீபூதி
சாம்பிராணி புகையின் நறுமண புகை
வென்றுவிடும் உன் கூந்தலின் வாசனை

காதலை சொல்ல காத்திருந்த தருணம்
கண்களால் பேச பாத்திருந்த புருவம்
காலம் கூடாமல் வந்த இடப்பெயர்வு
வாழ்வில் சேராமல் போன நம் காதல்

உன் இடுப்பிலே இப்பொழுது சிறுபிள்ளை
கைதியாய் இருக்கின்றேன் நான் சிறைக்குள்ளே
கட்டியவன் செத்தான் போரினிலே
காதலிச்சவன் காத்திருக்கிறான் சிறைக்குள்ளே