"நசுங்கல்” சிறுகதை

தமிழ்த்தேனீ
October 12, 2010 07:03 பிப
 வல்லமை இதழில் வெளியாகி உள்ள “நசுங்கல்” என்னும் சிறுகதை படிக்க சொடுக்குங்கள்,
தன்னுடைய மெக்கானிகல் ஷெட்டில் வந்திருந்த ஒரு காரை பழுது பார்த்துவிட்டு, இப்போ சரியாயிடிச்சி எடுத்து ஓட்டிப்பாருங்க சார் என்று அந்த காரின் உரிமையாளரிடம் கொடுத்துவிட்டுத் திரும்பினான் சிவா, அங்கே ஒரு டொயோட்டா கொரோலா காரை ஓட்டிவந்து நிறுத்திவிட்டு ஏம்பா இந்தக் காரை எவனோ ஒரு மோட்டார்பைக்லே போனவன் இடிச்சிட்டுப் போய்ட்டான், தப்பு தப்பா வண்டி ஓட்றாங்க, ,பயந்துகிட்டே எப்பிடியோ கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா ஒட்டிகிட்டு வந்தேன், முன்னாலே பம்பர்கிட்ட நசுங்கி இருக்கு பாரு டயர்லே உராயுது, இதைச் சரி செய்ய முடியுமா என்றார்


சிவா காரைப் பார்த்தான் ,செஞ்சு தரேன் சார் ,உக்காருங்க என்றான், காரின் பின்பக்கம் வந்தவன் பின்பக்க கண்ணாடியில் டாக்டர் என்று எழுதியிருப்பதைக் கவனித்து,மீண்டும் அவரை உற்று நோக்கினான்,அவனுக்கு அவர் யாரென்று நினைவு வந்தது, அவரை உட்காரச் சொல்லிவிட்டு, காரின் முன்பக்கம் வந்து நசுங்கிய பகுதியைப் பார்வையிட்டு சார் இந்த நசுக்கலை நான் சரி பண்ணித்தரேன்,ஆனா மறுபடியும் பெயிண்ட் அடிக்கணும்,அப்பிடி இந்தப் பகுதிக்கு மட்டும் பெயிண்ட் அடிச்சா அது தனியா தெரியும், காரோட வர்ணத்துக்கு ஒத்துப்போகாது, பரவாயில்லையா? அப்பிடி இல்லேன்னா டிங்கரின் வேலையை ,முடிச்சிட்டு மொத்தமா மறுபடியும் பெயிண்ட் அடிக்கணும் என்றான்,

இதோ பாருப்பா நீ இந்த நசுங்கலை மட்டும் எடுத்துக்குடு, ஓரளவு டயர்லே இடிபடாமெ இருந்தா சரி, மத்தபடி நான் என்னோட சர்வீஸ் செண்டர்லே விட்டு சரிபண்ணிக்கிறேன், ரொம்ப வெலை உயர்ந்த காருப்பா, டொயோட்டா கரோலா, வெலை எவ்ளோ தெரியுமா கிட்டத்தட்ட பத்து லக்ஷம் என்றார்

சரி சார் எத்தனை லக்ஷமா இருந்தா என்னா செய்யவேண்டியதை செஞ்சுதான் ஆகணும் என்று சொல்லிக்கொண்டே நசுங்கிய பகுதியின் பின்னால் ஒரு மரக்கட்டையை வைத்து முன் பக்கமாக ஒரு சுத்தியலால் டொம்மென்று தட்டினான்,

டாக்டர் நாற்காலியிலிருந்து எழுந்து ஓடிவந்து என்னாப்பா இது இப்பிடி அடிக்கறே, கொஞ்சம் மெதுவா அடி ,நான் யாரையும் இந்தக் காரைத் தொடவே விடமாட்டேன், என்னோட வாழ்க்கையிலே நான் அதிகமா நேசிக்கறது இந்தக் காரைத்தான், மெதுவா மெதுவா என்றார்,

சிவா மனதில் அந்தப் பழைய காட்சி விரிந்தது,ஆமாம் இதே டாக்டர் வேலைசெய்யும் மருத்துவ மனையில் அவன் உயிருக்குயிராய் நேசித்த மனைவி விமலா ஒரு விபத்தில் மாட்டிகொண்டு குற்றுயிரும் குலைஉயிருமாகக் கொண்டு போனபோது நடந்த அந்தக் காட்சி விரிந்தது

ரத்தம் வீணாகிக்கொண்டிருக்கிறது, இவன் தவித்துக்கொண்டிருக்கிறான், யாரைக் கேட்டாலும் கொஞ்சம் இருப்பா இங்கே டாக்டர்,நர்ஸ் போதிய அளவு இல்லே, கொஞ்சம் வெயிட்பண்ணு,இதோ டாக்டர் வந்திருவாரு என்றபடி நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தார்கள்,டாகடர் வந்தார் ,அவரிடம் விவரங்கள் சொல்லப்பட்டதுஅவசர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யச்சொன்னார் டாக்டர்,, அவன் மனைவி விமலா நினைவில்லாமல் இருந்தாலும் வலியால் முனகிக்கொண்டிருந்தாள், டாக்டர் அவளது கையை வேகமாக இழுத்தார்,அவள் வலியால் அலறினாள்,

சிவா பதறிப் போய் டாக்டர் கொஞ்சம் மெதுவா பாத்து கவனமாசெய்யுங்க ,அவளுக்கு வலிக்கிது, அதுமட்டுமில்லை,எலும்பு உடைஞ்சிருந்தா இன்னும் அதிகமாயிடும் என்றான் பதறிப்போய், டாக்டர் இதோ பாருப்பா எங்களுக்கு தெரியும் என்ன செய்யணும் என்ன செய்யக் கூடாதுன்னு ,நீ அங்கே போயி ஒரு ஓரமா உக்காரு என்று விரட்டினார், வேறு வழியில்லாமல் தூரமாகப் போய் உட்கார்ந்து கொண்டு தெய்வங்களை வேண்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான் தன் இயலாமையை நினைத்து,தன் மனதில் ஓடிய அந்தக் காட்சியின் வலியை மனதில் வாங்கிக்கொண்டே டாக்டரின் காரை சரி செய்துகொண்டிருந்தான் சிவா, சுத்தியலால் வளைந்த இடத்தை ஒரு அடி அடித்தான், டாக்டர் பதறிக்கொண்டு ஓடிவந்து ஏன்பா இந்தக் காரோட விலை என்னான்னு தெரியுமா,இப்பிடிப் போட்டு அடிக்கிறியே மெதுவா பாத்து நிதானமா செய்யிப்பா என்றார் அதிகாரமான குரலில்

டாக்டர் போன மாசம் விபத்து நடந்த என் மனைவிக்கு ஆப்ரேஷன் செஞ்சீங்களே நியாபகம் இருக்கா, நோயாளிகள் குடுத்த பணத்திலே வாங்கின காரையே இவ்வளவு மதிக்கிறீங்களே, என் பொண்டாட்டி உயிரு இதைவிடக் கேவலமா? நான் பதறினப்போ கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம ஒரு கணவனோட பதட்டத்தை மதிக்காம எப்பிடி வெரட்டினீங்க

என்கிட்ட கொண்டு வந்து காரை விட்டுட்டீங்க இல்லே,எனக்குத் தெரியும் எப்பிடி சரி செய்யணுன்னுட்டு, போயி அங்கே ஒரு ஓரமா உக்காருங்க என்றான், டாக்டரின் மனதில் அந்தப் பழைய காட்சி விரிந்தது,எவ்வளவு நேரம் போனது என்றே தெரியவில்லை,

டாக்டர் சார் …உங்க காரை சரி செஞ்சுட்டேன் என்ற சிவாவின் குரல் கேட்டு மோனம் கலைந்தார் டாக்டர் , கார் நசுங்கிய இடம் இப்போது சரியாக இருந்தது,

என்னை மன்னிச்சுடுப்பா ..இனிமே நான் யாரையும் கோவமா பேசமாட்டேன் என்றார் டாக்டர்,

நசுங்கி இருந்த அவர் மனதையும் சரிசெய்துவிட்டான் அந்த மெக்கானிக்

அன்புடன்

தமிழ்த்தேனீ


அன்புடன்

தமிழ்த்தேனீ