நவராத்திரி

தமிழ்த்தேனீ
October 08, 2010 09:56 பிப
நவராத்திரி “

         


நவராத்திரி என்றதும் என் நினைவுகள் என்னுடைய சிறுவயதுக்காலத்துக்கு பின்னோக்கி ஓடிவிட்டன, அப்போது நாங்கள் சென்னையில் செண்ட்ரல் ரயில் நிலயம், ஒற்றைவாடை நாடக அரங்கம் போன்றவைகள் இருக்கும் வால்டாக்ஸ் சாலையும் உயர் நீதிமன்றம், கலங்கரை விளக்கம், போன்றவை இருக்கும் சைனாபஜார் என்று சொல்லப்படும் சுபாஷ் சந்திர போஸ் சாலையும் சந்திக்குமிடத்தில் 18 வெங்கட்ராயர் தெருவு, பீ ஆர் ஸ்கொயர், என்னும் பகுதியில் இருந்தோம் அந்தப் பகுதியில் நான் இருக்கும்போது எனக்கு வயது பதினொன்று

நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகள் வந்தால் எங்களுக்கு ஆனந்தம் கரைபுரண்டோடும், பள்ளியில் விடுமுறைவிடுவார்கள், புது சொக்கா புது நிஜார், புது பாவாடை, புதுப் புடவை, பட்டாசுகள் இனிப்புகள் என்று ஆனந்தமாக பொழுதுகள் கழியும், ஊரே திமிலோகப்படும்,

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருவிழாபோன்று களைகட்டும், எங்கள் வீட்டில் என்னுடைய தகப்பனார் ஒன்பது படிகள் வைப்பார்,அந்த ஒன்பது படிகள் முழுவதும் விதம் விதமான பொம்மைகள் அலங்கரிக்கும்,

பரணிலிருந்து பெரிய பெரிய பெட்டிகளை இறக்கி அவைகளில் துணிகளிலும், காகித்த்திலும் பத்திரமாக சுற்றி வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகளை எடுத்து கீழே அடுக்கி,மிக ஜாக்கிறதையாக அவைகளைப் பிரித்து, அந்தப் பொம்மைகளை அவற்றின் உயரம்,பருமன்,போன்ற வித்யாசங்களைக் கவனித்து, அந்தந்த பொம்மைகளை அந்தந்த தொடர்பான பொம்மைகளோடு அடுக்கி வைத்து ,அவைகளை எந்தப் படியில் வைக்கவேண்டும் என்று தீர்மானித்து, அதற்கேற்றார்ப்போல் அவைகளைப் படியில் வைத்து நேர்த்தியாக அடுக்கி வைப்பார் எங்கள் தந்தை,கூடவே என்னுடைய தாயாரும்,என்னுடைய சகோதரிகளும் உதவி புரிவார்கள்,அது ஒரு பொற்காலம்,

ஆமாம் உண்மையிலேயே அது ஒரு பொற்காலம்தான்,

மாலையானால் போதும் , சின்னஞ்சிறார்கள்,சிட்டுப் போன்ற குழந்தைகள் ராமனாகவும்,கிருஷ்ணனாகவும், சரஸ்வதியாகவும் ,மஹாலக்ஷ்மியாகவும், ஆண்டாளாகவும்,காமாக்ஷியாகவும் ,மீனாக்ஷியாகவும் வேடமிட்டு அவர்களின் வயதுக்கும் தோற்றத்துக்கும் சற்றும் பொருந்தாவிடினும் கூட, அவர்கள் கள்ளமில்லாத குழந்தை மனத்தினராய் தளுக்கி , மினுக்கி புன்னகையுடன் வலம் வருவதைப் பார்க்க முடியும், ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டமாய் வாழ்ந்த அந்நாளில் குழந்தைகள் கள்ளங்கபடமில்லாமல் குழந்தைகளாகவே இருந்தார்கள், பெண்மணிகளும் புதுப்புடவை சரசரக்க வந்து கூடத்தில் விரிக்கப்பட்டிருக்கும் விரிப்பில் அமர்ந்து, இயல்பான புன்னகையுடன் இதமான குரலில் பலவகையான பாட்டுக்களை தங்களுடைய இனிமயான குரலில் பாடுவதும், குழந்தைகளும் அவர்களுடன் சேர்ந்து கீதமிசைப்பதுமாக ஒவ்வொரு பண்டிகைகளும் களைகட்டும்,

ஒவ்வொரு வீட்டிலும் அளிக்கும் தின்பண்டங்கள், சுண்டல் போன்றவற்றை வாங்கவே கூட்டம் கூடும் சிறுவர்கள் கும்மாளமாக மகிழ்ழ்சியுடன் உலா வருவதைப் பார்க்கும் போது மனம் நிறையும்,

பெரியவர்களும் தங்களின் இயல்பான ஆர்ப்பாட்டம் ,கோவம், எல்லாவற்ரையும் மறந்து புது வேட்டி புது சொக்காய் சகிதமாக வீட்டில் உள்ள பெண்டிருக்கும் ,குழந்தைகளுக்கும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தும், மகிழ்ந்த அந்தக் காலங்கள் பொன்னானவைஅப்படிப்பட்ட பொன்னான தருணங்கள் நாட்டிலே சுபிக்ஷம் நிறைந்த அந்தப் பொன்னான காலம் , குழந்தைகளின் கபடமற்ற பொன்னான காலம்

அவையெல்லாம் திரும்பி வருமா நம் நாட்டில்?

பஞ்ச பூதங்களின்மகிமை உணர்ந்து அவைகளை இயற்கையை அரவணைத்துக்கொண்டு இதமாக பதமாக இனிமையாக வாழ்ந்த அந்தப் பொற்காலங்கள் திரும்பி வருமா? என்னும் எண்ணம் தோன்றி ஒரு பெருமூச்சு விட வைக்கிறது என்ன செய்ய?

மீண்டும் நாம் இழந்த அந்தப் ;பொற்காலத்தை மீட்டவேண்டும்,அதற்காக நம் பாரம்பரியங்களின், ,மரபுகளின் வளத்தை இனிமையை மீண்டும் தெளிவான மனநிலையுடன் மீண்டும் அனுபவிக்க மனம் துடிக்கிறது

மாறுமா மீண்டும் பொற்காலம் மலருமா என்னும் ஏக்கத்துடன் நான்

அன்புடன்

தமிழ்த்தேனீ