மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ

karthik
May 13, 2010 11:29 முப
மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
பதிவு: The Rebel

நிகழ்காலத்தில் சிந்தனை என்பதே கிடையாது. இதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? இப்போது, இந்தக் கணத்தில் சிந்தனை எப்படி இருக்க முடியும்? நிகழ்கணத்தில் அது இருக்காது. எதிர் காலத்திலோ, இறந்த காலத்திலோதான் அது இருக்க முடியும்.

இறந்த காலம் பற்றி நினைத்தவுடனே, கற்பனை வந்து விடுகிறது, எதிர்காலம் பற்றி நினைத்தவுடனே, தர்க்கம் தோன்றிவிடுகிறது. நிகழ்காலம் பற்றி நீங்கள் எப்படி நினைக்க முடியும்?

நிகழ்காலத்தில் வாழலாம். அவ்வளவுதான்.

இந்தக் கனப்பொழுது மிக நுட்பமானது. மிகச் சிறியது; அணுவைப் போல வேறு எதுவும் அதற்குள் நுழைய இடமே இல்லை. சிந்தனைக்கு இடம் வேண்டும், வசதியான அறை வேண்டும், நிகழ் கணத்திற்குள் இடமே கிடையாது, வெறும் ‘இருத்தல்’ மட்டுமே அதில் உண்டு.

ஆகவே, நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்போது, சிந்தனை நின்று விடுகிறது. சிந்தனை அற்றது நிகழ்காலம்தான். சமய வழிப்பட்ட மனம் எதிர்காலம் பற்றிக் கவலைப்படாது. முன்பு என்ன நடந்தது என்பது பற்றியும் நினைத்துப் பார்க்காது. கணத்திற்குக் கணம் வாழ்வது சமய வழிப்பட்ட மனம்.

ஒரு கணம் மறைந்ததும், மறு கணம் வந்துவிடுகிறது. ஒவ்வொரு கணமாக வாழ்ந்து செல்வது அது. வருகிற ஒவ்வொரு கணத்திற்குள் வாழ்கிறவர் சமயவாதி. அவர் ஆறு போன்றவர்.

சமயவாதி, சமய மனிதர், சமய மனம் எப்போதும் இடையறாது இயங்கிக் கொண்டே இருக்கும்; நகர்ந்து கொண்டே இருக்கும் என்பதை மிகமிக ஆழமாக மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், அவரது இயக்கத்திற்கு ஒரு நோக்கம் இருக்காது. எதை நோக்கியும் அது இயங்காது. சும்மா இயங்கும் – ஏன்னென்றால் இயக்கம்தான் அதன் இயல்பு; எதார்த்தம்.

இயக்கமே எதார்த்தத்தின் இயல்பு. இயக்கம் எதார்த்தமாய் இயங்குகிறது. நதி நீரில் மிதப்பவரைப் போல, அவர் கால நதியின் ஓட்டத்தில் மிதந்து செல்பவர். ஒவ்வொரு கணமும் அவர் உயிர் வாழ்பவர்; ஒவ்வொரு கணமும் இயங்கிக் கொண்டிருப்பவர்.

அவர் ஒன்றுமே செய்வதில்லை. அவர் அந்தக் கணத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பவர். அந்த வினாடி நகர்ந்ததும், அடுத்த வினாடி வந்து விடுகிறது. அதிலும் அவர் வாழ்கிறார்.

- ஓஷோ

நன்றி:நதியலை