தத்துவம்

karthik
May 13, 2010 10:29 முப
யாருக்கு தேவை - அயன் ராண்ட்
பதிவு: The Rebel

ராணுவ பயிற்சிபள்ளியில் பட்டம்பெறும் மாணவர்களுக்கு அயன்ராண்ட் ஆற்றிய உரை - மார்ச் 6,1974

நான் ஒரு கதாசிரியர் என்பதால் ஒரு கதையிலிருந்தே என்னுரையை தொடங்குகிறேன்.

நீங்கள் ஒரு விண்கலவீரர் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் விண்கல ஓடம் கட்டுப்பாட்டை இழந்து தெரியாத ஏதோ ஒரு கோளில் விழுந்து நொறுங்குகிறது. சுயநினைவு திரும்பும் போது உங்களுக்கு அவ்வளவு கடுமையான காயமெதுவும் படவில்லையென அறிகிறீர்கள். அப்போது உங்கள் மனதில் எழும் முதல் மூன்று கேள்விகள் இவையாக இருக்கும்.

1. நான் எங்கே இருக்கிறேன்?
2. இதை நான் எப்படி கண்டுபிடிப்பது?
3. நான் என்ன செய்ய வேண்டும்?

வெளியே, அறியப்படாத பயிர்கள் செழித்து வளர்ந்திருப்பதை பார்க்கிறீர்கள். சுவாசிக்க காற்றும் உள்ளது. சூரியஒளி உங்கள் ஞாபகத்தில் உள்ளதைவிட மங்கலாகவும் குளிர்ச்சியாகவும் இருப்பது போலுள்ளது. வானத்தை பார்க்க எத்தனிக்கிறீர்கள். ஆனால் பார்க்காமல் திரும்பிக்கொள்கிறீர்கள்.

சட்டென்று தோன்றிய ஒர் எண்ணத்தால் தாக்கப்படுகிறீர்கள் - வானத்தை பார்க்காமல் இருந்தால் பூமியை விட்டு வெகு தூரத்தில் இருக்கிறீர்கள் என்றோ, திரும்பிச்செல்ல இயலாதென்றோ அறியாமல் இருந்துவிடலாம். இது தெரியாமல் இருக்கும் வரை உங்கள் இஷ்டம் போல எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்துக்கொள்ளலாம். பனிமூட்டமான, இனிமையான அதே சமயம் ஒரு குற்றவுணர்வும் கொண்டதுமான ஒரு வகையான நம்பிக்கையை அனுபவிக்கிறீர்கள்.

பார்வையை உங்களிடம் உள்ள பொருட்களின் பக்கம் திருப்புகிறீர்கள். அவையெல்லாம் சேதப்பட்டிருக்கலாம். எவ்வளவு தூரம் சேதப்பட்டிருக்கிறது என்று நீங்கள் அறிந்திருக்கவில்லை. சட்டென்று தோன்றிய பயத்தால் பார்ப்பதை நிறுத்திவிடுகிறீர்கள். இப்பொருட்களை நம்பி எப்படி பயன்படுத்துவது? இக்கருவிகள் கோளாராகாது என்று எப்படி நிச்சயப்படுத்திக்கொள்வது? இக்கருவிகள் வேற்று உலகத்தில் சரியாக வேலை செய்யுமா? உடனே பொருட்களிலிருந்தும் பார்வையை அகற்றி விடுகிறீர்கள்.

ஏன் எதைச்செய்யவும் இப்போது ஆர்வமில்லை என்று ஆச்சிரியப்படுகிறீர்கள். எதாவது எப்படியாவது தானாக நிகழ்வதற்கு காத்திருப்பதே பாதுகாப்பானது எனத்தோன்றுகிறது. விண்கல ஓடத்தை அசைக்காமல் இப்படியே இருப்பதுதான் நல்லதென எண்ணுகிறீர்கள். வெகுதொலைவில் உயிருள்ள ஒருவகையான ஜீவராசிகள் உங்களை நோக்கிவருவதை பார்க்கிறீர்கள். அவர்கள் மனிதர்களா எனத்தெரியவில்லை, ஆனால் இரண்டு கால்களுடன் நடந்து வருகிறார்கள். நிச்சயம் அவர்கள் உங்களிடம் வந்து நீங்கள் என்ன செய்யவேண்டுமென்று சொல்லுவார்களென தீர்மானிக்கிறீர்கள்.
இதை கற்பனை என்கிறீர்களா? நீங்கள் இதை போல் செயல்பட மாட்டீர்களா? எந்த விண்கலவீரரும் இதைபோல என்றுமே செயல் படமாட்டார்களா? உண்மைதான். ஆனால் இங்கே இப்புவியில் இவ்வகையில் தான் பெரும்பாலான மனிதர்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இம்மூன்று கேள்விகளிலிருந்து தப்பிக்கும் போராட்டத்திலேயே பெரும்பாலான மனிதர்கள் தங்கள் நாட்களை கழிக்கிறார்கள்.

1. நான் எங்கே இருக்கிறேன்?
2. அதை நான் எப்படி அறிவது?
3. நான் என்ன செய்யவேண்டும்?

மனிதனின் எல்லா எண்ணங்களும், உணர்வுகளும், செயல்களும் அவன் தெளிவாக அறிந்திருப்பினும் இல்லையெனினும் இக்கேள்விக்கான பதில்களில்தான் அவையனைத்தும் அடங்கியிருக்கிறது.

இக்கேள்விகளை புரிந்துக்கொள்ளும் முதிர்ச்சியை அடையும் தருணத்தில் அதற்கான பதில்களையும் அறிந்திருப்பதாக மனிதர்கள் நம்புகிறார்கள்.

1. நான் எங்கே இருக்கிறேன்? - இந்நகரத்தில்
2. அதை நான் எப்படி அறிவது - கண்கூடாக தெரிகிறதே
3. நான் என்ன செய்ய வேண்டும்? - இங்கே தான் நிச்சயமற்றுப்போகிறார்கள். ஆனால் பொதுவான பதில் என்னவென்றால் ‘எதை எல்லோரும் செய்கிறார்களோ அதையே’

பிரச்சனை என்னவென்றால் அவர்கள் சுறுசுறுப்பாக இல்லை, திடமான நம்பிக்கையோடில்லை, சந்தோஷமாக இல்லை, சில சமயங்களில் விலகவோ விட்டுத்தொலைக்கவோ முடியாத காரணமற்ற பயத்தையும் விவரிக்கமுடியாத குற்ற உணர்வையும் அனுபவிக்கிறார்கள்.

கஷ்டங்கள் அனைத்தும், பதிலளிக்கப்படாத இம்மூன்று கேள்விகளில் இருந்து தொடங்குகிறதென்ற உண்மையை அவர்கள் எப்போதும் கண்டுணரவில்லை. ஒரே ஒரு அறிதல்முறை மட்டுமே அவர்களுக்கு பதிலை தரமுடியும்
அது: தத்துவம்

நன்றி: நதியலை