(நான் ரசித்த சிறுகதை) ‍‍‍ சாமத்து மழை!

Anandamari
May 07, 2010 11:38 பிப
வேலி மரங்களை வெட்டிப் போட்டிருந்த ஓடைக்குள் இறங்கி, காய்ந்த முள் விளாறுகளை, விரலில் முள் முனை பட்டுவிடாமல் விநயமாய் பொறுக்கி, விறகு சேகரித்தாள் வேலம்மாப்பாட்டி. அந்த வேலி விறகுகளோடு அவளையும் சேர்த்துக் கொளுத்தி விடுவதைப் போல ஒரு கோப வெயில் சுள்ளென்று அடித்த போது, கிழவியின் முதுகு சுளீர் என்று சுட்டது. விறகு பொறுக்கும் வேலைக்கு இடைவேளை விட்டவளாய்... இடுப்பைப் பிடித்தபடி நிமிர்ந்து நின்ற கிழவி, "உஷ்... அப்பாட்�... முருகா...' என்று மூச்சுவிட்டு, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டே, இடது கையால் இடுங்கிய கண்களுக்கும் ஒரு குடை பிடித்தபடி ஆகாயம் பார்த்தாள்; திசைகளை வெறித்தாள்.
எங்கெங்கும் காய்ந்த சருகுகளாய் பசுமையைத் தொலைத்து விட்டு, பரிதாபமாய் காட்சியளித்த கரிசல் காடு முழுவதையும் கரிசனமாய் கண்ட கிழவி கண் கலங்கினாள்.
"மாரித்தாயே... ஏம்மா இந்தத் தண்டனை? மழை இல்லேன்னா பாவி மக்களுக்கு பொழப்பேது ஆத்தா... அதுக எங்க போகும்? என்ன செய்யும் தாயீ...? அதுக மட்டும் தானா? வாயில்லாச் சீவராசிக ஆடு, மாடுக அம்புட்டு உசிரும் மாஞ்சு மடிஞ்சுருமே ஆத்தா... எங்கம்மா... ஆயிரங்கண் மகராசீ... இரக்கப்படு தாயீ... இடி மழையா உன் கருணையை இறக்கிவிடு ஆத்தா...'
கையேந்தி, கண் நனைந்து, நிலத்தில் விழுந்து கும்பிட்டு, நிலத்து மண் எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்ட அவளுக்கு, ஆறுதல் சொல்வது போல அணில் ஒன்று கத்தியது. அவள் கேட்ட வரம் அன்று மதியமே, அவள் நடுக்காட்டில் நிற்கும் போதே கிடைத்துவிடும் என்று அவளே எதிர்பார்க்கவில்லை.
சுள்ளென்று சுட்டுக் கொண்டிருந்த வெயிலின் கோபம் குறைந்தது; ஒற்றடம் கொடுப்பது போல் ஒரு காற்று வீசியது.
நீலமாய்க் கிடந்த ஆகாயத்தின் மேனி மாயமாய் கறுத்தது. மழை மேகங்கள் உறுமிக் கொண்டு, ஊர்வலம் போன வானத்தை இன்ப அதிர்ச்சியோடு அண்ணாந்து பார்த்த கிழவியை அடுத்த நிமிடமே, "அர்ச்சுனன் பேர் பத்து' என்று குலை நடுங்கக் கூற வைத்தது ஒரு இடி முழக்கம். அவள் தன் இடுங்கிய கண்களை இறுகப் பொத்திக் கொள்ள... பளிச்சென்ற மின்னல் சவுக்குகள், தொடர்ந்து இடியோசை...
சிலுசிலுவென்று சிந்தத் தொடங்கிய மழை சில நிமிஷங்களில் சடசடவென்று வலுத்துக் கொண்டது. சங்கிலி மாடன் கோவில் வாசலில் அரிவாள் ஓங்கியபடி வெள்ளைக்குதிரையில் கம்பீரமாய் வீற்றிருந்த கருப்பு அய்யனாரின் காலைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்ட கிழவி, ஒரு ஓரமாய் ஒடுங்கி உட்கார்ந்து, ஒரு மணி நேர மழையை நன்றியோடு ரசித்தாள்.
ஒரு வழியாய் மழை விட்ட பிறகு, ஊருக்குப் போன கிழவி, தன் குடிசையிருந்த இடம் வெறும் தட்டைக் குப்பையாய் மட்டுமே தங்கியிருக்கக் கண்டாள். உடைந்த ஓடுகளாய் மிதந்த பானைகள், பழைய பொட்டலம், கிழிந்த பாய் இவை மட்டுமே அவளை வரவேற்றன.
""பாட்டீ... இந்தா... இதுதான் மிச்சம். இதுவும் கூட நாங்க பார்க்கலேன்னா தண்ணியில தான் மிதந்து போயிருக்கும்.''
ஒரு அலுமினியத் தட்டு, பானை, டம்ளர் என மூன்றை மட்டுமே மீட்டுக் கொடுத்த ராமலட்சுமியின் பிள்ளைகளிடம் நன்றி கூறும், சிரிப்போடு வாங்கிக் கொண்டாள் கிழவி. தன் குடிசையை இழந்த வருத்தம் அவளிடம் கொஞ்சம் கூட இல்லை.
மடியில் கிடக்கும் பிள்ளை, தன் பிஞ்சுக் கால்களால் மார்பில் உதைக்கும் போதும், பிஞ்சுக் கைகளால் கன்னங்களைப் பிடித்துப் பிய்ப்பது போல் இழுத்து விளையாடும் போதும், அந்த அவஸ்தையை தாய் எப்படி சந்தோஷமாய் ஏற்றுக் கொள்வாளோ, அதே சந்தோஷத்தோடு தான், மழையின் சேட்டையால் தன் வீடிழந்த வலியைச் சிரிப்போடு ஏற்றுக் கொண்டாள் கிழவி.


""என்ன கிழவீ... மழையக் காணும், மழையக் காணும்ன்னு தட்டழிஞ்சு வந்தியே, இப்ப என்ன ஆச்சுப் பாத்தியா? உன் குடிசை இருந்த இடமே தெரியல... ஓட்டை உடைசலா, இருந்தாலும் நீ முடங்கி எந்திரிக்க ஒரு குடிசையாவது இருந்தது... இப்ப அதுவும் போச்சு... உனக்கெதுக்கு மழை? நூறு ஏக்கர் நஞ்சை வச்சிருக்கியா, புஞ்சை வச்சிருக்கியா? நீ எதுக்கு மழை வேணும், மழை வேணும்ன்னு மயங்கி மருகிக்கிட்டுத் திரிஞ்ச... இனி பேசாமக் கிடப்பீல்ல?''
பெட்டிக்கடைப் பாலம்மாள் கிழவியைக் கேலி செய்த போது, டீக்கடை சிரித்தது; தெருவே ரசித்தது. கிழவி கோபப்படவில்லை.
தன் பொக்கை வாய்ச் சிரிப்பால், அந்தக் கேலியை ஒரு தூசியாய் தட்டிவிட்டு நடந்தாள்.
""என்ன கிழவி... சிரிச்சுட்டுப் போற? பெட்டிக் கடைக்காரியை விடு... நானும் தான் கேக்கேன்... உனக்கெதுக்கு மழை?''
நடுவப்பட்டிக்காரன் வழி மறித்துக் கேட்டான்...
""எனக்குன்னா எனக்கு மட்டுமில்லடா... பயபுள்ள உனக்கும் தான்... உன் பிள்ளைக்கும் தான்... அந்தப் பெட்டிக் கடைக்காரிக்கும் தான்... இந்த ஊருக்கும் தான்டா மழையக் கேட்டேன்... பாவி மக்கா... நீங்க நல்லாயிருக்கணும்ன்னு தான் இந்தக் கிழவிக்கு ஆசை...
""காடு கரை விளையணும்... பாடுபடற சனம் பசியறியாமச் சாப்பிடணும்... அதுக்கு வெள்ளாமை விளையணுமில்லை... மழை வேண்டாமா? என் குடிசை தொலையட்டும் போ... மழை வரட்டும்டா... காட்ல முளைக்கிற பயிர் பச்சைகளுக்கு மழை தானப்பா தாய்ப்பாலு... பயிர் செழிச்சு... அதனால, பயமக்கா நீங்க செழிச்சாப் போதும்டா...
""உங்க வாசல்ல ஒரு முலையில இந்தக் கிழவி கிடந்துட்டுப் போறேன். இன்னும் லட்சம் நாளா இருந்துடப் போறேன்? இன்னைக்கோ, நாளைக்கோ... என் குடிசையா பெரிசு? மழை தான் பெரிசுடா... அது மண் குளிரப் பெய்யணும்டா கிறுக்குப் பய மக்கா...''
கிழவி நடந்தாள், நடந்தாள்; நடந்து கொண்டே இருந்தாள். அவளை ஒரு வீடு கூட தன் வாசலில் உட்கார விடவில்லை...
"வாசலாவே இருந்தாலும் கிழவிக்கு இடம் கொடுக்கக் கூடாது... நாறடிச்சுருவா... எங்கயாவது இடிஞ்ச கோவில், மடம் பாத்து போய்க் கிடப்பாளா... இங்க வந்து இம்சை பண்றா... போ, போ...'
வீட்டுக்கு வீடு அவளை விரட்டியடித்தது. வெயிலடிக்கத் தொடங்கிய ஊரில் தொடர்ந்து வெயில் மட்டுமே அடித்தது. மறுபடியும் மழை அந்த ஊரை மறந்தது. காடு காய்ந்தது.
""அன்னிக்குப் பெய்த ஒரு மழைய நம்பி வீட்ல உள்ளதையும், காட்ல போட்டுட்டு உயர அண்ணாந்து பாக்குறமே... அஞ்சாறு தூத்தல் விழக் கூடாதா? மழை இந்தக் கொடுமையா பண்ணும்?''
— கேழ்வரகு அரைக்கப் போன இடத்தில் கிட்ண சாமி புலம்பித் தவித்தான்.
""முதல்ல குடிக்கத் தண்ணி கிடைக்குமான்னு பாரும். நல்ல தண்ணிக் கெணத்துல ஒரு சொட்டுத் தண்ணியில்லே... ராசு நாயக்கர் கெணத்துக்கு நாலுமைல் நடந்து போயி இறச்சு எடுத்துட்டு வாரேன் ரெண்டு பானை... இந்தக் கொடுமை உண்டா?''
— நாக பாளையத்துக்காரி நொந்து, நொம்பலப் பட்டுப் போனாள். ஊரில் ஒவ்வொரு வீடும் கையேந்திப் பார்த்தது; கண் திறக்க வில்லை வானம்.
ஊருக்குத் தென் கோடியில் வண்டிப் பாதையில் ஒரு இடிந்த மண்டபத்தில் காலம் தள்ளிய கிழவியும் கவலையோடு வானத்தைப் பார்த்துவிட்டு, ஒரு முடிவுக்கு வந்தாள்.
வீடு வீடாய்ப் போய் வாசலில் நின்று யாசித்தாள். ஏதோ அவள் வயிற்றுப் பாட்டுக்காக யாசிப்பதாய் எண்ணிக் கொண்ட ஊர் எரிந்து விழுந்தது.
""நீயெல்லாம் இன்னமும் கெடந்து எந்தக் கோட்டையைக் கட்டியாளப் போறயாம்? எங்க உயிர வாங்கத்தான ஊருக்குள்ள அலையுற? கிழட்டுச் சனியனே... மடியைப் பிடி... போ, போ...''
— வேண்டா வெறுப்பாய் அவள் மடியில் எறிந்த சோளமும், கம்பும் அவள் நிலைமையைக் கண்டு சிரித்தன.
அன்று, சாயுங்காலமே அம்மன் கோவில் வாசலில், கூழ் காய்ச்சினாள் கிழவி. அம்மனை மனசார வேண்டி வயிறாறக் குடிப்பதற்கு வீடு, வீடாய் போய் அழைத்தாள்.
அவளை எப்படியோ எண்ணியிருந்த ஊர், அதற்காக வெட்கப்பட்டுக் கூனிக்குறுகி, அவளிடம் கூழ் வாங்கிக் குடித்துச் சென்றது.
நள்ளிரவிலேயே, வீட்டு வாசலில் படுத்திருந்தவர்களெல்லாம் அவிழ்ந்த ஆடையை அரைகுறையாய் கட்டி, அவசரமாய் பாயைச் சுருட்டி வீட்டிற்குள் ஓட வைத்தது திடீர் மழை.
வீடுகளெல்லாம் கதவடைத்துக் கொண்ட பின், வெறும் ஊரை விடிய, விடியச் சவட்டி எடுத்தது சாமத்து மழை, விடிந்த பிறகே மழைவிட்டது.
தெருவில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் குதித்து விளையாடின கிராமத்துப் பிள்ளைகள்.
சாவடியிலும், டீக்கடை யிலும், சாமத்து மழையைப் பற்றிய சந்தோஷப் பேச்சு தான்.
பாலு கடை முன்னால் பலராம் நாயக்கர் பேசிய பேச்சு தான், பத்துப் பேர்களை அந்த இடத்தில் அவரைச் சுற்றி நிற்க வைத்தது. ஆவலாய் அவர் பேச்சை கேட்கவும் வைத்தது...
""ஊருக்குள்ளயே எத்தனை மரம் இருந்தது தெரியுமா? எனக்குத் தெரிய இருபத்தி ஏழு மரம் இருந்தது. எல்லாத்தையும் வெட்டீட்டான், வீட்டக் கட்டீட்டான்... காடையும் விட்டு வச்சானா? அதையும் காலி பண்ணீட்டான்... காங்கீரீட் காடாயிருச்சு... இயற்கைய எப்படியெல்லாம் சீரழிக்கணுமோ சீரழிச்சுட்டோம்... பெறகு எப்படிய்யா மழை பெய்யும்? சாமத்துல பெய்த மழை உனக்கோ எனக்கோ ஊருக்கோ பெய்த மழையில்லடா...
""நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழைன்னு அவ்வைக் கிழவி அந்தக் காலம் பாடுனாளே... அந்த மழை தான்டா சாமத்து மழை...
""அந்தக் கிழவியப் போலவே நம்ம ஊருக்குள்ள அலையுதாளே ஒரு கிழவி... அவளுக்காக பெய்த மழைடா... அவ மனசுக்காகப் பெய்த மழைடா...
""அவளுக்கென்ன? அம்பத்து எட்டு ஏக்கர் நஞ்சையா இருக்கு? மழை மழைன்னு தட்டழிவாளேடா... ஏன்... என்னத்துக்கு? ஊரு உலகம் நல்லாப் பிழைக்கணும்ன்னு மனசார நினைக்கா பாரு... அந்த நெனைப்புக்காகப் பெய்த மழைடா... அந்த மனசுக்கார மகராசிய இனி என் பண்ணையில தான் தங்க வைக்கப் போறேன்... எங்கடா கெடக்கா அவ?''
கிழவியைத் தேடி இடிந்த மண்டபத்திற்குப் போன பலராம் நாயக்கர் இடிந்து போய் நின்று விட்டார்.
கிராமத்து ஜனங்கௌல்லாம் கசகசவென்று பேசிக் கொண்டு, அங்கே கூடிக் கிடந்தனர். கிழவி இறந்து போனாளாம்...
""நேத்து பொழுதடையுற வரைக்கும் கூழ் காய்ச்சி ஊத்துனாளே கெழவீ... எப்படிப்பா செத்தா?''
அதிர்ச்சியோடு கேட்டார் பலராம் நாயக்கர்.
""யாருக்குத் தெரியும்? ஆனா, ஒண்ணு மட்டும் தெளிவாத் தெரியுது நாயக்கரே...
""நாம செத்துட்டா, புதச்சுட்டுத் தலை முழுகத் தண்ணி இல்லாம சனங்க கிணறு, கிணறா அலையுமே... அப்படி அலைய வைக்கத்தானா இந்த உசிர வச்சிருந்தேன்னு கடைசி மூச்சிலயும் கிழவி மழைக்கு தான் கையேந்தீருப்பா... அதனாலதான் அந்தச் சாமத்து மழை...''
""எப்படியோ ஒரு மழைய வாங்கிக் கொடுத்திட்டு தான மகராசி மண்டையப் போட்டிருக்கா...'' என்று நாயக்கரிடம் ஒருவன் புலம்பியபோது, ஊரே கண் கலங்கியது. அவள் வாழ்க்கையை ஆளாளுக்கு அவமதித்த ஊர், அவள் மரணத்தை வணங்கி, வழிபட்டு ஒரு மனச்சுமையோடு, அவள் உடலை மயானம் கொண்டு சென்றது.