மது அருந்தினால் ரூ.1000 அபராதம்: தகவல் கொடுத்தால் ரூ. 500 பரிசு

Anandamari
ஏப்ரல் 15, 2010 01:12 பிப

பாலமேடு :
கிராமத்திற்குள் யாரும் மது அருந்தக்கூடாது என்றும், ஏழை, பணக்காரர் யார் இறந்தாலும் கிராமத்தின் மூலம் அடக்கம் செய்யலாம் என்றும், மதுரை அருகே ஒரு ஊராட்சி முடிவு செய்துள்ளது.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சரந்தாங்கி, பாறைப்பட்டி இணைந்து சரந்தாங்கி ஊராட்சி உள்ளது. இதன் தலைவராக முத்தையா என்பவர் தொடர்ந்து மூன்று முறை தலைவராக இருந்து வருகிறார். சிறந்த ஊராட்சி தலைவருக்கான விருது பெரும் வகையில் யூனியன், மாவட்டம் நிர்வாகம் சார்பில் நிர்மல் புரஷ்கார் விருதுக்கும் பரிந்துரை செய்துள்ளனர். முதல் ஆண்டில், ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதும் ஊராட்சிக் குட்பட்ட பகுதியில் யாரும் திருடக் கூடாது, மீறுபவர்களுக்கு, கிராமம் சார்பில் தண்டனை கொடுக்கப்படும் என தெரிவித்தார். அது கிராம கட்டுப் பாட்டிற்கு சாதகமாக அமைந்தது. இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டதும், ஊருக்குள் போலீஸ் நுழையக்கூடாது, எவ்வித பிரச்னையும் கிராம கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கிராம ஒற்றுமை கிடைக்கும் என அறிவித்தார். இதுவும் நல்ல பலனை தந்தது. மூன்றாவது முறை தேர்வு செய்யப்பட்டதும், முத்தாலம்மன் கோயில் பூசாரி ராஜேந்திரன், ஊராட்சி தலைவர் முத்தையா தலைமையில் மீண்டும் கூட்டம் கூடியது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
கிராமத்தில் யாரும் மது அருந்தக்கூடாது, மீறிகுடித்தால், கோயிலில் ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். மது அருந்தியவர் குறித்து யாரேனும் தகவல் கொடுத்தால், அவருக்கு கிராமத்தின் சார்பில் ரூ. ஐநூறு பரிசு வழங்கப்படும். கிராமத்தை சுற்றிலும் நிலத்தடி நீர் பாதிக்கும் வகையில் மணல் அள்ளுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம், மணல் அள்ளுவது குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ஐநூறு ரூபாய் பரிசு. ஊராட்சி பகுதிக்குள் யார் இறந்தாலும் ஏழை பணக்காரர் பாகுபாடு இல்லாமல் கிராமத்தின் சார்பில் இறுதி சடங்கு செய்யப்படும் என தீர்மானம் கொண்டு வந்தனர். நான்கு தினங்களுக்கு முன் முருகேசன் என்பவர் டிராக்டரில் மணல் அள்ளினார். அதை மாயன் என்பவர் தகவல் தெரிவித்தார். மணல் அள்ளியவருக்கு ஆறாயிரம் அபராதமும், தகவல் தந்தவருக்கு ஐநூறு ரூபாய் பரிசு அளித்தனர். ஊராட்சி முடிவுக்கு பின், கிராமத்திற்குள் மது அருந்துவதை பலரும் நிறுத்தி விட்டனர். வெளியூரில் மது அருந்தினால், உறவினர் வீட்டில் தங்கியிருந்து மறு தினம் ஊருக்குள் நுழைவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இது குறித்து தலைவர் முத்தையா கூறியதாவது,
மது அருந்தி விட்டு ஊருக்குள் அசிங்கமான பேச்சுக்கள், இறப்பு வீட்டில் ஆடம்பரம், கோயில் திருவிழா சமயத்தில் வரி கொடுக்க முடியாமல் திணறும் குடும்பங்கள் இதையெல்லாம் மனதில் வைத்து கிராம கட்டுப்பாட்டு நிபந்தனைகள் கொண்டுவந்தோம். ஊராட்சியின் முடிவுக்கு அனைத்து தரப்பினரும் நல்ல ஒத்துழைப்பு தருகின்றனர், என்றார்.

நன்றி:dinamalar