எதிர்பாராத முத்தம்

வேல்
பிப்ரவரி 11, 2010 02:26 பிப
பாேவந்தர் பாரதி தாசனின் வரிகள்

எதிர்பாராத முத்தம்

முதற்பகுதி

1. பெண்ணழகி தண்ணீர்த்துறைக்கு

உலகம் விளக்கம் உறக்கீழ்த் திசையில்
மலர்ந்தது செங்கதிர்! மலர்ந்தது காலை!

வள்ளியூர் தன்னில் மறைநாய்கன் வீட்டுப்
புள்ளிமான் வெளியிற் புறப்பட்ட துவாம்!

நீலப் பூவிழி நிலத்தை நோக்கக்
கோலச் சிற்றிடை கொடிபோல் துவளச்

செப்புக் குடத்தில் இடதுகை சேர்த்தும்
அப்படி இப்படி வலதுகை யசைத்தும்

புறப்பட்ட மங்கைதான் பூங்கோதை என்பவள்.
நிறப்பட்டாடை நெகிழ்ந்தது காற்றில்!

பாதச் சிலம்பு பாடிற்று! நிலாமுகம்
சீதளம் சிந்திற்றாம்! செவ்விதழ் மின்னிற்றாம்!

பெண்ணழகி அன்னப் பேடுபோல் செல்கையில்,
வண்ணக் கலாப மயில்போல் மற்றொரு

வனிதை வழக்கப் படிவந்து சேர்ந்தாள்;
புனிதை அவள்பெயர். புனல்மொள்ளு தற்கும்

குளிப்ப தற்கும் சென்றார்
குளக்கரை நோக்கிக் கொஞ்சிப் பேசியே!

2. நீராடு பெண்ணினத்தாரோடு, பூங்கோதை!

வள்ளியூர்த் தென்புறத்து
வனசப் பூம் பொய்கை தன்னில்

வெள்ளநீர் தளும்ப, வெள்ளம்
மேலெலாம் முகங்கள், ஓவியம் கண்கள்;

எள்ளுப் பூ நாசி, கைகள்
எழிலொடு மிதக்கப் பெண்கள்

தெள்ளு நீராடு கின்றார்!
சிரிக்கின்றார், கூவுகின்றார்!

பச்சிலைப் பொய்கை யான
நீலவான் பரப்பில் தோன்றும்

கச்சித முகங்க ளென்னும்
கறையிலா நிலாக் கூட்டத்தை

அச்சமயம் கிழக்குச்
சூரியன் அறிந்து நாணி

உச்சி ஏறாது நின்றே
ஒளிகின்றான் நொச்சிக் குப்பின்!

படிகத்துப் பதுமை போன்றாள்
நீந்துவாள் ஒருத்தி! பாங்காய்

வடிகட்டும் அமுதப் பாட்டை
வானெலாம் இறைப்பாள் ஓர்பெண்!

கடிமலர் மீது மற்றோர்
கைம்மலர் வைத்துக் கிள்ளி,

மடிசேர்ப்பாள் மற்றொருத்தி!
வரும் மூழ்கும் ஓர் பொன் மேனி!

புனலினை இறைப்பார்! ஆங்கே
பொத்தென்று குதிப்பார் நீரில்!

"எனைப்பிடி" என்று மூழ்கி
இன்னொரு புறம்போய் நிற்பார்!

புனை உடை அவிழ்த்துப் பொய்கைப்
புனலினை மறைப்பார்