நீறில்லா நெற்றி

வினோத் கன்னியாகுமரி
ஆகஸ்ட் 03, 2009 02:10 பிப
மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், மூளையின் திறவு கோல். அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிளுக்கவும் செய்யும்.

சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும்,

மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.

ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தணம் பூசுவார்கள்.


மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான். இது தொடக்கம்.


நீறில்லா நெற்றி பாழ் என்பார்கள்.

எரிவது என்றால் தீயோடு எரிவது. தீ இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல் என்பார்கள். சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும் போது அது நீறத்துவங்கும் கொதிக்கும், நெருப்பு இல்லாமல் புகையும், அதில் நெருப்பு இல்லை. ஒரு வகை வேதி வினை. அதை நீற்றுதல் என்பார்கள்.

அதை போல கனலில் நீற்றி எடுக்கப்பட்டது திருநீறு.

மேலும் நெற்றி என்பதை இதே போல நீற்ற வேண்டும், நீறிக்கொண்டிருக்க வேண்டும், அதாவது சுண்டு விரலை நமது நெற்றிப்பொட்டில் தொட்டும் தொடாமலும் நேராக பிடித்தால் நெற்றியில் ஒருவித உணர்வு ஏற்படும். அந்த உணர்வை அப்படியே வைத்து தியானம் செய்யவது ஆக்ஞா (நெற்றி) தியானம், இது குண்டலினி யோகாவின் தொடக்கம், இதை வேதாத்ரி மகரிஷி அவர்களின் அறிவுத்திருக்கோவில், ஈஷா யோகோ மையம் போன்ற இடங்களில் சென்றால் முறையாக சொல்லித்தருவார்கள்.

பண்டைய சித்தர்கள் சொல்லிச்சென்ற உயிர் வளர்ப்பு முறையின் தொடக்கம் இது.

இதை முறையாக செய்தால் நம் சிந்தனைகள் சீர்படும், மற்றவரை விட அதிகமாக சிந்திக்கலாம். மனம் ஒருநிலைப்படும். எதையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும், காரிய சித்தி உருவாகும்.

இதை முறையாக செய்யவேண்டும், இந்த தியானம் செய்தால் கண்டிப்பாக சாந்திதியானமும் செய்யவேண்டும், இல்லையென்றால் அது ஒற்றைத் தலைவேதனையில் கொண்டுவந்து விட்டுவிடும்.

இந்த வகை ஆக்ஞா தியானம் சித்தர்கள் சொல்லிச்சென்றது என்றாலும் இதை அவர்கள மனித இனத்துக்காகத்தான் சொல்லிச்சென்றிருக்கிறார்கள், இதை மதரீதியாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. யாவரும் செய்யலாம். நாம் செய்வது யாருக்கும் தெரியப்போவதும் இல்லை.

இப்படிப்பட்ட பொக்கிஷங்களை நம்முள்ளேயே வைத்துக்கொண்டு செய்யாமல் இருந்தால் அது பாழ்.

இதைத்தான் நீறில்லா நெற்றி பாழ் என்பார்கள்.