இனி என்ன - இந்து மதம்

வினோத் கன்னியாகுமரி
வினோத் கன்னியாகுமரி சிறப்பு பதிவு
ஜூலை 06, 2009 06:43 பிப
என்னைப்போல 100 இளைஞர்களை தாருங்கள் இந்தியாவையே மாற்றிக்காட்டுகிறேன் என்று நெஞ்சுறுதியுடன் அறைகூவல் கொடுத்த விவேகானந்தர் பிறந்த இதே நாட்டில் இன்னும் அந்த 100 பேர் பிறக்கவில்லையா? எங்கே எங்கே என்னைப்படைத்த அவன் எங்கே போய் ஒழிந்துகொண்டானா என தேடி அலைந்த அவர் நம்மைப்போல ஒரு சாதாரண மனிதர் தான். என்ன, அவரிடம் இருந்தது கண்டே ஆகவேண்டும் என்ற வைராக்கியம் மட்டுமே, கண்டார் குருவை, கண்டார் தேடியவனை.

நமக்கு எங்கே போனது இந்த வைராய்க்கியம்? எங்கேயும் போகவில்லை, அதே வைராக்கியம் நம்முள் அப்படியே குறையாமல் இருக்கிறது. எங்கே என்கிறீர்களா? இன்று, இந்த படத்தை இன்றே பார்த்தே ஆக வேண்டும் என்று வெறியுடன் திரையரங்கு முன் நிற்கும் இளைஞர்களை பாருங்கள். ஒரே ஒரு வித்தியாசம், அந்த வெறி என்பது வைராய்க்கியத்தின் மறுபெயர் மட்டும்.

இனி பிரத்தேயமாக யாரும் புண்ணியவான்களாக பிறந்து முன்னெடுத்துச்செல்ல வருவார் என்ன எண்ணத்தை தூர எறியுங்கள். ஒவ்வொரு மனிதரும் அந்த புண்ணிய ஆத்மாதான், கையை நீட்டினால் தீ வரவேண்டும் என்றோ சொன்னால் மழை வரவேண்டும் என்றோ மாயச்செயல்களை செய்பவர்தான் அந்த புண்ணிவான்கள் அல்ல. மகாத்மா காந்தியை பாருங்கள், எவ்வித மாயமோ மந்திரமோ செய்யவில்லை, அவர் அறிந்தது எல்லாம் ராம் ராம். வரலாற்றை எடுத்துப்பாருங்கள் தலைவர்கள் எல்லோரும் சில இடங்களில் தவறி அதன் மூலம் கற்றுக்கொண்டவர்கள் தான். அந்த வகையில் நீங்களும் தான் புண்ணியவான். செய்யும் செயலை முடிக்க வந்திருக்கிறீர்கள். சாதிப்போம்.

இந்தியா எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

எங்கு நோக்கினும் கொள்ளை கொலை. தன்னைத்தானே கொல்கிறோம். அடிபடுவரை சினிமாவில் கண்டு சிரிக்கிறோம். இப்போது அடிகொடுக்கும் வில்லன்கள் தான் சினிமாவில் நாயகன்கள். நம் எல்லோரின் மனநிலையும் விரைவாக மாறிவருகிறது. முன்பு பெரிய வேதனையாக இருந்த நிகழ்ச்சிகளை இன்று கேட்டு மறு காதில் விடக்கூடிய அளவு மாறிவிட்டது மனது. எல்லாம் கலி. அந்த கலி நம் எல்லோர் மனதிலும் கதகளி ஆடிக்கொண்டிருக்கிறது.

நாம் எல்லோரும் தானே உலகம், உலகமும் அப்படியே. அன்றும் எல்லா தவறுகளும் நடக்கத்தான் செய்தது. எத்தனை போர்கள், எந்த போரை எடுத்தாலும் முடிவு அழிவுகள், அதில் நல்லவர்கள் கெட்டவர்கள் பாகுபாடில்லை. மகா பாரக யுத்தத்தை நடத்திய கிருஷ்ணன் வம்சமும் அழிந்தது, எல்லாவற்றையும் அழிக்கும் காலம்.

"கணக்கிடுபவர்களுள் காலம் நான்" – கீதையில் கண்ணன்.

ஆனால் இன்று ஒவ்வொருவருடைய மனதிலும் தேவ அசுர யுத்தமாக வருணிக்கப்படும் நல்ல எண்ணங்களுக்கும் கெட்ட எண்ணங்களுக்கும் இடையில் நடக்கும் யுத்தத்தில் நல்ல எண்ணங்கள் அழிந்து வருவது அதிகமாக இருப்பது வேதனைக்குரியது. ஏனென்றால் நமக்கு போரிடுவதற்கு தக்க ஆயுதம் அளிக்கப்படவில்லை. போர் முறையும் தெரியாது. எப்போது போர் தொடங்கி எப்போது முடியும் என்பதும் தெரியாது அழிகிறோம். சரி, இதையெல்லாம் கற்றுத்தருபவர்கள் யார்? இந்த உலகம் தான். உண்மை பல சமயங்களில் விளையாட்டாகவே வெளிப்பட்டுவிடுகிறது. இந்தியாவில் எத்தனை புனிதர்கள் பிறந்தார்கள் என கணக்கு இருக்கிறதா? அல்லது இந்தியாவில் எத்தனை நல்ல சிந்தனை கொடுக்கும் நூல்கள் இருக்கிறது என்பதாவது கணக்கில் இருக்கிறதா?

அந்த நூல்களை எல்லாம் இடைவிடாமல் படித்தால் கூட முடிக்க நம் ஆயுள் போதாது. நம்முன் நடக்கும் ஒவ்வொரு செயலும் பாடம் தான் நம் ஒவ்வொரு தவறுகளும் ஆசிரியர். போதித்துக்கொண்டே இருக்கிறது. நாம் தான் சிந்திக்க மறுத்து வேறு பலதையும் சிந்தித்து நடக்கிறோம். இந்தியாவின் ஸநாதன தர்மம் இன்று நமக்கு கற்றுத்தர வேண்யிட பலதையும் மறைத்தே இருக்கிறது. அதனால் வெளியில் பலவும் மூட நம்பிக்கைகளாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. எல்லாம் எல்லாவருக்குமானது. சநாதன தர்ம சிந்தனைகளை அனைவருக்கும் அளிக்கும் கடமையும் நம்முடையது தான்.

எங்கே தொடங்குவது?

இளைய சமுதாயத்திற்கு அளிக்க வேண்டிய முக்கிய பொக்கிஷங்கள்
யோகா உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்று திருமூலர் சொன்ன தமிழ் மந்திரத்தில் எல்லாமே பொதிந்து கிடக்கிறது. அந்த யோக முறை அனைவருக்கும் கற்பிக்கப்பட வேண்டும். இளமையில் வளையாதது முதுமையில் வளையுமா? உடலிற்கும் மனதிற்கும் உன்னதமான யோகமுறையை கற்பித்து அவர்களை நோய்நொடியின்றி வாழ வைக்கவேண்டும். சுவரில்லா சித்திரமா?

தற்காப்பு கலை சிறுவயது முதலே அனைத்து மகளிருக்கும் தற்காலத்தில் மிக முக்கிய தேவைப்படுவது தற்காப்புக்கலை. அது எவ்வித தற்காப்பாக இருந்தாலும் பரவாயில்லை. தன்னிடம் இருந்தே தன்னைக்காத்துக்கொள்வது முதல் அடுத்தவர் கொண்டு இயற்கையால் வரும் ஆபத்துக்காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது வரை தெரிந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள் நம் பிள்ளைகள்.

தியானம் மனிதன் என்னும் மிக உன்னதமான கணினியில் மனத்தை கட்டுப்படுத்தி தன்னையே உணரவைக்க மனிதனே கண்டறிந்த மகா யோகம் தியானம். சும்மா இரு சொல்லற. வெறும் தியானம் மட்டுமல்ல குண்டலினி தியானமும் அனைத்து யுவ யுவதிகளுக்கும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். நம் உடல் என்பது வெறும் மலம் சுமக்கும் குப்பைத்தொட்டி அல்ல என்பதையும் அது தெய்வம் உறையும் திருக்கோவில் என்பதையும் அனைவரும் உணரச்செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் ஆக்ஞா தியானம் செய்ய கண்டிப்பாக வற்புறுத்த வேண்டும். நீறில்லா நெற்றி பாழ்.

தீயில்லாமல் எரிதலை நீறுதல், நீற்றுதல் என்பர். நெற்றி எப்போதும் உணர்வால் நீறிக்கொண்டே இருந்து அவரவர் சிந்தனைகளை உயர்த்தவேண்டும். அதை செய்விப்பது நமது கடமை. ஆக்ஞா தியானம் செய்விப்போம் அது மட்டுமல்ல இரத்த அழுத்த நோயிலிருந்து பல்வேறு மன நோய்களுக்கு அருமருந்தாக இருக்கிறது தியானம். தினம் 15 நிமிடமாவது செய்வது அவசியம்.

இசை இசையை ஆட்டத்திற்கும் ஆபாசத்திற்கும் இல்லாமல் ஆன்மீகமாக பார்த்த நாடு நம்நாடு. அதன் இன்றைய நிலமை உரு இழந்து நிற்கிறது. கர்நாடக பழந்தமிழிசையையும் வாத்தியங்கள் இசைக்கும் திறனையும் இசையமைக்கும் திறனையும் ஒவ்வொருவரிடமும் புதுமையுடன் புகுத்துதல் கட்டாயம், இன்று இளம் சந்நதியினருக்கு இசை என்றாலே மேல் நாட்டு இசை மோகம் தான், அது நம் இசையையும் வெளிநாட்டத்தானிடம் இருந்து கற்க வேண்டிய சூழ்நிலைக்கு கொண்டு செல்லாமல் பார்த்துக்கொள்ளுதல் நம் கடமை. இசையால் நம் மனம் ஒருமுகப்படுத்தப்படுகிறது. அதனால் எந்த காரியத்தையும் சிறப்பாக செய்து முடிக்கவும் முடியும் மற்றும் அது டீவி முன் கவிழ்ந்து கிடக்கும் இள சந்நதியினருக்கு நல்ல மாற்றாகவும் அமையும்.

பரத நாட்டியம் அவனின்றி அணுவும் அசையாது என ஆடிக்காட்டிய நடராஜர் நாட்டியத்தை கலையாக பயின்று வைத்திருப்பது பொழுதுபோக்கை நல்ல வகையில் திசைதிருப்ப உதவும். நல்ல உட்பயிற்சியும் கூட.

திருக்கோயில்களில் என்ன மாற்றங்கள்?

கோவிலில்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பது வாக்கு, ஆதி காலத்து கோவில்களில் பலதும் உருவிழந்து அல்லது அந்தியப் படையெடுப்பால் அழிக்கப்பட்டு மிச்சம் எஞ்சியிருப்பதே இப்போது நாம் காண்பது. அந்நிய சக்திகள் ஒரு ஊரில் மதமாற்றம் செய்ய வரும் முன் அவ்வூரில் உள்ள கோவில்களில் சக்தி வெறியேற்றப்படுவது அல்லது கட்டப்படுவது மறைபொருளாக அவர்கள் செய்யும் முதல் வேலையாக உள்ளது. பலருக்கும் இது ஆச்சரியமாக இருக்கும். ஆனால் இது இன்னும் அங்கங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எப்படிச்செய்வார்கள் என்பதை இங்கே வெளிப்படையாக சொல்ல இயலாது. அனைத்து கோவில்களையும் புதுப்பித்து சிலைகளுக்கு உயிர் கொடுக்கப்படவேண்டும். மற்றும் இவ்விதம் தீயசெயல்கள் எதுவும் பாதிக்காவண்ணம் உருகொடுக்கப்படவும் வேண்டும். கோயில்கள் அனைத்தும் கல்விச்சாலைகள் செய்வோம் என்று சொல்லிச்சொல்லி இப்போது கல்விச்சாலைகளைப்போல் தரிசனத்திற்கு பணம் புழங்கும் இடங்களாக திருக்கோயில்கள் மாறிவருவது வெட்கப்பட வேண்டிய விசயம்.

இனி என்ன?

திருப்புகழ் தேவாரம் செல்லரித்துப் போனவற்றில் மீதி கிடைத்த தமிழ் பொக்கிஷங்களான திருப்புகழிற்கு உருகாதார் ஒருப்புகழுக்கும் உருகார். திருப்புகழ் அனைத்தும் கோயில்களீல் அதன் இசை மாறாமல் பாடப்பட வேண்டும். மக்கள் மயங்காவிட்டாலும் மாக்களாக மயங்காமலாவது இருப்பார்கள்.

சத்சங்கம் எல்லாக்கோயில்களிலும் எப்போதும் ஒருவரை சத்சங்கம் செய்ய வைப்பது என்பது இப்போது நடக்காத காரியம். ஆனால் ஏற்கெனவே சத்சங்கம் செய்த உரைப்பதிவு ஒலிகளை போடுவது நடக்கும் காரியம். நடக்க வேண்டிய காரியம். திருவிழாக்காலங்களில் இவ்வாறான ஒலிப்பதிவுகளை ஒலிக்கச்செய்வது மிக மிக முக்கியமாகும். இவ்வாறான ஒலிபதிவுகள் நிறைய இசைகளுடன் வெளிவரச்செய்ய வேண்டும்.

திருமொழிகள் தமிழையே ஒழுங்காக படிக்கத்தெரியாத பாமர மக்களுக்கு சமஸ்கிருதம் என்ன புரிந்து விடவா போகிறது. தற்சயம தேவை ஸநாதன சமயத்தில் என்ன இருக்கிறது என்பதை உணரவைப்பதே. அது ஒரு மைல்கல்லை நட்டுவைத்து அதில் குங்குமம் பூசி ஸல்யூட் அடித்துப்போகச்சொல்லும் சமயம் அல்ல என்பதை உணர வைப்பது. நமக்கு தான் தெரியுமே என இருந்துவிட வேண்டாம், 99 சத விகித மக்கள் பகவத்கீதையை பார்த்திருக்கக்கூட மாட்டார்கள் என்பது எத்தனை பேருக்குத்தெரியும்? முக்கிய திருமொழிகளை எந்த நூலில் இருந்தாலும் கோயில்களில் உரைநடைகளாக வரைந்து வைப்போம்.

பார்க்கும் 100 பேரில் ஒருவர் படித்தாலே அந்த புண்ணியம் நமக்குத்தான். “நீ எந்த தெய்வத்தை வணங்கினாலும் உன் அந்த அன்பு உண்மையான உள்ளன்பு என்றால் நீ வணங்கிய அந்த தெய்வத்தின் வாயிலாகவே உன் பக்திக்குத்தகுந்த கருணை உனக்குத்தருவேன், ஆனால் அது அந்த தெய்வத்தைப்போலவே நிலையில்லாதது. நிலையான என்னையே வணங்கு நிலையான இன்பமான நானே கிடைப்பேன்” இந்த பகவத் கீதை வாசகத்தை விட ஒருவரை யோசிக்க வைக்க என்ன தேவை? நம்மிடம் இல்லாத புனித நூல்களா? நம்மிடம் இல்லாத புனிதர்களா? ஆனால் எல்லாமே எங்கோ ஒரு இடத்தில் மறைந்து கிடக்கிறது.

வெளிக்கொணர வேண்டியவர்கள் நாம்தான். நம் எல்லா நூல்களையும் கற்று தெளிய நம் ஆயுள் போதாது. முக்கிய திருமொழிகளை எடுத்து பறைசாற்றுவோம் ஒவ்வொரு கோவில்களிலும். கோவில்களில் மட்டுமல்ல வீட்டுச்சுவர்களில் கூட நல்ல தெய்வீக வசனங்களை எழுத மக்கள் முன்வரவேண்டும். அது நம்மை சோர்ந்திருக்கும் சமயம் உற்சாகத்தையும் தீயசிந்தனை உட்புகாமலும் பாதுகாக்கும்.

மற்றவைகள் • திருக்கோவில் தீர்த்தாடனங்களையும் ஸ்தல் விருஷத்தையும் செம்மையாக பராமரிக்கப்படவேண்டும்.

• உபயம் அளித்தவர் பெயரை கொட்டையாக உபயப்பொருளில் எழுதப்படாமல் அவை தனியாக பராமரிக்கப்படவேண்டும். அப்பொருளில் நல் வாசகங்களை எழுதி காணும் போது நல் சிந்தவை வரச்செய்யவும்
• தியான மண்டபம் அமைக்கப்பட்டால் மிகவும் நல்லது. அதை நல்லபடியாக உபயோக்ப்படுத்துகிறார்களா என்பதையும் கவனிக்கவும். • திருக்கோவில் பெயர்களில் ஜாதிப்பெயர்களை களைய முற்படவேண்டும், ஒன்றே குலமும் ஒருவனே தேவரும்.
• பலியிடுதல் என்பது நம் கெட்ட எண்ணங்களை களைந்து நம்மையே இறைவனுக்கு பலியிட்டுக்கொள்வதாகும். அங்கே உயிப் பலி கேவலமானது. அது தடுக்கப்படவேண்டும்.
• ஆறுகால பூஜை இல்லாவிட்டாலும் காலை மாலை ஊர் கேட்க சத்சங்க நாடாவோ பாடல்களோ ஒலிக்கவிடவேண்டும் • முக்கியமாக கோவில் சுற்றுப்புறத்தை தூய்மையாக பாதுகாக்கப்படவேண்டும்.
• பல சின்னச்சின்ன கோவில்களை ஒரே பெரிய கோவிலாக மாற்றி சக்தியை அதிகப்படுத்தலாம். மாற்றங்கள் எதுவரை? எழுச்சி என்பது மறுபக்கம் வீழ்ச்சியடையும் வரையே இருக்கும், ஆனால் இந்த மாற்றங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமல்ல, என்றென்றும் இருக்கவேண்டியது, இப்போது சில இடங்களில் மட்டும் இருப்பதை சிறு கிராமங்கள் வரை நடைமுறைப்படுத்த வேண்டும். இப்போதே இதற்காக ஏற்பாட்டை செய்யுங்கள். நமக்கு என்ன என்று தயவுசெய்து இருந்துவிடாதீர்கள், இதில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உள்ளது.

இன்றே தொடங்குவோம். -- ஒன்றே குலமும் ஒருவரே தேவரும்