"ஏய்..அம்மணி!..அம்மணியோவ்..எங்க புள்ள போயிட்ட..அந்த பேப்பரைக் கொஞ்சம் கொண்டா சும்மா மேலோட்டம பாத்துபோட்டு கொடுக்குறேன்"
கயித்துக் கட்டிலில் உட்கார்ந்திருந்த சின்ராசு சத்தம் போட,
"ஏனுங்க மாமா இப்படி கத்தறீங்க..எங்கியும் போவுல இங்கதான் இருக்கிறேன்..செத்த நேரம் பேப்பர் பாக்க வுடமாட்டீங்களே"
என்று சலித்தபடி அருகாமையிலிருந்த ஓலைக் கொட்டாயிலிருந்து வெளியே வந்தாள் அம்மணி..
"ஆமா புள்ள ..நீ எழுத்துக்கூட்டி படிக்கறத்துக்குள்ள நாளைக்கு புது பேப்பரே வந்துடும்"
சொன்ன சின்ராசு சிரிக்க,
"நானா எழுத்துக் கூட்டி படிக்கிறேன்..எட்டாவது பாஸாயிருக்கேன் மாமா..சும்மால்ல"
"நீ படிச்ச படிப்புதான் எனக்கு தெரியுமே..காலைல இருந்து பேப்பர கையில வச்சிருக்கே இன்னும் ஒரு பக்கம் படிச்சிருக்க மாட்டே"
"நான் எத்தனை பக்கம் படிச்சா உங்களுக்கென்ன மாமா ..உங்களுக்கு இப்ப பேப்பர்தான வேணும்..இந்தாங்க மொதல்ல புடிங்க..சீக்கிரம் படிங்க..படிச்சுப்போட்டு எல்லாத்தையும் எனக்கு சொல்லோனும் ஆமா"
என்ற படி சின்ராசிடம் இன்றைய செய்தித்தாளை அம்மணி கொடுக்க அதை வாங்கிய சின்ராசு,பேப்பரை ஒரு பத்து நிமிடம் மேய்ந்துவிட்டு அம்மணியைப், பார்த்தான்..
"ஏனுங்க மாமா.ஆதுக்குள்ள படிச்சு முடிச்சுட்டீங்களா?"
"இரு புள்ள இப்பத்தான் மொத பக்கம் படிச்சிருக்கேன்"
"ஆமா மாமா நானும் அதப் படிச்சேன்..நம்ம முல்லை பெரியாறு அணைய கட்டினாரே அந்த வெளிநாட்டுக்காரு..அவர் பேரு என்னாது"
பென்னி குவிக்
"பென்னி குக்"
"ம்..அவருதான்..அவருக்கு ஒரு கோடி ரூவா செலவு பண்ணி மணிமண்டபம் கட்டுறாங்களாம்"
"ஆமா புள்ள தெம்பத்துக்காரங்க தண்ணி இல்லாம தவிச்சப்ப இவருதான் அங்க அணைய கட்டி தண்ணிய தேக்கி நம்மாளுக நாக்க நனைக்க வச்சாரு..அந்த நன்றிக்காகத்தான் இப்ப அவருக்கு ஒரு கோடி ரூவா செலவுல மணிமண்டபம் கட்டப்போறதா அம்மா அறிவிச்சிருக்காங்க புள்ள"
"அதுசரி மாமா..தெம்பக்கு மக்களோட பஞ்சத்த போக்குன மகராசந்தான் அவரு.
அவரை கண்டிப்பா நாம நெனச்சு பாக்கோணும். இல்லைனா திங்கிற சோறு செரிக்காது..அரசாங்க பணம் பத்தலைன்னு தன்னோட சொந்த பணத்த செலவு பண்ணி அணைய கட்டினாருன்னு சொல்றாங்க..எல்லாம் சரிதான் மாமா..அவருக்கு மணிமண்டபம் கட்டனும்தான் வேண்டானு சொல்லலை..
அதுக்காக ஒரு கோடி ரூபா அதுக்கு செலவு பண்ணனுமா..பத்துலடசத்துல ஒரு மண்டபத்த கட்டிப்போட்டு மீதி தொண்ணூரு லட்சத்தை புயலால பாதிக்க பட்டாங்களே கடலூரு மக்களும் விவசாயிங்களும் அவுங்க வாழ்வாதாரத்துக்கு கொடுக்கலாமே"
"அவுங்களுக்கும் சில கோடி ஒதுக்கி இருக்காங்க புள்ள"
"ஒதுக்கி இருக்காங்க மாமா இல்லைன்னு சொல்லலை.. தனக்கு ஒரு கோடி ரூபாயில மணிமண்டபம் கட்டுறதுக்கு ஒருவேளை பென்னி குக் உயிரோட இருந்திருந்தா அவரே ஒத்துக்க மாட்டாரு..அந்த பணத்த ஏழைகளுக்கு செலவு பண்ணுங்கன்னு சொல்லியிப்பாரு"
என்று வருத்தப்பட்ட அம்மணியைப் பார்த்த சின்ராசு..
"ஆமா அம்மணி நீ சொல்றது நாயமாத்தான் படுது..பத்துலட்சத்துல மண்டபம் கட்டிட்டு மீதிய இல்லாதவங்களுக்கு செலவு பண்லாம்..நாம பொலம்பி என்ன பண்றது"
"புயலால முந்திரி தோப்பு தென்னந்தோப்பு பலாதோப்புன்னு எல்லாம் அழிஞ்சு போயி நடு வீதியில உக்காந்து அழுதுட்டு இருக்காங்களே கடலூரு விவசாயிங்க அவுங்களுக்கு அரசாங்கம் என்ன மாமா பண்ணப்போவுது.."
"அதுக்கும் பணம் ஒதுக்கியிருக்காங்களாம்"
"என்ன பண்ணி என்ன மாமா ..அழிஞ்சதையெல்லாம் மீட்டெடுக்கணுன்னா எப்படியும் பத்து பதினஞ்சு வருசம் ஆகாதா?"
அழிந்த தென்னந்தோப்பு
"ஆமா புள்ள நெனச்சாலே பகீரிங்குது"
"அது வரைக்கும் அவுங்க என்ன பண்ணுவாங்க பாவம்..என்ன கேட்டா அரசாங்கம் மொதல்ல புயலால பாதிக்கப் பட்ட மக்களுக்கு கட்சி பாகுபாடில்லாம நிவாரணம் வழங்கிப்போட்டு அழிஞ்ச விவசாய நெலத்துல மறுபடியும் வெவசாயம் பண்ண ஏற்பாடு பண்ணிபோட்டுதான் வேற காரியமே பண்ணோனும்"
"ஆமா அம்மணி நீ சொல்றது சரிதான்"
அம்மணியின் முகத்திலிருந்த வருத்தம் சின்ராசின் முகத்துக்கும் தாவியது.
அடுத்த பக்கத்தைப் புரட்டிப் பார்த்த சின்ராசு,
"இங்க பாத்தியா புள்ள..நக்கீரன் கோபாலு மேல கேசு போட்டிருக்காங்களாம்"
"இத மொதல்லயே பண்ணிப்போட்டு போகவேண்டியதுதான மாமா
அதவுட்டுப்போட்டு பத்திரிக்கை ஆபிஸ போட்டு அடிச்சு நொறுக்குறாங்க."
நக்கீரன் அலுவலகம்
"அதான் அம்மணி அம்மாவைப் பத்தி தப்பா நக்கீரன்ல எழுதிட்டாங்களாம்"
"ஆயிரந்தான் இருக்கட்டும் மாமா..பிரதமரையே தப்பா எழுதுறாங்க..அது அவுங்களோட பத்திரிக்கை சுதந்திரம் மாமா. அப்படி தப்பா எழுதியிருந்தா சட்டப்படி கோர்ட்டுல கேசு போட வேண்டியத்துதான்..இப்படியா பண்றது"
"அப்ப தனி மனித தாக்குதல் சரின்னு சொல்றியா?''
"தனி மனிதனை தாக்குறது சரின்னு சொல்றீங்களா"
"என்னால ரெண்டையுமே சரின்னு சொல்லமுடியாது புள்ள"
"ந்க்கீரன் மேல அம்மாவுக்கு கோவம்..அம்மா மேல நக்கீரனுக்கு கோபம்..இது எதுல போயி முடியுமோ அவுங்களுகுள்ள ஆயிரம் பிரச்சன இருக்கு புள்ள நமக்கு அவ்வளவா தெரியாது..சரி அத விடு..இங்கப்பாரு தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அரசியல்ல குதிக்கிறாம்"
"குதிக்கட்டும் மாமா ..பாவம் அவரு மட்டும் என்ன பண்ணுவாரு இருவது வருமா சினிமா நடிச்சாச்சு,,வேற என்ன தொழில் மாமா தெரியும் ..பின்னாடி ரசிகர் மன்றம் இருக்குற தைரியம்..குதிக்கும்போது பாத்து குதிக்கட்டும் ஏன்னா நிறைய நடிகருங்க குதிக்கத் தெரியாம குதிச்சு அடிபட்டிருக்காங்க.."
"ஆமா புள்ள குதிச்சு போட்டு ஏறத்தெரியாம எத்தனை பேரு"
எம்.ஜி.ஆர்-என்.டி.ஆர்
"எல்லாம் அவுங்க அப்பா என்.டி.ராமாராவ் பண்ணின வேலை மாமா..அவரை பாத்துட்டு தெலுங்கு நடிகருங்க அரசியலுக்கு வர்றாங்க எம்.ஜி.ஆரைப் பாத்துட்டு தமிழ் நடிகருங்க முதலமைச்சர் ஆகணுமம்ன்னு நெனைக்கிறாங்க..
நடிகருங்க படற பாட்ட நெனச்சா எனக்கே சிரிப்பா இருக்குது..ங்..மாமா சினிமா நடிகருன்னு சொன்னவுடனே ஞாபகம் வந்துடுச்சி..ஏன் மாமா இந்த கொலவெறி நடிகருக்கும் பிரபல நடிகரின் மகளுக்கும் ஏதோ கிகிசுன்னு.."
"அதுதான் இப்ப நாட்டுக்கு முக்கியமா..ஏன் அம்மணி"
"சரி மாமா அதை வுடுங்க..மலையால டிவி யில கொலவெறி பாட்ட கேட்ட பாடகர் கொலவெறி ஆயிட்டாருன்னு நேத்து சொன்னீங்களே அதக் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க"
"அதுவா அம்மணி..மலயால டிவி யில ஒரு பாட்டு நிகழ்ச்சி..அதுக்கு பேமசான பாடகரு ஜெயச்சந்திரன் நடுவரா போயிருக்காரு..அதுல ஒருத்தன் தனுசோட கொலவெறி பாட்ட பாடியிருக்கான்..அதைக் கேட்ட இவருக்கு கோவம் வந்துடிச்சி..இந்தமாதிரி பாட்டு பாட்றதாயிருந்தா நான் வீட்டுக்கு போறன்னு சேரை விட்டு எந்திருச்சிட்டாரு"
"யாரு மாமா அவரு..தமிழ்ல் என்ன பாட்டு படியிருக்காரு"
"என்ன புள்ள இப்படி கேட்டுப்போட்ட ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு அப்புறம் காத்திருந்து காத்திருந்து இன்னும் ஏகப்பட்ட பாட்டு பாடியிருக்காரு..நம்ம ஏ.ஆர் ரகுமானுக்கு நெஞ்சில் ஜில் ஜில் காதல் ஜில்ஜில்ன்னு ஒரு பாட்டு பக்கமா பாடியிருக்காரு"
மலையாள கொலவெறி
"அப்படியா நல்ல பாட்டு பாடினவருக்கு கொலவெறி பாட்டக் கேட்டா கொலவெறிதான் வரும்..அவர் பண்ணினது சரிதான்..சங்கீத போட்டியில இந்த பாட்டப் பாடினா நமக்கே கோவம் வருது"
"பின்ன"
"நதிகளை இணைக்க வேணுமுன்னு அப்துல் கலாம் பேசினாராம் பாரு"
"யாரு வேணா பேசலாம் மாமா..கேட்டு கேட்டு சலிச்சு போச்சு..எல்லா நதிகளும் தானா இணைஞ்சாதா உண்டு"
"ஆமாம் அம்மணி..ஆஸ்திரேலியா கிரிக்கெட்டுல இந்திய அணி தோத்துப் போச்சாம்"
"இதுல என்ன மாமா ஆச்சரியம் ஜெயிச்சாத்தான ஆச்சரியம்."
"வேகப்பந்து வீச்சு சரியில்லாததால தோல்வின்னு பிரபல வீரர்கள் கருத்து"
"இத பிரபல வீரர்கள் சொன்னாத்தான் தெரியுமா நம்ம புள்ளைங்களப் பத்தி நமக்கு தெரியாதா என்ன"
"ஆமா புள்ள..சரி நாட்டு நடப்ப பேசிட்டே இருந்தா நேரம் போறதே தெரிய மாட்டேங்குது....அந்த ரேஷன் கார்டை எடுத்துட்டு வா போய் பதிவு பண்ணிட்டு வந்திடுறேன்..இல்லைன்னா இந்தா மாசம் அரிசி வாங்க முடியாது"
"ஆமா மாமா மொதல்ல அதப் பாருங்க..கொஞ்சம் இருங்க அட்டைய எடுத்துட்டு வரேன்'
என்று சொன்ன அம்மணி வீட்டிற்குள் நுழைந்தாள்..






