மத்தியானம் பன்னெண்டு மணி இருக்கும்.அந்த ரோட்டோர சிக்னல்ல ஒருத்தர் நின்னுகிட்டு இருந்தாரு .
அவருக்கு பின்னாடி ஏதோ கூட்டமா... மாநாட்டுக்கு போற மாதிரி மத்த வண்டிகளோட அணிவகுப்பு
அக்னி வெயில்கிறதுனால உச்சி வெயிலு மண்டையை பொளந்துகிட்டு இருந்துச்சி...
10 கிலோமீட்டருக்கு மேல ஒட்டிகிட்டு வந்ததால நாக்கெல்லாம் வறண்டு போயி யாராவது ஜில்லுன்னு ஐஸ் வாட்டர் கொடுத்தா அவருக்கு தேவலான்னு தோணுச்சி...
பொதுவாவே இந்த சிக்னல்ல நிக்குறதுங்கிறது கொஞ்சம் கடுப்படிக்கிற விஷயம் தான்.ஆனாலும் விதிகள மீற முடியாது தான்...அவரோட டூ-வீலர் பக்கத்துல ஒரு காரு நின்னுகிட்டு இருந்துச்சி..,
எண்ணெய் பாக்காத பரட்ட தலமுடி., வறண்டு போயி காஞ்சி போன உதடு..,ரொம்பவே அழுக்கடைஞ்ச சட்ட,பாவாடயோட வண்டிகளுக்கிடையில நின்னுக்கிட்டிருந்த அந்த பொண்ணுக்கு ஒரு பத்து இல்லேன்னா ஒரு பதினோரு வயசு இருக்கும்.
அந்த பொண்ணு கையில ஒரு துணிய வெச்சி அவருக்கு பக்கத்துல நின்ன கார தொடைக்க ஆரம்பிச்சா.., ஒரு முப்பது நொடிகளுக்குள்ளார காரோட எல்லா பக்கத்தையும் தொடச்சிட்டு அந்த கார் கதவ தட்டினா..,
வண்டிய ஒட்டிகிட்டு இருந்தவ, கார் கதவ தொறக்காமலே என்னவேணும்னு கையை காட்டி சைகை பண்ணி கேட்டான்.
அந்த பொண்ணு ரெண்டு கையையும் விரிச்சி,வாயையும்,வயிறையும் காட்டி காசு வேணும்னு சொல்லிச்சி.., அதுக்கு அவன் இல்ல போ...அப்பிடிங்கிற மாதிரி சைகை செஞ்சான்...
"கார்க்காரனோட இந்த செயல் அவருக்கு கோவத்த கிளப்பிச்சி"
"ச்சே... என்ன மனுஷங்க இவங்க..,சும்மா பிச்சை கேட்டாலும் பரவாயில்ல, அழுக்கடஞ்சி போயி நின்ன கார தொடச்சதுக்காவது ஒரு ரெண்டு ரூபாய் குடுக்கலாம்ல இப்படியும் நெஞ்சில ஈரமில்லாம இருக்காங்களே?"ன்னு அவருக்குள்ள ஒரு ஆற்றாம...
காருக்குள்ள இருந்தவ எவ்ளோ சைகை செஞ்சாலும் அந்த பொண்ணு அந்த இடத்த விட்டு போன மாதிரி தெரியல...திரும்ப திரும்ப காரோட கதவ தட்டி ரெண்டு கையையும்,விரிச்சி, வாயையும்,வயிறையும் திரும்ப திரும்ப காட்டிகாட்டி காசு கேட்டிச்சி...
இத பார்த்து காருக்குள் இருந்தவன் முகம் கோபத்துல மாறி அந்த பொண்ண பார்த்து மொறச்சி பாத்துக்கிட்டே தூரப்போன்னு... கண்ணாடி வழியே சைகை செஞ்சான்.
நான்,உடனே ஏம்மா..,வேணும்னா நான் காசு தர்ற... வாங்கிட்டு போ,அவன்தான் கார் கதவையே தொறக்க மாட்டேன்கிறா... அவன்கிட்ட போயி திரும்ப திரும்ப கதவ தட்டிக்கிட்டு நிக்குறியே..?ன்னு அவரு கேட்டாரு...
அந்த பொண்ணு சிரிச்சிக்கிட்டே.., அந்த நேரத்துல ஒரு வேலையை செஞ்சா..?
ஆமாம்,அவரு மொதக்கொண்டு யாருமே எதிர்பார்க்காத நேரத்துல அந்தப் பொண்ணு கார தொடைச்சி கையில வெச்சிருந்த அந்த துணிய காரோட முன் கண்ணாடியிலே வேகமா தட்டி விட்டிட்டு வேகமா அந்த இடத்த விட்டு நகர்ந்து போயிட்டா..!காரோட முன் கண்ணாடி முழுக்க அந்த துணியில் இருந்த அழுக்கு பரவி போச்சி..
கடுப்பான அந்த கார்க்காரன் உடனே கார விட்டு இறங்க முடியல, ஏன்னா அந்த நேரம் பார்த்து கிரீன் சிக்னல் விழ கார சிக்னல தாண்டி ஒரு ஓரமா நிப்பாட்டிட்டு முன் கண்ணாடியில பரவியிருந்த அழுக்கை ஒரு துணிய கொண்டு தொடைக்க ஆரம்பிச்சாரு...ஏதோ முனங்கிகிட்டே...
டூ-வீலார்ல வந்த அவரு அந்த பொண்ண எங்க நிக்குறான்னு சுத்தும், முத்தும் பாத்தாரு..
அந்த பொண்ணு சிக்னலுக்கு மறு பக்கத்துல ஒரு கார தொடச்சிகிட்டு நின்னுச்சி..அவரு அந்த பொண்ண பார்த்து சைகை பண்ணி சிரிச்சாரு, பதிலுக்கு அந்த பொண்ணும் முகம் முழுக்க பல்லு தெரிய சிரிச்சது..அதுல எந்த சலனமும் இல்ல.